ஜம்மு காஷ்மீரின் புல்வாமா நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40-க்கும் அதிகமான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தசூழலில், தற்போது அதேபோன்ற மற்றொரு தாக்குதல் முயற்சிய ராணுவம் தடுத்துள்ளது.
காஷ்மீரின் கரீவா (Karewa) பகுதியில் வெடிபொருள்கள் பதுக்கப்பட்டிருப்பதாக ராணுவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய அவந்திப்போராவை அடுத்த கடீகல் (Gadikhal) கிராமத்தின் வனப்பகுதிகளில் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று காலை எட்டுமணி அளவில் நடத்தப்பட்ட இந்தத் தேடுதல் வேட்டையில், பழத்தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொட்டியில் சுமார் 52 கிலோ எடையுள்ள வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 125 கிராம் எடையுள்ள 416 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் தீவிரப்படுத்தியபோது, அதேபோன்ற மற்றொரு சின்டெக்ஸ் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 50 டெட்டனேட்டர்கள் இருந்தது தெரியவந்தது. ``சூப்பர் 90" அல்லது எஸ்-90 என்றழைக்கப்படும் வெடிபொருள்கள் அவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தத் தாக்குதலில் 35 கிலோ ஆர்.டி.எக்ஸ் வகை வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும், அந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.
source https://www.vikatan.com/news/india/52-kg-explosives-found-in-kashmir-pulwama-type-attack-averted-by-indian-army
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக