14 ஆண்டுகளுக்கு முன் கமுதி அருகே நடந்த போலீஸ் எஸ்.ஐ கொலை வழக்கில் குற்றவாளிகளான 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரமக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது அபிராமம். இங்குள்ள காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி ரோந்து பணியில் இரவு நந்திசேரி விலக்கு ரோட்டில் டூவீலரில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அந்நேரத்தில் அப்பகுதியில் மறைந்திருந்த கும்பல் ஒன்று சார்பு ஆய்வாளர் சுப்பிரமணியனை அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சுப்பிரமணியனிடம் இருந்து அரை பவுன் மோதிரம், செல்போன் மற்றும் டூவீலரை பறித்து சென்றனர்.
Also Read: குமரி: நடத்தையில் சந்தேகம்... மனைவியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த கணவன்!
இந்நிலையில் அவ்வழியாக வந்தவர்கள் கொடுத்த தகவலினை தொடர்ந்து சுப்பிரமணியன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், இச்சம்பவத்திற்கு முன்னதாக நந்திசேரி வழியாக சென்ற போஸ் என்ற தலைமை காவலரையும் அக்கும்பல் தாக்கி மோதிரம் மற்றும் டூவீலரைக் கொள்ளையடித்து சென்றதுடன், காயமடைந்த ஏட்டு போஸை கயிற்றால் கட்டி போட்டுவிட்டும் சென்றுள்ளனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இச்சம்பவங்களால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அபிராமம் காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் போலீஸ் எஸ்.ஐ-யை கொலை செய்த கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சப்பாணி என்ற முருகேசன், துரைப்பாண்டி, ஞானவேல் பாண்டியன், ரவிசண்முகம், திருமூர்த்தி, முத்துராமலிங்கம், குரங்கு முத்துராமலிங்கம், முனியசாமி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில் வழக்கில் தொடர்புடைய துரைப்பாண்டி, முனியசாமி ஆகிய இருவரும் இறந்துவிட்டனர். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. எஸ்.ஐ சுப்பிரமணி கொலை வழக்கில் குரங்கு முத்துராமலிங்கம் தவிர எஞ்சிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.2,000 அபராதம் விதித்தும், தலைமைக் காவலர் கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கும் 7 வருட சிறை தண்டனையுடன் தலா ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி மலர்மன்னன் தீர்ப்பளித்தார். இதையடுத்து சப்பாணி என்ற முருகேசன் கோவை மத்திய சிறையிலும், மற்றவர்கள் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
source https://www.vikatan.com/news/judiciary/paramakudi-court-awarded-life-sentence-to-5-in-si-murder-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக