Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

`கொத்தடிமைகளா தூய்மைப் பணியாளர்கள்?’ - சர்ச்சையில் கோத்தகிரி பேரூராட்சி

கொரோனா பெயரைச் சொல்லி அரசு நிர்வாகங்கள், தூய்மைப் பணியாளர்ளை அளவுக்கு அதிகமாகச் சுரண்டி, விடுமுறை எதுவும் அளிக்காமல் இரவு பகலாக உழைப்பை உறிஞ்சிவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தூய்மைப் பணியாளர்கள்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தொடங்குவதற்கு முன்பே, `பாதுகாப்பு நடவடிக்கைகள்’ என்ற பெயரில் தூய்மைப் பணிகளுக்காகக் களம் இறக்கிவிடப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் வேலைப்பளு‌ இன்னும் குறைந்தபாடில்லை.

கொரோனாவுக்கு எதிராகக் களமாடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்றோரை மிகுந்த மதிப்புடன் நடத்துவதாகத் தோற்றம் இருக்கிறது. ஆனால், அளவுக்கு அதிகமான பணிச்சுமையால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதாக அவர்களே தெரிவிக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்

நீலகிரியைப் பொறுத்தவரை தூய்மைப் பணியாளர்கள் மழை, பனி எனக் கடுமையான குளிரில் மிகுந்த சிரமங்களோடு பணியாற்ற வேண்டியிருக்கிறது. மேலும், ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, `அறிவிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுவதில்லை. அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படுவதில்லை. விடுமுறை வழங்கப்படுவதில்லை. வாகன வசதிகள் ஏற்பாடு செய்துதரப்படுவதில்லை’ எனப் பல குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.

ஊட்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்களை குப்பை லாரிகளில் ஏற்றிச் செல்வதைப்போலவே தற்போது கோத்தகிரி பேரூராட்சியும் இத்தகைய மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. கோத்தகிரி பேரூராட்சியின் இந்தச் செயல், சமூக ஆர்வலர்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.

தூய்மைப் பணியாளர்கள்

கோத்தகிரி பேரூராட்சியின் மோசமான செயல் குறித்து நம்மிடம் பேசிய மக்கள் சட்ட மைய நிறுவனர் வழக்கறிஞர் விஜயன், ``தூய்மைப் பணியாளர்களை, இவர்கள் அழைத்துச் சென்ற வீடியோவைப் பார்த்து நெஞ்சம் பதைக்கிறது. குப்பைத் தொட்டிகளை ஏற்றும் வாகனத்தில், வெட்டவெளியில், இரும்பு ஆங்கிளைக் கையில் பிடித்தபடி கொத்தடிமைகளைப்போல் வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனர். கொரோனா பெயரைச் சொல்லி அரசு நிர்வாகங்கள், தூய்மைப் பணியாளர்ளை அளவுக்கு அதிகமாகச் சுரண்டி, விடுமுறை எதுவும் அளிக்காமல் இரவு பகலாக உழைப்பை உறிஞ்சிவருகின்றன.

Also Read: `பொது முடக்கத்திலும் முடங்காத சேவை!’ - தூய்மைப் பணியாளர்களின் துயர் துடைக்குமா அரசு?

அவர்கள் எதிர்பார்ப்பது பொன்னாடையையோ, பாத பூஜையையோ அல்ல. தங்களையும் சக மனிதர்களாக மதித்தால் போதும் என்பதைத்தான். எப்போது இவற்றை நிர்வாகங்கள் உணரப்போகின்றனவோ" என வேதனை தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்கள்

இது குறித்து கோத்தகிரி பேரூராட்சி தரப்பில் கேட்டபோது,``கொரோனா காரணமாக பல இடங்களில் தூய்மைப் பணியில் ஊழியர்களை பணிக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. வாகனங்கள் வெளியில் சென்றிருக்கும் சமயங்களில் இப்படி அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது" என்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/kotagiri-town-panchayat-controversy-over-treating-sanitary-workers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக