கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் சோ ஏரி பகுதியில் சீன ராணுவ வீரர்கள் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு ஊடுருவ முயன்றனர். ஆனால், சீன ராணுவத்தின் இந்த முயற்சியை முன்கூட்டியே கணித்த இந்திய ராணுவம், அவர்களின் ஊடுருவல் முயற்சியை முறியடித்து, ஏரியைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து இரண்டு நாள்களுக்குள் அப்பகுதியில் சீன ராணுவம் இரண்டாவது முறையாக அத்துமீறிய நிலையில், அந்த முயற்சியையும் இந்திய ராணுவம் முறியடித்தது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து கிழக்கு லடாக்கின் பாங்கோங் சோ ஏரி ஊடுவல் முயற்சி போன்றவற்றால் இருநாட்டு எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்தது. இந்தநிலையில், லடாக்கில் ஆய்வு மேற்கொண்ட இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே, எல்லைப்பகுதியில் பதற்றம் நீடிப்பதாகவும், எந்தவகையான சூழலையும் எதிர்க்கொள்ள ராணுவம் தயார்நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். அதேநேரம், இந்தப் பதற்றம் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் குறைக்கப்படக் கூடியதுதான் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Also Read: `15,000 அடி உயரத்தில் டென்ட்; விதிமீறிய சீனா!- கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் தொடக்கப்புள்ளி?
இந்தசூழலில் ரஷ்யாவில் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக மாநாட்டில் கலந்துகொள்ள மாஸ்கோ சென்றிருந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் வே பெங்ஃஹே சந்தித்துப் பேசினார். மாஸ்கோவின் மெட்ரோபோல் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின் எல்லையில் பதற்றம் நீடித்த நிலையில், முதல்முறையாக இருநாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் நேரில் சந்தித்துப் பேசினர். சுமார் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், எல்லைப் பிரச்னைகள் தொடர்பாக விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.
கல்வான் பள்ளத்தாக்கு, பாங்சோங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சம்பவங்கள், எல்லைகளில் சீனப் படைகள் குவிப்பு உள்ளிட்டவைகள் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் ஆலோசனை நடத்தியதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தைக் குவிக்கக் கூடாது என்றும் இந்திய இறையாண்மை உறுதியுடன் பாதுகாக்கப்படும் எனவும் சீன பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் நேரடியாகவே கண்டிப்புக் காட்டியிருக்கிறார் ராஜ்நாத் சிங். அதேபோல், எல்லையில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து இருதரப்பும் ராஜாங்கரீதியாகவும், ராணுவரீதியாகவும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.
Also Read: Pangong Tso: `பாங்கோங் சோ ஏரி இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?' - சீன ஊடுருவல் முறியடிக்கப்பட்ட பின்னணி!
தற்போதைய சூழலைப் பொறுப்புடன் கையாள வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், சூழ்நிலையை மோசமாக்கும் வகையில் இருதரப்பும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பெரிய அளவில் படைகளைக் குவித்து வரும் சீனாவின் தன்னிச்சையான செயல்பட்டால், எல்லையில் பதற்றம் நிலவி வருவதாக சந்திப்பின்போது சீன பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், எல்லை பாதுகாப்பில் இந்திய ராணுவம் பொறுப்பான நடவடிக்கைகளையே எடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியிருப்பதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
எல்லையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு இந்தியாவே காரணம் என பழைய பல்லவியையே சீனா பாடத் தொடங்கிய நிலையில், இந்தியா தரப்பில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்களது எல்லைப் பகுதியில் ஒரு இன்ச் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும், சீனாவின் எல்லைகளைப் பாதுகாக்க ராணுவம் உரிய நடவடிக்கையை எடுக்கும் எனவும் சீனா தரப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/india/rajnath-singh-emphasised-that-the-actions-of-the-chinese-troops-with-china-defense-minister-in-moscow-meet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக