கிட்டத்தட்ட 10 அடி உயரம், முகாமில் உள்ள ஆண் யானைகளைவிட, அதிக உயரம் எப்படி பார்த்தாலும் பிரமாண்டமாக தெரியும் கல்பனா சாவ்லா யானையைப் பார்த்தால், எவராக இருந்தாலும் பயப்படதான் செய்வார். ஆனால், உருவத்தின் உயரத்தை விட, உள்ளத்தின் உயரம் அதிகமாக இருப்பதால், கல்பனா மிகவும் சாதுவாகவும் அமைதியாக தான் இருப்பாள் என்று அதனும் நெருங்கிப் பழகுபவர்கள் கூறுவார்கள். அதுதான் இப்போது வலியையும் கொடுத்திருக்கிறது.
டாப்ஸ்லிப் அருகே, யானைகள் முகாமில் 29 கும்கி மற்றும் பயற்சி யானைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் 50 வயது மதிக்கத்தக்க கல்பனா சாவ்லா. சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கல்பனா, பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read: அவுட்டுக்காய் ஏற்படுத்திய காயம்! - தமிழக, கேரள எல்லையில் சுற்றிவந்த மக்னா யானை உயிரிழந்தது
யானைகள் ஆராய்ச்சியாளர் ஶ்ரீதர், “2004-ம் ஆண்டு சேத்துமடை அருகே பயிர்களையும், தோப்புகளையும் ஒரு பெண் யானை தொடர்ந்து சேதப்படுத்துவதாக அந்தப் பகுதி மக்கள் புகார் கூறினர். பிடித்தபோது, மயக்க நிலை சற்று தெளிந்து லாரியில் இருந்த தடுப்புகளை உடைத்துவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளது. சுமார் 9.9 அடி உயரம். இந்தியாவில் உயரமான பெண் யானை இதுதான். இதன் உயரத்தில் வேறு பெண் யானைகள் பதிவானதாக தெரியவில்லை. முகாமில் உள்ள ஆண் யானைகள் கூட, கல்பனாவை விட உயரம் குறைவுதான்.
மற்ற யானைகள் ஏதாவது ஒரு சூழ்நிலையில், முரட்டுத்தனத்தை காட்டிவிடும். மதம்பிடித்த காலகட்டத்தில், ஆண் யானைகளிடம் பாகன்களே நெருங்க முடியாது. சில தருணங்களில், பெண் யானைகளும் அதிகமாக சேட்டை செய்யும். ஆனால், கல்பனா அப்படி இல்லை. அதை நம்பி பழகலாம். எங்கே வேண்டுமானால் செல்லலாம்.
முகாமில் ஆண் யானைகள் தான் கட்டிப் போட்டிருப்பார்கள். பெண் யானைகளை குறிப்பிட்ட சில நேரங்களில் தான் கட்டிப் போடுவார்கள். நான் பார்த்தவரை கல்பனாவை பெரும்பாலும் கட்டிப் போட்டது கிடையாது. அது எப்போதும் காடுகளில் உணவு மேய்ந்து கொண்டிருக்கும். மேய்ச்சலுக்கு செல்லும்போது, கல்பனாவின் பாகன் பழனிச்சாமியுடன் நானும் காட்டுக்கு செல்வேன். இந்த யானையா அவ்வளவு பிரச்னை செய்தது?, அப்படி எல்லாம் இருக்காது என்ற அளவுக்கு அவ்வளவு சாதுவாக இருக்கும். இதுவரை அதனால் எந்தப் பிரச்னையும் செய்தது இல்லை.
மற்றப் பகுதிகளில் யானைகளுக்கு பயிற்சியை தொடங்கும்போது, முதலில் அதற்கு உணவு கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். சுமார் 10 நாள்களுக்குப் பிறகுதான் அதற்கு உணவு கொடுப்பார்கள். ஆனால், முதுமலை, ஆனைமலை யானை முகாம்களில் யானைகளுக்கு கரும்பு கொடுத்துவிட்டுதான் பயிற்சியை தொடங்குவார்கள்.
என்னதான் யானையை பிடித்து வந்தாலும், அதுக்கு நம் மீது நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதற்காக, இங்கு யானைகளிடம் மிகவும் அன்பாகத்தான் பழகுகிறார்கள். அதுவும் பழனிச்சாமி கல்பனா மீது அதிகம் பாசம் வைத்துள்ளார். கல்பனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனவுடன் பழனிச்சாமி மிகவும் மனம் உடைந்துவிட்டார். கல்பனா இறப்பதற்கு முன்பு பழனிச்சாமி அழைத்திருந்தபோது, ‘சார் எது கொடுத்தாலும் சாப்பிட மாட்டிங்குது.
டாக்டர் வந்து சிகிச்சை கொடுக்கறார். ஆனா, மருந்து கூட சாப்பிடல. எனக்கு கைக்கால் ஓடல. என்ன பண்றதுனு தெரியல’ என்று கதற அழுதார். இவ்வளவு அமைதியான ஓர் யானையை நான் எங்கும் பார்த்ததில்லை. கல்பனா ரொம்ப ஸ்பெஷல். அதனால்தான், அதன் இறப்பு எனக்கும் அதிக வலியை கொடுத்திருக்கிறது” என்றார்.
கல்பனா குறித்து நன்கு அறிந்தவரும், சூழலியல் ஆர்வலருமான சரவணன், “நான் குழந்தையாக இருந்தபோது, கல்பனாவை என் தந்தை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு, எப்போது யானைகள் முகாமுக்கு சென்றாலும் எண் கண்கள் கல்பனாவைத்தான் முதலில் தேடும். நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு, கல்பனாவை நான் அறிமுகப்படுத்தியுள்ளேன். கடந்த ஆண்டு, என் மகள் சக்திக்கும் கல்பனாவை அறிமுகப்படுத்தினேன்.
சக்தி மிகவும் மகிழ்சியுடன் கல்பனாவை தொட்டாள். எப்போது அதைப் பார்க்கும்போது கல்பனாவின் கண் மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கும். அதில் நான் நிறைய கற்றுள்ளேன். கல்பனா சாவ்லா இனி இல்லை என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. ஆனால், எங்கள் நினைவில் அவள் எப்போதும் இருப்பாள்” என்றார்.
பழனிச்சாமி, தன் குடும்பத்தினரைவிட கல்பனாவுடன்தான் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். அதனாலேயே, தனது மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினரை விடவும், கல்பனா மீது அவர் அதிக பாசத்துடன் இருந்துள்ளார். தனது கையில் கல்பனாவின் பெயரை பச்சை குத்தியிருந்தார்.
கல்பனா இறந்தபோது, உயிரில்லா அதன் உடலைப் பார்த்து பழனிச்சாமி கதறி அழுதுள்ளார். கல்பனா தொடர்பாக, அதன் பாகன் பழனிச்சாமியிடம் பேச பலமுறை முயற்சித்தோம். ஆனால், அவரிடம் பேச முடியவில்லை.
source https://www.vikatan.com/news/tamilnadu/topslip-elephant-camp-in-grief-because-of-the-kalpana-elephants-demise
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக