Ad

புதன், 14 அக்டோபர், 2020

வேலூர்: `வீடு முழுக்க கட்டுக்கட்டாகப் பணம், தங்க நகைகள்!’ -மலைக்க வைத்த லஞ்ச அதிகாரி

வேலூர் காட்பாடியில் உள்ள மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், பன்னீர்செல்வம் (51) என்பவர் இணை தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவர், பல்வேறு அனுமதிகளை வழங்க லஞ்சம் பெறுவதாகப் புகார்கள் குவிந்தது. இதையடுத்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், பன்னீர்செல்வத்தை ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினர். லஞ்சம் வாங்குவதற்காகவே, காட்பாடி காந்தி நகரிலுள்ள முனிசிபல் காலனியில் பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து பன்னீர்செல்வம் தனி அலுவலகமாக நடத்திவந்ததையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டுபிடித்தனர்.

லஞ்சம் வாங்க தனி அலுவலகம் - பன்னீர்செல்வம்

நேற்று முன்தினம் மாலை பன்னீர்செல்வம் அந்த தனி அலுவலகத்துக்குள் சென்றபோது, சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் வராத ரூ.33.73 லட்சம் ரொக்கப்பணத்தைக் கைப்பற்றினர். மேலும், முறைகேடாகப் பணம் பெற்றிருப்பதற்கான 11 ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சுற்றுச்சூழல் அதிகாரி பன்னீர்செல்வம்மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Also Read: வேலூர்: `லஞ்சம் வாங்கத் தனி அலுவலகம்!’ - சுற்றுச்சூழல் அதிகாரி சிக்கியது எப்படி?

தொடர்ந்து, ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள பன்னீர்செல்வத்தின் சொந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையைத் தொடர்ந்தனர். இன்று விடியற்காலை வரை நீடித்த சோதனையில், லஞ்ச ஒழிப்புத்துறையினரே அதிரும் அளவுக்கு கோடிக்கணக்கிலான ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கியது. மொத்தம் மூன்று கோடியே இருபத்தைந்து லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ரொக்கப்பணமும், மூன்றரை கிலோ தங்க நகைகளும், ஆறரை கிலோ வெள்ளி நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

தவிர, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துப் பத்திரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். அந்தச் சொத்துகள் முறைகேடாக வாங்கப்பட்டிருக்கிறதா? என்பது குறித்தும் தணிக்கைச் செய்யப்பட்டுவருகிறது.

இதுபற்றி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் கேட்டபோது, ``மலைக்க வைக்கும் அளவுக்கு பன்னீர்செல்வத்திடமிருந்து பணம், நகைகளைக் கைப்பற்றியுள்ளோம். அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களையும் முறைப்படி வேலூர் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கவிருக்கிறோம்’’ என்றனர்.

ஒரே அதிகாரியிடம் இவ்வளவு பணமும், நகைகளும் சிக்கியிருக்கும் சம்பவம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/325-crore-cash-35-kg-gold-seized-seized-from-vellore-government-official

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக