Ad

சனி, 26 செப்டம்பர், 2020

செத்துப் பிழைக்கும் கிம்... உயிர்த்தெழும் அணு ஆயுதங்கள்! - வட கொரியாவில் என்ன நடக்கிறது?

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மர்மமான மனிதராகப் பார்க்கப்படுபவர். அதனாலேயே அவர் பற்றிப் பல மர்மமான செய்திகள் பரப்பப்படுகின்றன. அதிபர் கிம் இறந்துவிட்டார் என்பதுதான் கொரோனா காலத்தில் வட கொரியாவைப் பற்றிப் பேசப்பட்ட முதன்மை விஷயம். உடல்நிலை சரியில்லாமல் தீவிர சிகிச்சை எடுத்துவந்த கிம், உலக ஊடகங்களுக்குக் காண்பிக்கப்படாமல் இருந்தார். ஆதலால், அவர் இறந்திருக்க வாய்ப்புண்டு என்ற அனுமானங்கள் கிளம்பின. ஆனால், சில நாட்களிலேயே விழாக்களில் தரிசனம் தந்து வதந்திகளுக்கு முடிவு கட்டினார். கடந்த சில மாதங்களாக இதுவே வழக்கமாக இருந்தது. மேலும், வடகொரியாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் உண்ண உணவில்லாமல் மக்கள் அவதியுறுகிறார்கள், பூச்சிகளை உண்ண மக்களிடம் கட்டளையிட்டுள்ளார் கிம் போன்ற தகவல்கள் கூறப்பட்டன. பன்னாட்டு ஊடகங்களுக்கு வட கொரியாவில் தடை இருப்பதால் செய்திகளைத் துல்லியமாக அறிவதில் சிக்கல் உள்ளது. கடந்த மாதங்களில் வட கொரியாவில் நடந்த குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வுகளை ஒட்டி அந்நாட்டின் இன்றைய நிலையைக் கணக்கிட முயலலாம்.

கிம் ஜாங் உன்

கிம் பற்றிய பல்வேறு கற்பனை செய்திகள் பரவ அவர் சகோதரியின் பதவி நியமனம் முக்கிய காரணம். கடந்த மூன்று தலைமுறையாக கிம் குடும்பம் மட்டுமே வடகொரியாவை ஆள்கிறது. ஒரே குடும்பத்திற்குள்ளே யார் அதிகாரம் செலுத்துவது என்ற போட்டியும் பரவலாக இருக்கும். கிம் தனது பதவிக்குப் போட்டியாக இருந்த அவரது சகோதரரைக் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ரசாயன திரவம் வீசி துடிதுடிக்கக் கொலை செய்தார் என்பது அவர் மீதான பயங்கரமான குற்றச்சாட்டு. அப்படியிருக்கையில், இன்று தனது இளைய சகோதரி 'கிம் யோ ஜோங்கிற்கு' (Kim yo Jong) பல முக்கிய பொறுப்புகளைக் கொடுத்துள்ளார். பொறுப்பு என்றால் வெறும் பெயருக்கான பதவியல்லாமல், தென் கொரியா மற்றும் அமெரிக்கா வெளியுறவு விவகாரங்களைக் கையாளவும், குறிப்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடனான கடிதப்போக்குவரத்தின் பொறுப்பாளராகவும் பதவியேற்றார் யோங் ஜோ. வட கொரியாவிற்கு தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடனான உறவை அறிந்தவர்களுக்கு இந்தப் பதவியின் தேர்வு அதிர்ச்சியைக் கொடுத்தது.

பதவி மட்டுமல்லாது கட்சியின் தலைமைகளிலும் முன்னிலைப்படுத்தப்பட்டார் யோ ஜோங். ஆளும் தொழிலாளர் கட்சியின் அமைப்பு மற்றும் வழிகாட்டு துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும், முக்கிய முடிவுகள் எட்டப்படும் பொலிட்பியூரோவின் கொள்கை பரப்புக் குழுவிற்கும் தேர்வானார். இடையில் பல ஆண்டுகள் கிடப்பில் போட்டாலும் ஆளும் தொழிலாளர் கட்சியின் தேசிய காங்கிரஸ் கூட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது நடைமுறை. இறுதியாக, 2016-ம் ஆண்டு நடந்த கூட்டத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி தேசிய காங்கிரஸ் கூட்டத்தை அறிவித்துள்ளார் கிம். இதில் தனது சகோதரிக்குப் பெருவாரியான அதிகார பரிமாற்றத்தையும், கட்சியில் பிற முக்கிய பதவிகளுக்குக் களையெடுப்பும் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் தங்கையின் அதிகாரம் தொடங்கிப் பகிர்ந்தளிக்கப்படும் பதவிகள் வரை 'நியூ நார்மலை' சந்திக்கிறது வடகொரியா.

அதிபர் கிம் ஜாங் உன்

அதிபர் கிம்மோ அல்லது வட கொரிய அரசியல் வட்டாரமோ திடீரென்று இப்படி மாற காரணம் என்ன என்ற கேள்வி உலக ஊடகங்களிடையே எழுந்தது. கிம் உடல்நிலை காரணமாக அப்போது மருத்துவ பரிசோதனை வேறு எடுத்து வந்ததால் சந்தேகம் அதிகமானது. மேற்கண்ட சில நிகழ்வுகளும் கிம்மின் வழக்கமான தலைமறைவும் அவர் இறந்துவிட்டார் என்று சொல்லக் காரணமாகின. தென்கொரிய வெளியுறவு மற்றும் உளவுத்துறையினர் கிம் இறந்துவிட்டார் என்று சந்தேகத்தைக் கிளப்புவதும், கிம் உயிரோடு காட்சியளிப்பதும் இயல்பு. இம்முறை கற்பனைகள் வலுப்பட வட கொரியாவில் ஏற்பட்ட இயல்பை மீறிய நிலையும் காரணம்.

கொரோனா பரவலை அடுத்து ஜனவரியிலேயே எல்லையை மூடியது வடகொரியா. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தத்தளித்தவர்களுக்கு நிலைமை மேலும் மோசமானது. தென்கொரியா, அமெரிக்கா என முரண்கொண்ட நாடுகளிடம் சமீப காலங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் பொருளாதாரத் தடையிலிருந்து விடுதலை பெறவில்லை. "நாடு அனைத்து விதங்களிலும் இதுவரை காணாத தவிர்க்கமுடியாத சவால்களைச் சந்தித்து வருகிறது. நமது நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் கடினமாகத் தாமதமாகிறது'' என்று ஒப்புக்கொண்டார் கிம். அடுத்தாண்டு நடக்கும் காங்கிரஸ் கூட்டத்தில் புதிய ஐந்தாண்டு பொருளாதார திட்டத்தை அறிவிக்க உள்ளார்.

வட கொரியா

பொருளாதாரத் தடை, கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்தாண்டு இயற்கை பேரிடரின் பெரும் அழிவில் வீழ்ந்தது வட கொரியா. கடும் மழை, புயற்காற்று, வெள்ளக்காடான விளைநிலங்கள் என நாடே சீரழிந்தது. மேற்கு சீனாவிலிருந்து வீசிய புயலால் வட கொரியாவின் கடற்கரை பகுதியான ஹாம்ங்யாங் பலத்த சேதமடைந்தது. ஏற்கனவே மருத்துவ நெருக்கடியில் தவித்தவர்களுக்கு இயற்கை நெருக்கடியும் பேரிடியானது. கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. உலக உணவு கழக தகவலின்படி பெரும்பான்மையான வடகொரியர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவ்வளவு அழிவுகளுக்கு மத்தியிலும் மக்களை அதிபர் பார்வையிடாததால் அவர் பற்றிய வழக்கமான செய்திகள் பரவின. ஆனால், சில நாட்களிலேயே பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார் கிம். தலைநகர் ப்யோங்யாங்கிலிருந்து பன்னிரெண்டாயிரம் கட்சி தன்னார்வலர்களை மீட்புப் பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.

நோய் மற்றும் இயற்கை அழிவு எனத் துயரில் இருக்கும் வடகொரியா கடந்த இருபது ஆண்டுகள் காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதனைக் கிட்டத்தட்ட உலகம் முழுவதுமான பெருந்தொற்று கால விளைவின் பிரதிபலிப்பாகக் கொள்ளலாம். வல்லாதிக்க நாடுகள் முதற்கொண்டு எல்லா நாடுகளும் கைவிட்ட நிலையில் வடகொரியா 90களில் கண்ட புறக்கணிப்பை மீண்டும் சந்திக்கிறது. இன்றுபோல் அன்றும் இயற்கை சீர்கேடும், பஞ்சமும் வடகொரியாவை ஆட்டிப்படைத்தது. வட கொரியா அணு ஆயுத சோதனையில் இறங்கியதற்கு அன்றைய நிராதரவு நிலை முக்கிய காரணம். வரலாறு திரும்பும் விதமாக இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையில் உள்ளது.

வட கொரியா

வட கொரியா இந்த மோசமான நிலையிலும் அணு ஆயுத சோதனையில் மும்முரமாக ஈடுபடுவதாக உலக ஊடகங்கள் பரபரக்க ஆரம்பித்துள்ளன. வரும் அக்டோபர் 10ம் தேதி வடகொரியத் தலைநகரில் அதிவேக ஏவுகணை அனுப்புதல் நிகழ்வு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதே நாளில்தான் வட மற்றும் தென்கொரியாக்களுக்கு இடையேயான போர் முடிவுற்றது. எனவே, கொரிய அரசியல் புதிய தூண்டுதலுக்குத் தயாராகிறது. ஏவுகணை சோதனைக்குப் பின்னணியில் அணு ஆயுத சோதனை இருக்கும் எனச் சந்தேகிக்கும் தென்கொரியா மற்றும் அமெரிக்கா Hwasong -15 Missle உட்பட்ட புதிய ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறுகின்றன.

Also Read: `எதிர்பாராத சம்பவம்... வெரி ஸாரி!’ - தென் கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் உன்

கிம் ஆட்சிப்பொறுப்பேற்ற ஆரம்ப நாட்களில் தனது தாத்தாவும் வடகொரியாவின் முதல் ப்ரீமியருமான கிம் இல் சுங்கின் நூற்றாண்டை முன்னிட்டு 2012ம் ஆண்டு ஏவுகணை சோதனையை நடத்தினார். இதை அணு ஆயுத சோதனை என்று கூறி வடகொரியா மீது நிர்வாகத் தடை விதித்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா. ட்ரம்ப் ஆட்சியில் கிம்மின் வெடிகுண்டு மிரட்டல்கள் கடுமையாகவே இருந்தது. 12 லட்சம் ராணுவ வீரர்களைக் கொண்ட வடகொரியாவின் செயல்பாடுகள் 2017க்கு பிறகு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே அரசியல் நிபுணர்கள் கருதினார்கள். அமெரிக்காவும் ஈராக், ஆப்கனில் குவித்த ராணுவத்தை விட வடகொரியாவைச் சமாளிக்க தென்கொரியாவில் அதிக படைவீரர்களைக் குவித்தது. கிம்-ட்ரம்ப் இடையே சிங்கப்பூர், வியட்நாம், வடகொரியா என மூன்று இடங்களில் பேச்சுவார்த்தை நடந்தும் தெளிவான எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

கிம் ஜாங் உன், ட்ரம்ப்

"போர் நிறுத்தம் குறித்தும் அணு ஆயுத விளைவு குறித்தும் எங்களுக்கு எந்த கவலையுமில்லை'' என்று கிம் தங்களிடம் கூறியதாக எழுதினார் ட்ரம்ப்பின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன். கிம் இறந்துவிட்டார் என்பது தொடங்கி வடகொரிய எதிர்ப்பு அரசியலைச் செய்து வரும் தென்கொரிய அதிபர் மூஞ்சே, சமாதானத்திற்கு தாங்கள் எதையும் தியாகம் செய்யத் தயார் என்று சமீபத்திய ஐநா காணொளி கூட்டத்தில் தெரிவித்தார். தொடரும் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று முரணாகவும் குழப்பமாகவும் இருப்பதே வடகொரிய அரசியலாகவும், வடகொரியாவைப் பற்றிய சித்திரிப்பாகவும் உள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/international/controversies-surrounding-north-korea-and-kim-jong-un

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக