நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கை தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதில், `அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை, எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ என சூர்யா குறிப்பிட்டிருந்தார்.
இதைக் குறிப்பிட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்குக் கடிதம் எழுதியிருந்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதேநேரம், சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு உள்ளிட்ட 6 நீதிபதிகள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
Also Read: நீட் தேர்வு: நடிகர் சூர்யா அறிக்கை.. `நீதிமன்ற அவமதிப்பு’ என தலைமை நீதிபதிக்கு கடிதம்
அதேபோல், சூர்யாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விவாதம் எழுந்தது. சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்தின் கோரிக்கையை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு நிராகரித்தது. நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்தது.
இதுதொடர்பான விவாதத்தின்போது, பொது விவகாரங்கள் குறித்து விமர்சிக்கும் போது கவனம் தேவை என்றும் நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் நடிகர் சூர்யாவுக்கு அறிவுரை கூறியிருக்கிறது.
source https://www.vikatan.com/social-affairs/judiciary/madras-hc-cj-bench-refuses-to-take-contempt-of-court-proceeding-against-actor-suriya
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக