கோவை கணபதி, மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கரண் குமார் (30). இவர் கட்டப்பஞ்சாயத்து வழிப்பறி, கொலை, கொள்ளை அடிதடி உட்பட பல்வேறு விதமான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது காந்திபுரம், ரத்தினபுரி, பீளமேடு, சரவணம்பட்டி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி கொலை வழக்குகள் உள்ளன.
Also Read: ஆளே இல்லாமல் அதிரடி கொலை!
இந்த நிலையில் சிறையில் இருந்த கரண் குமார், சில காலம் முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த கரண்குமார் வருமானம் இல்லாமல் சிரமப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் கரண்குமார் நேற்று நள்ளிரவு மணியக்காரன் பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் அந்த வழியாக சென்றவர்களிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்தப்பகுதியில் ஆட்டோவில் 3 பேர் வந்துள்ளனர். ஆட்டோவை வழிமறித்த கரண் குமார், அவர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளார்.
இதில், ஆட்டோவில் பயணம் செய்த 3 பேரும் ஆத்திரமடைந்து, கரண்குமாரை மீன்வெட்டும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரெளடி கரண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை செய்த முத்து கணேஷ், ரவி சங்கர், சீனிவாசன் ஆகிய மூன்று பேர், அவர்களாகவே சரவணம்பட்டி போலீஸில் ஆஜராகிவிட்டனர். இந்த மூன்று பேரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இவர்கள், கரண்குமார் குமாரால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
எனவே, முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு கொலை செய்தார்களா... என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த கொலையால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/coimbatore-rowdy-murder-in-mid-night-3-persons-surrendered
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக