அந்த மகான் ஜீவசமாதி அடையத் தீர்மானித்தார். மடத்திலேயே அவர் சமாதியடையத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரின் பிரதான சீடன் மாவீரன். சமாதியடையத் தேர்ந்தெடுத்த இடம் மக்கள் வசிக்கும் பகுதியாக இருந்தது. அதனால் ‘ஊருக்கு மத்தியில் சமாதியா’ என்று அங்கிருந்த செல்வந்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அந்த சித்தர் அங்கேயே சமாதியடைந்தார். அங்கே அவர் நினைவாக உடனடியாக சமாதியும் எழுப்பப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த செல்வந்தர்கள் கோபம் கொண்டனர். சில நாள்கள் கடந்தன. சமாதியை இடிக்கும் முயற்சியை அவர்கள் கைவிடவில்லை. ஒருநாள் சமாதியை இடித்தே தீருவது என்று முடிவு செய்தனர். ஆனால் மாவீரரான அவரின் முதன்மையான சீடர் தன் உறவுகளோடு இடிக்க வருபவர்களைத் தடுப்பதற்குத் தயாராக இருந்தார். அந்த இடம் ஒரு போர்க்களம்போலக் காணப்பட்டது. இருதரப்பும் சண்டையிட்டுக்கொள்ள ஆரம்பித்த போது இருவருக்கும் இடையில் திடீரென்று உயிரோடு சமாதிக்குள்ளிருந்து வெளிப்பட்டார் அந்த சித்தர்.
"நான், மரணமடைந்தால்தானே இது சமாதியாகும்... நான் எப்போதும் இங்கு சூட்சுமமாய் இருப்பேன். அப்படியிருக்க இதை இடிக்க வேண்டுமா என்ன?" என்று சொல்ல இருதரப்பும் சண்டையைக் கைவிட்டு அவர் திருவடிகளைப் பணிந்தனர். அன்றுமுதல் இன்றுவரை சித்தர் அங்கு தங்கியிருந்து வரும் பக்தர்களின் தேவைகளைத் தீர்க்கிறார் என்கின்றனர் அவர் பக்தர்கள். அந்த சித்தர் பெயர் ஶ்ரீவேலப்ப தேசிகர். அந்த மாவீரச் சீடன் பூலித்தேவன்.
இந்தியாவின் முதல் விடுதலைப்போராட்ட வீரன் என்று போற்றப்பட வேண்டிய பெருமையையுடையவர் பூலித்தேவன். பூலித்தேவரின் குருவாக விளங்கி அவருக்கு வழிகாட்டியவர் வேலப்ப தேசிகர். தமிழகத்தின் உள்ள தொன்மையான மடங்களில் ஒன்று திருவாடுதுறை ஆதினம். இந்த ஆதினம் மெய்கண்டார் சந்தான மரபில் வந்த ஆதினம். நமசிவாய தேசிகர் திருவாடுதுறை மடத்தின் முதல் தேசிகராவார். இந்த மரபில் பத்தாவது தேசிகராகத் தோன்றியவர் வேலப்ப தேசிகர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர் என்ற மூன்று பெரிய ஊர்களும் அருகருகே அமைந்துள்ளன. இந்த மூன்று ஊர்களிலும் திருவாடுதுறை மடத்திற்கு கிளைகள் உள்ளன. இந்த மூன்று கிளை மடங்களையும், முத்து வீரப்பநாயக்கர் ஏற்படுத்தி ஆதினத்திடம் அளித்துள்ளார். இம்மூன்று கிளை மடங்களுக்கும், ஏராளமான விளை நிலங்களையும் மன்னர் கொடையாக வழங்கியுள்ளார்.
வேலப்ப தேசிகர் பாண்டிய நாட்டில் பல தலங்களை தரிசித்த பின் சங்கரன்கோவில் வந்து சிறிது காலம் வாழ்ந்து வந்தார். இந்தக் காலத்தில்தான் பூலித்தேவன் வேலப்பதேசிகரை அறிந்துகொண்டார். வேலப்பதேசிகர் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரலிங்க சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் சென்று அத்தல இறைவனை வழிபட்டு அக்கோயிலிலே தவம் செய்வார். ஆலயத்திற்கு வந்து வழிபடும் மக்களின் உடலில் ஏற்படும் நோய்களையும், மனதால் உண்டான நோய்களையும் போக்குவார்.
ஒரு முறை பூலித்தேவருக்கு குன்மநோயால் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. வேலப்ப தேசிகர் சுவாமிகள் தன்னுடைய தவவலிமையால் குன்மநோயைப் போக்கினார். இதன்மூலம் மேலும் சுவாமிகள் மேல் ஈடுபாடுகொண்ட பூலித்தேவர், சிவபூசை, மாகேசுவர பூசை ஆகியன சிறப்பாக நடைபெற தானம் வழங்கினார். அந்த தானமாகக் கிடைத்த நிலங்களில் வேலப்ப தேசிகர் மடம் அமைத்து அருள்புரிந்தார்.
சித்தர்களைப் பொறுத்தவரையில் தம் உடலைத் துறந்து மறுஉடலுக்குச் செல்வதில் மிகுந்த பிரியம் உண்டு. அப்படித்தான் வேலப்ப தேசிகர் சுவாமிகளும் சமாதி கொள்ளத் தீர்மானித்தபோது நிகழ்ந்த சம்பவத்தினைத்தான் நாம் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் படித்தது.
தமிழ் மாதமான புரட்டாசியில் மூல நட்சத்திர நாளான்று ஆதினமடத்தில் பூமிக்கு கீழே எழுப்பப்பட்ட குழிக்குள் உயிரோடு அமர்ந்து தியான நிலையில் சமாதி நிலையை அடைந்தார் வேலப்ப தேசிகர் சுவாமிகள். சமாதி அடைந்த பின்பும் அவர் சூட்சுமமாய்ப் பல முறை பூலித்தேவருக்கு வழிகாட்டியிருக்கிறார்.
வேலப்ப தேசிகர் அருளும் பூலித்தேவர் மறைதலும் - மக்கள் வரலாறு
1767-ம் ஆண்டு ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல்பாளையத்தின் மன்னரான பூலித்தேவரைப் பிடிக்கப் பெரும்படையுடன் வந்தனர். 1767-ம் ஆண்டு மே மாதம் டொனல்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், கேப்டன் ஹார்பர் ஆகியோர் வாசுதேவ நல்லூர் கோட்டையைத் தாக்கினார்கள். பெரும்படைத் தாக்குதலை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரிட்டார். ஆங்கிலேயரின் பீரங்கிகளின் தாக்குதலினால் கோட்டை சுவரில் ஒட்டை ஏற்பட்டது. உடனடியாக பூலித்தேவரின் வீரர்கள் களிமண்ணும், வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் பயனளிக்காத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்தனர். ஒரு வாரம் நடந்த இந்த உக்கிரமான போரில் நெற்கட்டான் செவல்கோட்டையை தகர்த்தார்கள் ஆங்கிலேயர்கள். மாவீரன் பூலித்தேவனை கைது செய்து பாளையங்கோட்டைக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் சங்கரநயினார் திருக்கோயிலில் உள்ள இறைவனை வழிபட அனுமதி கேட்டார். அதன்படி பூலித்தேவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோயிலுக்குள் சென்ற பூலித்தேவர் திடீரென்று ஏற்பட்ட புகையால் காணாமல் போகிவிட்டார். இதனால் ஆங்கிலேயரால் பூலித்தேவனை பிடிக்க முடியவில்லை. பூலித்தேவர் யார் கண்ணுக்கும் தென்படாமல் மாயமாக மறைந்து விட்டார்.
பூலித்தேவரை கைது செய்து ஆங்கிலேயர்கள் இழுத்து வந்தபோது வேலப்ப தேசிகர் மடம் முன்பு கொண்டு வந்தனர். அங்கே ஒரு நிமிடம் நின்று தம்முடைய குருவை நோக்கி மனமுருகி வேண்டினார். நான் என்மானத்தோடு வானுலகம் செல்லுவதற்கான வரத்தை எனக்குத் தந்தருளுங்கள் என்று வேண்டினார் பூலித்தேவர். உடனே சூட்சம உடலோடு வெளிவந்த வேலப்பதேசிகர் தன்னுடைய சீடனுக்கு மட்டுமே காட்சிகொடுத்தார். ‘பூலித்தேவா வா என்னுடன்’ என்று கூறி முன்னால் சென்றார். பின்னால் நடந்தார் பூலித்தேவர்.
Also Read: சித்தர் குகைகள், மூலிகை அருவிகள், 70 கொண்டை ஊசிகள்... கொல்லிமலை எனும் மர்மதேசம்! `
கோயிலின் உள்ளே சென்ற குருவின் பின் சென்ற பூலித்தேவர், கோயிலில் சுவாமி சந்நிதிக்கு அருகில் தன் தவ சக்தியால் மந்திர கட்டிட்டு தன் சீடரை நிறுத்தி வைத்தார்.
“பூலித்தேவா இனி யார் கண்ணிலும் தெரியமாட்டாய். மானத்தோடு உன் உடலுடன் சொர்க்கம் செல்வாய்” என்று கூறினார் குரு. உடனே தியானத்தில் அமர்ந்தார் பூலித்தேவர். அப்படியே சொர்க்கத்துக்கே சென்று விட்டார் என்கிறது இந்தப் பகுதி மக்களின் வாய்மொழி வரலாறு.
அதற்கேற்ப ஆங்கிலேயர்கள் எவ்வளவு தேடியும் பூலித்தேவரை உயிருடன் பிடிக்கமுடியாமல் போயிற்று. இதனால், இனி பிற பாளையக்காரர்கள் தங்களைக் கண்டு பயப்பட மாட்டார்களோ என்று எண்ணிய ஆங்கிலேயர்கள், வேறு ஒரு வீரனைக் களத்து மேட்டில் வைத்து தீயிட்டு கொழுத்திவிட்டு, பூலித்தேவனைக் கொன்று விட்டதாக கூறிவிட்டார்கள்.
மக்களின் வாய்மொழி வரலாற்றுக்கு வலுசேர்க்கும்வகையில் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் பூலித்தேவன் அறை என்று ஒன்று உள்ளது. ‘இதுதான் பூலித்தேவர் காணாமல் போன இடம்’ என்ற அறிவிப்பு பலகையும் அங்கு காணப்படுகிறது.
வாழும்காலத்தில் பூலித்தேவர் ஆங்கிலேயருக்கு எதிராகப் பெற்ற வெற்றிகளுக்குப் பெரும் துணையாக இருந்து உதவியவர் வேலப்பதேசிகர். சுவாமிகள், தற்போதும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்குச் சிறப்பான முறையில் அருளாட்சி செய்து வருகிறார். நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை வரம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாத பெண்மணிகள் என வரம் வேண்டுபவர்கள் பலரும் இங்கு வந்து விளக்கு ஏற்றி வணங்கித் தங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கப் பெறுகிறார்கள்.
எங்குள்ளது?!
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ரதவீதியில் சங்கரநாராயணர் கோயிலுக்குப் பின்புறத்தில் வேலப்ப தேசிகர் சித்தர் சுவாமிகளின் சித்தபீடம் அமைந்துள்ளது.
- தமிழாகரன்
source https://www.vikatan.com/spiritual/miscellaneous/folklore-history-of-velappa-siddhar-and-puli-thevar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக