Ad

புதன், 2 செப்டம்பர், 2020

அயர்ன், ஸிங்க், வைட்டமின் சப்ளிமென்ட்கள் கொரோனாவிடமிருந்து உங்களை பாதுகாக்காது... ஏன்?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக எந்த மருந்தும் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், பல தடுப்பு மருந்துகளும் இன்னும் ஆராய்ச்சிக்கட்டத்திலேயே இருக்கின்றன. இந்நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியையே மக்கள் கொரோனாவை எதிர்க்க கைகொடுக்கும் ஆயுதமாக நம்பியுள்ளனர்.

நோய் வராமல் தடுப்பதற்கும், நோய்த்தொற்று ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வரவும் எதிர்ப்பு சக்தி மிக அவசியம். இந்நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் பல இயற்கை வழிகளைப் பின்பற்றுகின்றனர். இன்னொரு பக்கம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மருந்துகள், சப்ளிமென்ட்ஸ் எனப் பலவும் சந்தையில் விற்கப்படுகின்றன. உண்மையில் இவை நம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லனவா? தொற்றுநோய் மருத்துவர் ராம்கோபால் கிருஷ்ணனிடம் கேட்டோம்.

Dr.Ram Gopal Krishnan

``அயர்ன், ஸிங்க், வைட்டமின் போன்ற சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்வதற்கும், கோவிட்-19 நோய்த் தடுப்பாற்றலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது குறித்த அறிவியல்பூர்வமான தகவல்களும் இல்லை. இவை மருந்தற்ற குளிகைகள் (Placebo) போலவே மக்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. அதாவது, இதனால் நோய்க்கு எதிராக உடலியல் ரீதியாக எந்த பலனும் இருக்காது. ஆனால், மனரீதியாக ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும்.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு அறிகுறிகள் மிதமாக உள்ள நோயாளி வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, பாரசிட்டமால் மருந்து கொடுக்கப்படுகிறது. அவற்றோடு சேர்த்து வைட்டமின் சப்ளிமென்ட்ஸும் வழங்கப்படுகின்றன. இது நோயாளிக்கு, தனக்கு மருந்து அளிக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்கே.

வைட்டமின், அயர்ன் சப்ளிமென்ட்களால் எந்தக் கெடுதலும் இல்லை. என்றாலும், கோவிட்-19 நோய்த்தொற்று சிகிச்சையில் அவற்றால் பலனும் இல்லை. கோவிட் - 19 வைரஸிலிருந்து அவை பாதுகாக்கிறது, அல்லது சிகிச்சையில் அது பலனளிக்கிறது என்பது குறித்து எந்த அறிவியல்பூர்வமான ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை.

சித்தா, ஆயுர்வேதா போன்ற மாற்று மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதாகக் கூறப்படும் மருந்துகள் குறித்து நான் கருத்து சொல்ல இயலாது. நான் அவற்றில் பயிற்சி பெறவில்லை.

எதிர்ப்பு சக்தியை எந்த சப்ளிமென்ட்டாலும் கூட்ட முடியாது என்பதுதான் உண்மை. நாள்பட்ட நோய்களான சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, இருதய நோய்கள், உடல் பருமன் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமும், புகைப்பழக்கம் ஆகியவற்றை தவிர்த்தல் மூலமும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலமுமே எதிர்ப்பு சக்தியைக் கூட்டமுடியும். மருந்து நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் மருந்துகள் என வியாபாரம் செய்கின்றனர்'' என்றார் மருத்துவர் ராம்கோபால் கிருஷ்ணன்.

Dr.Vedhamanikam

பொது மருத்துவர் ஆர். வேதமாணிக்கத்திடம், இயற்கையான உணவு முறை மூலம் எவ்வாறு எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது என்பது குறித்துக் கேட்டோம். ``சத்து நிறைந்த உணவு முறை மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொரோனாவிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய சில உணவுகளைப் பார்க்கலாம்.

வண்ண வண்ணப் பழங்கள், காய்கறிகள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப் பெரிதும் உதவும். ஆப்பிள், நம்மை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும் சிறந்த பழம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் சி நம் உடலில் உற்பத்தி ஆவது இல்லை, சேகரிக்கப்படுவதும் இல்லை. இதனால் அன்றாடம் உடம்பிற்கு வைட்டமின் சி சத்து வெளியிலிருந்து தேவைப்படும். வைட்டமின் சி நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

நம் உடம்பில் நுண்ணுயிரிகளால் தொற்று ஏற்பட்டால், அதை எதிர்த்துப் போராட வெள்ளை அணுக்கள் அவசியம். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உதவும்.

கிரீன் டீ மற்றும் பிளாக் டீ சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய சிறந்த பானங்கள். கிரீன் டீயில் உள்ள L -Theanine என்ற அமினோ ஆசிட், நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் டி-செல் உற்பத்திக்குத் தேவையானது.

கீரை வகைகள் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்கக்கூடிய உணவு. கீரைகளில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட் ஆகியவை நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க வல்லவை.

பூண்டு, ரத்த நாளங்களின் பாதுகாப்பிற்கு உதவும் சிறந்த உணவு. எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இஞ்சி, தொண்டை கரகரப்புக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் இன்ஃப்ளமேஷனைக் குறைக்கும்.

எதிர்ப்பு சக்தி

குடமிளகாய் வைட்டமின் சி நிறைந்த உணவு. எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதுடன் கண்கள் மற்றும் சருமத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும்.

புரொக்கோலியில் பல வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்துள்ளன.

அன்றாடம் பால் அருந்துவது நல்லது.

நம் உடம்பில் வெப்பத்தை சீராக வைக்க தண்ணீர் அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது முக்கியம். உணவு சரிவிகிதத்தில், அனைத்து சத்துகளும் நிறைந்ததாக இருக்க வேண்டும். உணவே சிறந்த மருந்து.

சத்தான உணவைப்போலவே, ஆழ்ந்த உறக்கமும் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியம். தினமும் 7 மணி முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். அன்றாட உணவு, நல்ல உறக்கம் இவற்றின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நலமாக வாழலாம்.

ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று கூற முடியாது. அது ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப மாறும்" என்றார் டாக்டர் ஆர். வேதமாணிக்கம்.



source https://www.vikatan.com/health/healthy/why-vitamin-supplements-and-immunity-boosters-wont-help-to-fight-against-covid-19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக