Ad

புதன், 23 செப்டம்பர், 2020

மாநிலங்களவை: எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு... மூன்றரை மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்கள்!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்த நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா, வங்கி ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட ஏழு மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் மூன்றரை மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இரு தினங்களுக்கு முன்னர் வேளாண் மசோதாக்கள், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக கடும் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல், காங்கிரஸ், தி.மு.க எம்.பி-க்கள் துணைத் தலைவர் ஹர்வன்ஷ் நாராயண சிங் இருக்கைக்கு முன்பாக விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தைக் கிழித்து எறிந்தனர். இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்து ராஜ்ய சபா தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டிருந்தார்.

எட்டு எம்.பி-க்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், உத்தரவை திரும்பப் பெறும் வரை அவைக்கு வரப்போவதில்லை என்று எதிர்கட்சியினர் மாநிலங்களவையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா சுலே ஆகியோரிடம் சபாநாயகர் பேச்சுவார்த்தை நடத்திவந்தார்.

நாடாளுமன்றம்

மாநிலங்களவையில் பா.ஜ.க எம்.பி-க்கள், அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி என மத்திய அரசுக்குப் பல்வேறு நிகழ்வுகளில் ஆதரவு கொடுத்துவரும் கட்சிகளின் எம்.பி-க்கள் மட்டுமே இருந்தநிலையில், மூன்றரை மணி நேரத்தில் ஏழு முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

முதலாவதாக, புதிதாக நிறுவப்பட்ட ஐந்து இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை (IIIT) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Also Read: மூன்று வேளாண் சட்டங்கள்... மூளும் விவாதங்கள்! - செழிக்குமா... வலிக்குமா?

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள்துறை அமைச்சர் ராவ் சாஹிப், `அத்தியாவசியப் பொருள்கள் மசோதா மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். நுகர்வோரும் லாபம் அடைவார்கள்’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை நீக்க வழிவகை செய்யும் அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஆனால், அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதாவுக்கு பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அந்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தார்.

இந்த மசோதா குறித்து அரசு தரப்பில், ``இது, தனியார் முதலீட்டாளர்களுக்கு, அவர்களது வணிக நடவடிக்கைகளில் ஒழுங்குமுறை தலையீடுகளால் ஏற்படும் அச்சத்தை அகற்றுவதை நோக்கமாகக்கொண்டிருக்கிறது. உற்பத்தி செய்வது, சேமித்துவைப்பது, கொண்டு சென்று விற்பனை செய்வது ஆகியவற்றில் சுதந்திரமான செயல்பாட்டுக்கு இது வழிவகுக்கும். விவசாயத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க இது உதவி செய்யும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றம்

மேலும், `போர், பஞ்சம், அசாதாரணமான விலையேற்றம், இயற்கைப் பேரிடர்கள் போன்ற சூழ்நிலைகளில் விவசாய உணவுப் பொருள்களை ஒழுங்குபடுத்தும் வசதி இதில் அளிக்கப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடுத்து நிறைவேற்றப்பட்டிருக்கும் வங்கி ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவின்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கூட்டுறவு வங்கிகள் கொண்டுவரப்படும். இந்த வங்கிகளின் செயல்பாடுகள் நாட்டில் சீர்கெட்டிருக்கின்றன. இவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் 1949-ம் ஆண்டின் வங்கிகள் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

டெபாசிட்தாரர்களைப் பாதுகாக்கவும், கூட்டுறவு வங்கிகளுக்கு வலு சேர்க்கும் வகையிலும் இந்த மசோதாவைக் கொண்டு வந்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, குறிப்பிட்ட குற்றங்களுக்கு அபராதங்களை நீக்கும் நிறுவனங்கள் திருத்த மசோதா, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா, ராஷ்ட்ரிய ரக்‌ஷா பல்கலைக்கழக மசோதா ஆகியவை நிறைவேறின. வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா ஆகியவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறின.

Also Read: வேளாண் மசோதாக்கள்... அரசு விளம்பரங்கள் சொல்லும் பொய்களும், உண்மையும்!

இந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக 2 மணி வரை செயல்படும் மாநிலங்களவையின் நேரம், கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்த ஏழு மசோதாக்கள் மீதும் அந்தந்தத் துறை அமைச்சர்கள் சிறிய விளக்கம் மட்டும் அளித்துவிட்டு அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இப்படி மூன்றரை மணி நேரத்தில் ஏழு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஏழு மசோதாக்களும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவரின் ஒப்புதல் பெற்றவுடன் சட்டமாக மாறும்.



source https://www.vikatan.com/news/politics/7-bills-passed-in-three-and-half-hours-in-upper-house-during-parliament-monsoon-session

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக