பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக என்.ஐ.ஏ-வுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாகவும் கிடைத்த தகவலையடுத்து, இதுதொடர்பாக என்.ஐ.ஏ கடந்த 11-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது.
இந்தநிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் ஆகிய பகுதிகளில் இருந்து அல்-கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்திருக்கிறது. எர்ணாகுளத்தில் மூன்று பேரையும், முர்ஷிதாபாத்தில் 6 பேரையும் சனிக்கிழமை நடத்திய ரெய்டில் கைது செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: மருத்துவர் டு தீவிரவாதி... டாக்டர் பாம் தப்பியதும் மீண்டும் பிடிபட்டதும் எப்படி?
முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த அபு சூஃபியான் தலைமையில் இவர்கள் செயல்பட்டு வந்தது, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு சமூக வலைதளங்கள் மூலம் இவர்களை மூளைச் சலவை செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக என்.ஐ.ஏ தெரிவித்திருக்கிறது. மேலும், தலைநகர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தவும், அதற்காக ஆயுதங்கள் வாங்க டெல்லிக்கு இவர்களில் சிலர் பயணப்படத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
அதேபோல், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதங்களை வாங்கி, அவற்றை காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளிடம் அளிக்கும் அசைன்மெண்டும் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்ததாக என்.ஐ.ஏ கூறியிருக்கிறது. இவர்களது கைது மூலம் மிகப்பெரிய நாச வேலை முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அவர்கள் நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.
முர்ஷித் ஹசன், இயாகூப் பிஸ்வாஸ் மற்றும் மோசரப் ஹூசைன் ஆகிய 3 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அதிகாலை ரெய்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், நஜ்மஸ் ஷகிப், அபு சூஃபியான், மைனுல் மொண்டல், லேயான் அஹமத், அல் மமூன் கமல், அடிடூர் ரெஹ்மான் ஆகியோர் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் மேற்குவங்கத்தையும் மூன்று பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், ஜிஹாதி தொடர்பான இலக்கிய குறிப்புகள், கூர்மையான ஆயுதங்கள், நாட்டுத் துப்பாக்கிகள், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பான ஆவணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைப்பற்றியிருக்கிறார்கள்.
Also Read: ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு முதல் வில்சன் கொலை வரை! - குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த என்.ஐ.ஏ
மேலும், வெடி மருந்துகள், வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள், சுவிட்சுகள் போன்றவை சூஃபியானின் முர்ஷிதாபாத் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் கேரளா மற்றும் மேற்குவங்க சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக கஸ்டடியில் எடுக்கப்படுவார்கள் என்கிறது என்.ஐ.ஏ.
source https://www.vikatan.com/news/india/nia-arrests-9-al-qaida-terrorists-from-kerala-wb
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக