Ad

வியாழன், 3 செப்டம்பர், 2020

`8 வழிச்சாலை திட்டம்... முதல்வர் தான் பிடிவாதமாக இருக்கிறார்!’ - 6 -எம்.பிக்கள் போராட்டம்

’சேலம் டூ சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்ட’த்தை எதிர்த்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெளதமசிகாமணி, தர்மபுரி நாடாளுமன்ற் உறுப்பினர் செந்தில்குமார், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் என 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த குள்ளம்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்து கொள்வதாக இருந்தது.

கோரிக்கை மனு

கடைசி நேரத்தில் அவர் வரவில்லை. தூறல் மழையும் பொருட்படுத்தாமல் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் பேசிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், ''விவசாயத்தை பாதுகாப்பதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற விவசாய தோழர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து 8 வழிச் சாலை விவசாயிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் வாழக்கூடிய ஒட்டுமொத்த விவசாயிகளின் சமூகத்தையும் பாதுகாக்கும் ஒரு தலைவனாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதி விளங்கினார். என்பதை இங்குள்ள விவசாயிகள் நன்கு அறிவார்கள். அதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயிகளின் வாளாக, கேடையமாக தொடர்ந்து போராடிக் கொண்டுள்ளார். அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தும், அதிகாரத்தில் இல்லையென்ற போதும் ஏழை தினக்கூலி விவசாயிகளின் குரலாக தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசியும், மக்கள் மன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்.

சேலம்

அந்த வழியில் வளர்ந்து வரும் உதயநிதி ஸ்டாலின் 8 வழிச் சாலையால் பாதித்த விவசாயிகள் சந்தித்தனர். அவர்கள் கண்ணீர் விட்டு பேசிய போது 'எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்கிறேன். எங்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்திருதால் 8 வழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைத்திருப்போம்' என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். அவருடைய வழிகாட்டுதல் படியும், 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் கோரிக்கையை ஏற்றும் நாடாளுமன்றத்தில் பேசி எப்படியாவது மாற்றுப் பாதையில் அமைக்க முயற்சிப்போம்.

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்காரியை எங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினோம். 8 வழிச் சாலை விவசாயிகள் பாதிக்கப்படாமல் மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென கோரிக்கை வைத்தோம். ஆனால் என்ன காரணமென்றே தெரியவில்லை இங்கிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த பாதையில் தான் கொண்டு செல்ல வேண்டுமென பிடிவாதமாக இருக்கிறார். தொடர்ந்து 5 மாவட்ட விவசாயிகள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்

விவசாயத்தைத் தவிர வேறு தொழில் இவர்களுக்கு தெரியாது. கோடி கணக்கான மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகள் தெருவில் இறங்கி போராடுவது எந்த விதத்தில் நியாயம்? விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தப் பெண்கள் கண்ணீரும், கம்பளமாக அழுது வருகிறார்கள்'' என்றார். தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ''மக்களே இந்த 8 வழிச் சாலைத் திட்டம் வேண்டாம். என்று தீர்மானம் நிறைவேற்றும் போது யாருக்காக இந்த 8 வழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறீர்கள். இங்கிருக்கும் கனிம வளங்களை அழிப்பதற்காகவே இந்த திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறார்கள். சேலம் டூ சென்னை செல்வதற்கு ஏற்கனவே உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும்'' என்றார்.



source https://www.vikatan.com/news/politics/6-mps-and-farmers-protest-against-salem-to-chennai-green-road-scheme

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக