அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலில் வைப்பதற்காக தமிழகத்தில் செய்யப்பட்ட 613 கிலோ எடை கொண்ட வெண்கல மணி நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி சென்றது.
பல நூறு ஆண்டு காலமாக நீடித்து வந்த ராமஜன்ம பூமி - பாபர் மசூதிப் பிரச்னை உச்சநீதி மன்றத் தீர்ப்பினால் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட உள்ளது.
120 ஏக்கர் நிலத்தில் சுமார் 84 ஆயிரம் சதுர அடியில் ராமர் கோயில் அமைய உள்ளது. கோயில் கட்டுமானச் செலவு 300 கோடி மற்றும் கோயில் சுற்றுப்பகுதியை மேம்படுத்த 700 கோடி என ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள ராமர் கோயிலுக்கான அடிக்கல்லினை கடந்த ஆகஸ்ட் 5 - ல் பிரதமர் மோடி நாட்டினார். 161 அடி உயரம், 280 அடி அகலம், 300 அடி நீளத்தில் அமைய உள்ள ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளை சுமார் மூன்றரை ஆண்டுகளில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Also Read: புரட்டாசி சனிக்கிழமை மகிமைகள்... கொரோனா கால வழிபாட்டுக்குச் சில வழிகாட்டுதல்கள்!
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 3 மணி நேரம் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அயோத்தி கோயிலில் வைப்பதற்காக பிரமாண்ட வெண்கல மணி மற்றும் செம்பினால் செய்யப்பட்ட ராமர், சீதை, லட்சுமணர், அனுமன், விநாயகர் சிலைகள் ஆகியன ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னையில் உள்ள சட்ட உரிமைகள் குழு என்ற அமைப்பின் மூலமாக அதன் பொதுச்செயலாளர் ராஜலட்சுமி மன்தா ஏற்பாட்டில் 613 கிலோ எடை கொண்ட பிரமாண்ட வெண்கல மணி உருவாக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உருவாக்கப்பட்ட இந்த மெகா மணி 17-ம் தேதி ராமேஸ்வரத்திற்குக் கொண்டு வரப்பட்டு ராமநாதசுவாமி கோயிலின் முன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் இந்த மணி மற்றும் சுவாமி சிலைகள் அடங்கிய ரதத்தினை மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலையில், பா.ஜ.க மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இந்த ரதம் ஆந்திர, கர்நாடக, மகாராஷ்டிர, டெல்லி மாநிலங்கள் வழியாக 4,552 கிலோமீட்டர்கள் பயணித்து அக்டோபர் 7-ம் தேதி அயோத்தி ராமர் கோயிலை சென்று அடைய இருக்கிறது.
source https://www.vikatan.com/spiritual/temples/a-613-kg-bronze-bell-is-traveling-from-rameswaram-to-ayodhya
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக