Ad

வியாழன், 24 செப்டம்பர், 2020

`நிலத்துக்குக் காவல்காத்த குடும்பம்!’ - காட்டு யானையால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்திருக்கும் பருத்திக்கொல்லை கிராமம், ஆந்திர வனப்பகுதியையொட்டி அமைந்திருக்கிறது. இங்கிருக்கும் அனைவருமே விவசாயத்தைச் சார்ந்துதான் வசிக்கிறார்கள். வனப்பகுதியிலிருந்து காட்டுப்பன்றிகளும், யானைகளும் அடிக்கடி விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. யானைகளின் நடமாட்டத்தால், கிராம மக்கள் வீடுகளைவிட்டு வெளியில் வருவதற்கும் அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

சிறுமியின் சடலம்

இப்படியிருக்க, இன்று அதிகாலை 17 வயது சிறுமியைக் காட்டு யானை மிதித்துக் கொன்ற சம்பவம், கிராம மக்களை உலுக்கிப்போட்டிருக்கிறது. முருகன் என்ற விவசாயி, தனது நிலத்தில் வேர்க்கடலை பயிரிட்டிருக்கிறார். தினமும் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து வேர்க்கடலைப் பயிரை நாசம் செய்கின்றன. இதனால், தனது மனைவி மற்றும் 17 வயது மகள் சோனியாவுடன் நிலத்தில் படுத்துத் தூங்கியபடி, காவல் காப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார் முருகன்.

Also Read: மரணித்த கல்பனா யானை... கதறி அழும் பாகன் பழனிசாமி!

அப்படி நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது, ஒற்றை யானையின் நடமாட்டத்தைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். மனைவியுடன் சேர்ந்து யானையை விரட்டியபோது, வேகமாக ஓடிய யானை தூங்கிக்கொண்டிருந்த சிறுமி சோனியாவை மிதித்துக் கொன்றது. அதிர்ச்சியடைந்த முருகனும் அவரது மனைவியும் கதறி அழுதனர். ஊர்க்காரர்கள் ஓடிவந்து யானையை விரட்டியடித்தனர்.

சோகத்தில் திரண்ட உறவினர்கள்

தகவலறிந்ததும், தமிழக மற்றும் ஆந்திர வனத்துறையினரும், குப்பம் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த சிறுமி,நடப்பு கல்வியாண்டில் ப்ளஸ் டூ செல்லவிருந்தார். இது போன்ற அதிர்ச்சிகரமான, துயரச் சம்பவங்களைத் தடுக்க வனப்பகுதியை ஒட்டியிருக்கும் விவசாய நிலங்களில் சூரிய ஒளி மின்வேலி அமைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/death/tirupattur-girl-killed-by-elephant

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக