சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 22 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றுவிட்ட அந்த மாணவி, ஹாஸ்டல் அறையை காலி செய்வதற்காக தம்பியுடன் கோவைக்கு நேற்று முன்தினம் வந்தார்.
பொருள்களை எடுத்துக்கொண்டு கோவையில் இருந்து சென்னைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். நேற்று அதிகாலை அரக்கோணம் ரயில் நிலையத்தை அந்த ரயில் கடந்து சென்றபோது, மாணவி கழிப்பறைக்குச் சென்றார். அப்போது, படிக்கட்டில் நின்றிருந்த டி.டி.ஆர் ஒருவர், கழிப்பறையில் உள்ள சிறிய ஜன்னல் பகுதி வழியாக செல்போனை நீட்டி மாணவியை படம் பிடிக்க முயற்சித்துள்ளார்.
இதை கவனித்துவிட்ட மாணவி, அதிர்ச்சியடைந்து டி.டி.ஆரைப் பிடித்து கடும் வாக்குவாதம் செய்தார். சக பயணிகளின் உதவியுடன் செல்போனை வாங்கிப் பார்த்தபோது, மாணவியின் சில படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தை சென்றடைந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, அந்த மாணவி பெரம்பூர் ரயில்வே போலீஸில் புகார் அளித்தார்.
புகார் மனு அரக்கோணம் ரயில்வே போலீஸுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி, சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த டி.டி.ஆர் மேகநாதன் (26) என்பவரைக் கைதுசெய்து, அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். ஓடும் ரயிலில் மாணவிக்கு நேர்ந்த இந்தச் சம்பவம், மற்ற பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/social-affairs/crime/arakkonam-ttr-arrested-for-taking-photo-of-college-student
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக