ஓர் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் விரும்பும் பட்சத்தில் அவர்கள் காதலிக்கவும் திருமணம் செய்துகொள்ளவும் நம் இந்தியச் சட்டத்தில் இடமுண்டு. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதல் இயல்பானதாகப் பார்க்கப்பட்ட அதே நேரத்தில் இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்களுக்கு இடையேயான காதல் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகவே பார்க்கப்பட்டு வந்தது.
தன்பாலினத்தவர்கள் எனப்படும் இவர்களின் உறவு, இயற்கைக்கு மாறான விஷயமாகக் கருதப்பட்டதால் இதற்கு எதிராக 1860-ம் ஆண்டு சட்டப்பிரிவு 377 கொண்டுவரப்பட்டு தன்பாலின உறவில் ஈடுபடுவோர்களுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டு வந்தது.
இந்தியா விடுதலை அடைந்த பின்னரும், இந்தச் சட்டம் இந்தியக் குடியரசின் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படவில்லை. இந்நிலையில் தன் பாலின உறவை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அதைக் குற்றச் செயல்களின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றும் இந்தியாவில் பல ஆண்டுகளாகக் கோரிக்கை தொடர்ந்தது. தன் பாலின உறவை அங்கீகரிக்க வேண்டும் என்று எல்.ஜி.பி.டி (Lesbian, Gay, Bisexual, and Transgender- LGBT) செயற்பாட்டாளர்கள் ஐந்து பேர் சேர்ந்து 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அவர்கள் குறிப்பிட்டிருந்த மனுவில், ``சட்டத்தின் முன்னால், மதம், இனம், மொழி, பாலினம், பிறப்பின் அடிப்படையில் பேதம் இருக்கக் கூடாது. ஆனால், சட்டப் பிரிவு 377, அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. தன் பாலின ஈர்ப்பாளர்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டிய சூழல் உள்ளது. நிறைய மிரட்டல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதனால் இச்சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு 2018-ல் செப்டம்பர் மாதம் வெளியானது. அதில், ``ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும். யாரும் அவர்களுடைய தனிப்பட்ட தன்மைகளிலிருந்து விடுபட முடியாது. தனிப்பட்ட தன்மைகளை ஏற்பதற்கான சூழல் சமூகத்தில் உள்ளது. இந்த வழக்கில் எல்லாக் கோணங்களிலும் ஆராய்ந்துள்ளோம். எல்லாக் குடிமகன்களைப் போலவும், தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமையை மதிப்பதுதான் உச்சபட்ச மனிதநேயம். தன் பாலினச் சேர்க்கையைக் குற்றமாக்குவது பகுத்தறிவற்றது மற்றும் சகித்துக்கொள்ள முடியாதது. தன் பாலினச் சேர்க்கையைக் குற்றமாக வரையறுக்கும் 377-வது சட்ட பிரிவு இந்தியாவில் செல்லாது" என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. தன்பாலினச் சேர்க்கையாளர்கள் இதைத் தங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதிக் கொண்டாடினார்கள்.
சமீபத்தில், தன்பாலின திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்ய உள்ள தடைகளை நீக்கி அந்த திருமணத்தை அங்கீகரிக்க வழிவகை செய்யவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த பாலின சமத்துவ சமூக செயற்பாட்டாளர் கோபி சங்கர் உள்ளிட்ட ஐந்து பேரால் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இதில், ``இந்து திருமணச் சட்டம் 1955 மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் 1954 ஆகியவற்றின் கீழ் தன்பாலினத்தவரின் திருமணத்திற்கு எந்தவொரு சட்டரீதியான தடையும் இல்லை என்றபோதிலும், நாடு முழுவதிலும் இதனைப் பதிவு செய்வதற்கான சிக்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனவே தன்பாலினத்தவர்களின் திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரித்துப் பதிவு செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, ``இது போன்ற தன்பாலின திருமணங்களைத் திருமணங்களை நம்முடைய கலாசாரமும் சமுதாயமும் ஏற்றுக்கொள்வதில்லை. இந்திய நாட்டின் சட்ட அமைப்பு மற்றும் சமூகம் ஆகியவை ஒரே பாலின தம்பதியரை அனுமதிப்பதில்லை. இதனால் இந்த உறவுமுறையைத் திருமணமாக அங்கீகரிக்க முடியாது" எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ``இந்து திருமணச் சட்டம் என்பது கணவன் - மனைவிக்கு இடையேயான திருமணத்தை மட்டுமே அங்கீகரிக்கிறது. தன்பாலின திருமணங்களை சட்டம் அங்கீகரிப்பதில்லை. உச்சநீதிமன்றம் 2018-ல் அளித்த தீர்ப்புமே தன்பாலின உறவை குற்றமற்றது என மட்டுமே அறிவித்தது. அதைத் தவிர திருமணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை" என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து வழக்கறிஞர்களிடம் பேசினோம்.
``இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியே திருமண சட்டங்கள் உண்டு. அந்த வகையில் இந்து திருமணங்கள் சட்டம் 1955 என்பது இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மேற்கொள்ளும் திருமணத்துக்காக இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலமாகவே இந்து மதத் திருமணங்களும், திருமண முறிவுகளும் நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்படுகின்றன. திருமண முறிவு ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கான ஜீவனாம்சம் வழங்குவதுபோன்ற விதிமுறைகள் இந்து திருமண சட்டத்தில் உள்ளன. ஒருவேளை தன்பாலின திருமணங்கள் இந்து திருமண சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டால் அச்சட்டத்தில் உள்ள விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே அரசு இந்தப் பிரச்னையில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு உள்ள சிக்கல்களை கருத்தில்கொண்டு விரைவில் அரசோ அல்லது நீதிமன்றமோ முடிவெடுக்க வேண்டும்" என்றனர்.
தன்பாலின உறவு குற்றமற்றது என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுவிட்டாலும், இன்னும் அவர்களின் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் பெறுவது என்பது சவாலானதாகவே இருக்கிறது. இதனால் சொத்துரிமை, வாரிசுரிமை, இன்ஷூரன்ஸ் பாலிசிகள் போன்ற விஷயங்களில் சட்ட சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்; அல்லது கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த விஷயத்திலும் விரைவில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும் என்பதே அவர்களின் குரலாக இருக்கிறது.
source https://www.vikatan.com/lifestyle/relationship/why-same-sex-marriages-didnt-get-recognition-under-hindu-marriage-act
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக