நெல்லை பாளையங்கோட்டை முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், இசக்கிமுத்து. அவர் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு அரவிந்த் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
Also Read: `சென்னை டு நெல்லை; தண்ணீர் வசதி இல்லாத ரயில் பயணம்!’- அதிரடி காட்டிய நுகர்வோர் நீதிமன்றம்
அவரிடம் பயணக் கட்டணமாக ரூ.25 பெற்றுக் கொண்டு அதற்கான டிக்கெட்டை பேருந்தின் நடத்துநர் கொடுத்துள்ளார். அனைத்து பேருந்துகளிலும் ரூ.24 மட்டுமே கட்டணமாக வசூகிக்கப்படும் நிலையில், கூடுதலாக ஒரு ரூபாய் வசூலிக்கப்படுவதால் அதிர்ச்சியடைந்த இசக்கிமுத்து இது குறித்து பேருந்தின் நடத்துநரிடம் கேட்டுள்ளார்.
Also Read: `ஸ்டாக் பழசு... விலையோ புதுசு!’- வணிக நிறுவனத்துக்கு அபராதம் விதித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்றம்
பேருந்து நடத்துநர் அவருக்கு உரிய பதிலைத் தெரிவிக்காமல், ‘இந்தப் பேருந்தில் அப்படித்தான் வசூலிப்போம். டிக்கெட்டுக்கான சீட்டைப் பெற்றுக் கொண்டீர்கள் அல்லாவா? இனி எதையும் கேட்கக்கூடாது. அதற்கு மேலும் பேசினால் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு விடுவேன்” என அனைத்து பயணிகள் மத்தியில் அசிங்கமாகப் பேசி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதனால் , மிகுந்த மனவேதனையடைந்த இசக்கிமுத்து இது தொடர்பாக பேருந்து நிறுவன உரிமையாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரிடம் புகார் செய்தார். பேருந்து நிறுவனத்தினர், தங்களுக்கு அந்த வழித்தடத்தில் பேருந்து எதுவும் இயங்கவில்லை என்றும் ஸ்ரீதர் ரோடுவேஸ்க்கு சொந்தமான பேருந்து மட்டுமே இயங்கி வருவதாகவும் தவறான தகவலைத் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக வட்டார பேருந்து அலுவலரிடம் முறையிட்டதால் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அத்துடன், தகவல் அறியும் சட்டத்தில் கேள்வி கேட்டதில், ’திருநெல்வேலி-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கு ரூ.24 மட்டுமே அரசு கட்டணமாக நிர்ணயித்துள்ளது’ எனத் தெரிவித்தனர்.
அதனால் தனக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அவமானத்துக்குக் காரணமான பேருந்து நிறுவனம் மற்றும் நடவடிக்கை எடுக்காத வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு 95,000 ரூபாய் அபராதம் விதிக்கக் கோரியும் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் பிரம்மா ஆஜராகி, ‘பேருந்தில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றுள்ள மனுதாரர் ஒரு நுகர்வோர். அவருக்குச் சேவைக்குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் தேவதாஸ், உறுப்பினர்கள் சிவன்மூர்த்தி, முத்துலெட்சுமி ஆகியோர் அளித்த தீர்ப்பில், “சேவைக்குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய அரவிந்த் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மனுதாரர் இசக்கிமுத்துக்கு ரூ.15,000, வழக்கு செலவுத் தொகை ரூ.5,000 மற்றும் கூடுதலாக வசூலித்த கட்டணத் தொகை ரூ.1 ஆகியவற்றை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். தவறினால் 6 சதவிகித வட்டியுடன் கொடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்
source https://www.vikatan.com/news/judiciary/consumer-court-has-fined-private-bus-owner-for-lack-of-service
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக