Ad

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

வேம்பன்..! - வேப்பமரம் உணர்த்தும் பாடம் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வேம்பன் ஓங்கி உயர்ந்த வேப்பமரம். ஜன்னல் கம்பிகளின் வழியே கைதியை போல் நானும் அதுவும் பார்த்துக்கொள்கிறோம். அதன் இலைகள் தழுவி வீசிடும் தென்றல் காற்று மட்டுமே என்னை தீண்டிப் போகிறது. அவ்வப்போது சன்னல் வழியே, `சார் போஸ்ட்' என்றபடி வந்து விழுகிறது சில காய்ந்த இலைச் சருகுகுகள். இந்த தனிமைதான் இயற்கையை உற்று நோக்கும் பண்பை எனக்குத் தந்தது. இவ்வளவு நாளாக இங்கு நின்றிருக்கும் இந்த மரத்திற்கு நான் புதியவன்தான்.

Neem Tree

நான் மட்டும்தான் இந்த மரத்தை நம்பி இருக்கிறேன். என் தனிமையைப் போக்கத்தான் சன்னல் வழியே கையழைக்கிறது என்று கர்வம் கொண்டிருந்தேன். அது தவறு என்று உணர்கின்றேன். வேப்பமரம் என்றதும் கசப்புதான் ஞாபகம் வரும். வேப்ப மரத்தின் கிளையில் இருக்கும் தேன் கூட்டிற்கு கசப்பு சொந்தமல்ல. பொதுவாக கசப்பு என்பது சுவைகளில் விரும்பத்தகாதது. எதிர்பாராது நேர்ந்த துன்ப நிகழ்வுகளை, நம்மை ஓரங்கட்டிய பொழுதுகளை கசப்பான தருணம் என்று பெயரிடுகிறார்கள். சத்தமாக சொல்லாதீர்கள்... இது வேம்பனுக்கு கேட்டு விடப் போகிறது. ஆம் இவன் என் தோழன். இவனோடுதான் பொழுது விடிந்து முடிகிறது இந்த ஊரடங்கு நாட்களில். அதுவும் மதிய வேளைகளில் இவனை கொஞ்சாத நாட்களில்லை.

இவ்வளவு குறுகிய நாட்களில் யாரையும் எழுத முன் வந்ததில்லை நான். மரம் வளர்வது அதன் இயல்பு. ஆனால் கட்டடங்களை மலையளவு வளர்த்துவிட்டு இரண்டாம் தளத்தை எட்டிப்பார்க்கும் இந்த மரத்தை நாம் வியப்புடன் பார்க்கிறோம். `இங்க பாரேன் இந்த மரம் எவ்வளவு பெருசா இருக்குன்னு' என்று. இந்த மரமும் என்னைப் போலவே தனிமையில் நிற்கிறது என்று எண்ணினேன். உண்மையில் அது தனியாக இல்லை.

Neem Tree

மண்ணோடு வேர்களும் காற்றோடு கிளைகளும் தேகமெங்கும் பிசின்களை வடியவிட்டு எறும்புகளை தன்னோடு ஈர்த்துக் கொண்டும் நிற்கிறான் வேம்பன். அதுமட்டுமா? கிளைகளில் தேனீக்களுக்கு சில தொகுதிகளையும், காக்கைகளுக்கு ஒரு தனி காலனியும் ஒதுக்கியிருக்கிறான்.

இங்கு இயற்கை அப்படியேதான் இருக்கிறது. அதனைப் பார்க்கும் மனித மனங்களின் கோணம்தான் மாறுபட்டு இருக்கிறது. நம் செயல்பாடுகள்தான் அதனது இயல்பினை சிதைக்கிறது. என் தனிமைக்கு இந்த வேப்ப மரம் இனிக்கிறது. இது மிகை அல்ல மக்களே. உண்மைதான்.

இந்த மரத்தின் வெடித்த பட்டைகள் எங்கும் சிறுசிறு பூச்சிகளுக்கு அடைக்கலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. பழங்களை புசிக்க வரும் நாடோடி காக்கைகளுக்கு போதுமான `கேன்டீன்' கிளைகள் வசதியாக இருக்கின்றன. இங்கு கழிப்பிட வசதிதான் தனியாக ஏதும் இல்லை. ஆங்காங்கே வெண்ணிற பூச்சுகள் தெளிக்கப்பட்டு இருப்பதைப் பாருங்கள். இவைகள் காக்கைகள் தீட்டிய சித்திரங்கள். கூட்டமாக வந்து கூட்டமாகவே சென்று எப்போதும் கூட்டமாகவே இருக்கும் இந்த காக்கைகள் என்னையும் என் தனிமையையும் ஏளனம் செய்வதாக தோன்றினாலும் சிரிப்புதான் வருகிறது. நான் கதை சொல்லும் இந்த வேளையில் சில இலைகள் பழுத்து உதிர்கின்றன.

Neem tree

சில காய்கள் பழுக்கின்றன. இவை எதையுமே பொருட்படுத்தாது, எறும்புகள் எல்லாம் வேப்பமரத்தை கிளைகளின் வழியே ஊர்ந்து சென்று கிச்சு கிச்சு மூட்டி சிரிக்கத் தூண்டுகின்றன. நிர்வாணமாக பூத்துக் குலுங்கும் அழகிய வெண்ணிற பூக்களின் மகரந்த தூள்களையும் அதன் தேனையும் சூறையாடிச் சென்று அதே வேப்பங்கிளையில் சேமித்து வைக்கும் இந்த தேனீக்கள் அம்மாவிடம் தினமும் காலையில் பள்ளிக்கூடம் செல்வதற்கு முன் ஒரு ரூபாய் வாங்கி அவர்களிடமே அதைக் கொடுத்து சேமித்து வந்த என்னைத்தான் எனக்கு நினைவூட்டுகிறார்கள் இந்த தேனீக்கள். இதையெல்லாம் பார்க்கையில் உண்மையில் நான் தனிமையில் இல்லை எனத் தோணுகிறது.

என்னைச் சுற்றி நடக்கும் அனைத்தும் எனக்கு புரியவே இல்லை. என்னவோ இந்த மரத்தின் அசைவு மொழி மட்டும்தான் எனக்கு புரிகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? நேற்று பெய்த மழையில் இலைகள் நனைந்து அதன் ஈரத்தால் இலையின் கனம் தாங்காது குனிந்து நின்றதைப் பார்க்கையில், இலைகள் அனைத்தும் அந்த வானம் மழையை பொழிந்ததற்கு சிரம் தாழ்ந்து வணங்கி, நன்றிக்கடன் செலுத்துவது போலிருந்தது. இந்த வேப்பமரம் எனக்கு சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

``என்னை பார் தோழா! நான் பளிச்சென்று தெரிகிறேன் அல்லவா.

Neem tree

என் கிளைகளை காற்றோடு சேர்த்து காற்றின் இசைக்கு ஏற்ப என் கிளைகளை மிகச்சரியாக அசைத்து அசைத்து நான் உயிர்ப்புடனும் துள்ளலுடனும் இருக்கிறேன் என்று உங்களுக்கு உணர்த்துகிறேன்.

ஆனால் உண்மையில் நான் சந்தோசத்தில் இல்லை. நீ வசிக்கும் இந்த கட்டடத்தின் கம்பிகள் என் வேர்க்கால்கள் எங்கும் பாய்ந்து பிராண்டி இருக்கின்றன பார்த்தாயா?

முடியாது. ஏனென்றால் அதைத்தான் நான் மண்ணிற்குள்ளே மறைத்து வைத்திருக்கிறேன் அல்லவா.

கிளைகளின் வழியே மகிழ்ச்சியை மட்டுமே காட்சி தருகிறேன் உங்களுக்கு. இதைப்போலவே தோழா!

உன் வாழ்வில் உனக்கு நேர்ந்த துன்பங்களை எல்லாம் மனதில் மறைத்துக் கொண்டு இன்பச் சிரிப்பை மட்டும் இதழ்களால் உதிர்த்துக் கொண்டேயிரு. அதுவே உனக்கு அழகு..!

-இப்படிக்கு ராக்கி, அரசுப் பள்ளி ஆசிரியர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/lesson-which-should-we-learn-from-neem-tree

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக