Ad

சனி, 19 செப்டம்பர், 2020

தேசியத் தகவல் மையத்தில் சைபர் அட்டாக்! - பிரதமர் மோடி உள்ளிட்டோரின் கணினித் தகவல்கள் திருட்டு?

இந்தியாவின் தேசிய தகவல் மையமான NIC-யில் மிகப்பெரிய இணையவழித் தாக்குதல் நடந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் தேசிய நலன் தொடர்பான தகவல்கள் கொண்ட கணினிகள் குறிவைத்து தாக்கப்பட்டு, அதிலிருக்கும் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மூலம் நடத்தப்பட்ட சைபர் அட்டாக் குறித்து, டெல்லி சிறப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இணைய உலகில் ஹேக்கர்ஸ் என்று சொல்லப்படுபவர்கள் கம்ப்யூட்டரைத் தாக்கும் வல்லமை கொண்ட வைரஸ் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் ஒரு கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தகவல்களைத் திருடுகின்றனர். புரோகிராமிங் செய்யப்படும் வைரஸ் மூலம் நடக்கும் இந்த தாக்குதல் 'சைபர் அட்டாக்' என்று சொல்லப்படுகிறது. மொபைல்போனுக்கும் இந்த அபாயம் உண்டு.

சமீபத்தில், ஆண்ட்ராய்ட் பயனர்களின் தகவல்களைத் திருடும் வகையில் உருவாக்கப்பட்ட பிளாக்ராக் வைரஸ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நரேந்திர மோடி

இதுகுறித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரி, ``ஆன்ட்ராய்டு செல்போன்களில் தகவல்களைத் திருடும் பிளாக்ராக் வைரஸ் பரவி வருவதாக, இந்திய கணினி அவசர தீர்வு மையம் எச்சரித்திருந்தது. இந்த வைரஸ் செல்போன்களில் மின்னஞ்சல், வங்கி சேவை, ஊடகத் தகவல் பரிவர்த்தனை, மின்னணு வர்த்தகம் உள்ளிட்டவற்றுக்கான 300-க்கும் அதிகமான செயலிகளில் நுழைந்து தகவல்களை திருடும் ஆற்றல் கொண்டது. மத்திய அரசின் `சைபர் ஸ்வஸ்தா கேந்திரா' அமைப்பின் மூலம் இணைய சேவை நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையின் கூட்டுடன் பிளாக்ராக் வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் தகவல் திருடும் செயலிகள் வைரஸ்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்’’ என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

Also Read: வங்கிக் கணக்குகளைக் குறிவைக்கும் `பிளாக்ராக் மால்வேர்' - மத்திய அமைச்சர் எச்சரிக்கை

இந்நிலையில், இந்திய தேசிய தகவல் மையத்தில் சைபர் அட்டாக் நடத்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள தேசிய தகவல் மையத்தில்தான் (NIC) அரசின் முக்கிய தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மையம்தான் மத்திய அரசின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை பாதுகாத்து வருகிறது.

தேசிய தகவல் மையத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் கணினிகளில் இருந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எத்தனையோ பாதுகாப்பு வளையங்களை மீறி தகவல்கள் திருடு போயுள்ளதையடுத்து NIC ஊழியர்கள் புகார் அளித்ததன் பேரில் டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவு, இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

டெல்லி காவல்துறையின் (Delhi Police) சிறப்புப் பிரிவுக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின் படி, NIC கணினிகளில் மின்னஞ்சல்கள் மூலம் மால்வேர் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்தவுடன், நமது கணினியில் உள்ள அனைத்து தகவல்களும் மறைந்துவிடும். அப்படித்தான் இந்த தாக்குதலும் நடந்துள்ளது.

மின்னஞ்சல் குறித்து ஆய்வு செய்யப்பட்டபோது, ​​அதன் இணைப்பு பெங்களூரு நிறுவனத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது. போலீஸ் விசாரணையில் இந்த நிறுவனத்தின் ஐபி முகவரி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்துடன் தொடர்புகொண்டுள்ளது பற்றியும் தெரிய வந்துள்ளது.

சைபர் பாதுகாப்பு

இதற்கிடையே, சீனாவில் இருக்கும் அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சென்ஹூவா, இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர்கள், துணைக் குடியரசுத் தலைவர், நடிகர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், வர்த்தக நிறுவனங்கள், முன்னாள் முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோரை உளவு பார்ப்பதாக அண்மையில் செய்தி வெளியானது.

இதுதொடர்பாக தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான நிபுணர் குழு 30 நாள்களில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

சீன வெளியுறவுத்துறையிடம் இது குறித்து பேசியிருப்பதாக ஜெய்சங்கர் சொன்னதையடுத்து, இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்தது. மேலும், அந்த நிறுவனம் சீன நிறுவனம் அல்ல என்றும், தனியார் நிறுவனம் என்றும் கூறி இருந்தது.

அதேபோல், வெளிநாட்டு முக்கிய தகவல் டேட்டா மையமான அது, உலக அளவில் இருக்கும் 24 கோடி தனிப்பட்ட நபர்களின் தகவல்களைத் திரட்டி வைத்து இருப்பதாகவும், இதற்கும் சீன அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. இதே நேரத்தில் நடந்திருக்கும் தேசிய தகவல் மையத்தின் சைபர் அட்டாக், டெல்லி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/cyber-attack-on-delhi-nic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக