Ad

சனி, 26 செப்டம்பர், 2020

புதுக்கோட்டை: டிஎஸ்பி பெயரில் போலி முகநூல் கணக்கு! - பணம் பறிக்க முயன்ற கும்பலுக்கு வலைவீச்சு

புதுக்கோட்டை நகர் டிஎஸ்பியாக இருப்பவர் செந்தில்குமார். இவர் ஏற்கெனவே முசிறி, பொன்னமராவதி பகுதிகளில் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்துள்ளார். செந்தில்குமார் என்ற பெயரில் முக நூலில் கணக்கு வைத்திருக்கும் இவர், முகநூலில் 900 பேரை நண்பர்களாகக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், டிஎஸ்பி பெயரும், புகைப்படமும் கொண்ட ஒரு முகநூல் கணக்கிலிருந்து பலருக்கும் நண்பராக்கிக் கொள்வதற்கான அழைப்பு வந்துள்ளது.

அதனை ஏற்றுக்கொண்ட பலருக்கும் அடுத்த சில நிமிடங்களிலேயே மெஜேஞ்சரில் ஒரு மெசேஜ் வந்து விழுந்துள்ளது. அதில், ``தனக்கு அவசரமாக ரூ. 30 ஆயிரம் தேவைப்படுவதாகவும், பணத்தை உடனே 8260989683 என்ற எண்ணுடைய கூகுள் பே கணக்கில் செலுத்துங்கள்" என்று அனுப்பப்பட்டிருக்கிறது.

டிஎஸ்பி பெயரில் போலி முகநூல் கணக்கு

இதனைப் பார்த்த நண்பர்கள் சிலர் டிஎஸ்பியை நேரடியாக போனில் தொடர்பு கொண்டு இதுபற்றிக் கூறி விளக்கம் கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த டிஎஸ்பி, தான் அப்படி ஏதும் மெசேஜ் அனுப்பவில்லை என்று கூறியுள்ளார்.

அப்போது தான், மர்ம நபர்கள் சிலர் டிஎஸ்பியின் பெயரையும்,புகைப்படத்தையும் பயன்படுத்தி போலியாக முகநூல் கணக்கு துவங்கியதும், பலரிடமும் பணம் பறிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. உடனே டிஎஸ்பி, ``தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி போலி முகநூல் கணக்கு துவங்கி பணம் பறிக்க முயற்சி செய்கின்றனர்.

அதனை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று தன்னுடைய முகநூல் கணக்கில் டிஎஸ்பி ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதோடு, இதுபற்றி சைபர் கிரைம் போலீஸாரிடமும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, உடனே அந்த போலி முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணையில், "ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இந்தச்செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து திருச்சி சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் பெயரை வைத்து மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, "போலீஸ் அதிகாரியின் கணக்கிலிருந்து பணம் கேட்டால், அவர்கள் மீதான நம்பிக்கையில் எந்தவித கேள்வியுமின்றி உடனே பணத்தை அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்துத் தான் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் மூலம் வரும் குற்றங்கள், மோசடிகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் நட்புகளை ஏற்பது, பணம் அனுப்புவது, புகைப்படம், வீடியோக்களை அனுப்புவதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/fake-facebook-account-in-the-name-of-pudukottai-dsp-case-filed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக