வடசென்னை கல்வெட்டு ரவி, சத்யா, நெடுங்குன்றம் சூர்யா என தமிழக பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவரும் குற்றப் பின்னணி நபர்களால் அதிர்ச்சியில் உறைந்துள்ளன தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள். ``குற்றப் பின்னணி நபர்கள் பா.ஜ.க-வில் இணைவதற்கு நான்கு முக்கிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறுபவர்கள் யாரும் கட்சியில் நீடிக்க முடியாது" என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
படப்பை குணா; நெடுங்குன்றம் சூர்யா!
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஓட்டேரியில் ஆகஸ்ட் 31-ம் தேதி மாற்றுக் கட்சியினர் பா.ஜ.க-வில் இணையும் நிகழ்வு, மாநிலத் தலைவர் முருகன் முன்னிலையில் நடந்தது. இதற்காக ரௌடி நெடுங்குன்றம் சூர்யா உள்ளிட்டவர்கள் வருவதாகக் கிடைத்த தகவலையடுத்து, போலீஸ் சோதனை பலப்படுத்தப்பட்டது. இதையறிந்து பா.ஜ.க-வின் முக்கியப் பிரமுகர் ஒருவரின் காரில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டார் சூர்யா. இதையடுத்து, அங்கு சுற்றித்திரிந்த சூர்யா ஆதரவாளர்கள் சிலர் வளைக்கப்பட்டனர்.
அதேபோல், காஞ்சிபுரம் பகுதியில் முக்கிய நபராக வலம்வரும் படப்பை குணா என்பவரும், பா.ஜ.க-வில் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்திவருவதாகச் சொல்லப்படுகிறது. குற்றப் பின்னணி விவகார சர்ச்சைக்கு பதில் கொடுத்த பா.ஜ.க தலைவர் முருகன், `எங்கள் கட்சியில் சேர வருபவர்களின் பின்புலத்தை ஆராய முடியாது' என்று பேட்டியளித்தார்.
ஏன்?
`பா.ஜ.க-வில் தொடர்ச்சியாக ரௌடிகளைச் சேர்ப்பது ஏன்?' என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். முதலில் பேசத் தயங்கியவர்கள், பின்னர் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.
`` திராவிடக் கட்சிகளைப்போல பா.ஜ.க-வை வளர்க்க வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய அஜெண்டா. அதையொட்டியே கட்சிக்குள் பலரையும் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். முக்கியமாக, சேரிப் பகுதிகளை இலக்காகவைத்து, கட்சிக்கு ஆட்களைக் கொண்டுவந்து சேர்த்துக்கொண்டிருக்கிறோம்" என்றனர்.
Also Read: கோவை: `கொங்கு டார்கெட்; டிசம்பரில் திருப்புமுனை!' - பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன்
ரௌடிகளுக்கு நான்கு விதிகள்!
தொடர்ந்து பேசுகையில், `` ரௌடிகளைக் கட்சிக்குள் கொண்டு வருவதில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. `பா.ஜ.க-வில் சேர விரும்பும் நபர்மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் இருக்கக் கூடாது; திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடாது; கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தப் புதிய வழக்கும் இருக்கக் கூடாது; குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றிருக்கக் கூடாது' ஆகிய நான்கு விதிகள் மிக முக்கியமானவை.
அந்த வகையில், கல்வெட்டு ரவிமீது கடந்த ஐந்தாண்டுகளாக எந்த வழக்கும் இல்லை. குற்றப் பின்னணியைக் கைவிட்டுவிட்டு திருந்தி வாழ்வதற்காகத்தான், அவர் கட்சிக்குள் வந்தார். இதை ஒரு பெரிய விஷயமாகப் பேசுகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க-வில் ரௌடிகளே இல்லையா..? ரௌடியிசத்தை ஊக்குவித்ததே தி.மு.க-தான். கல்வெட்டு ரவிமீது மூன்று பழைய வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவர் கரு.நாகராஜன் மூலமாகக் கட்சிக்குள் வந்தார். அவருக்கு விரைவில் மீனவர் அணியில் மாநிலப் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது. இதை ஒரு சர்ச்சையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்றனர்.
இனி நோ `ஜி!'
இது குறித்து மத்திய சென்னை பா.ஜ.க எஸ்.சி அணித் தலைவர் பாலச்சந்தரிடம் பேசினோம்.
`` எர்ணாவூர் நாராயணன்மீது ஒருகாலத்தில் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் இருந்தது. இன்று அவர் அரசியலில் சமூக சேவை செய்துவருகிறார். எங்கள் கட்சிக்குள் வந்த பிறகு குற்றச் செயல்களைச் செய்தால், தலைமை உறுதியாக நடவடிக்கை எடுக்கும். அதேபோல், `` `வாங்க ஜி', `போங்க ஜி', `நமஸ்தே ஜி' என்ற வார்த்தைகள் எல்லாம் இனி வேண்டாம். திராவிடக் கட்சிகள் எப்படித் தங்களை வளர்த்துக்கொண்டார்களோ, அதைப்போல கட்சியை வளர்க்கப் பாருங்கள்" எனத் தலைவர் உறுதியாகக் கூறிவிட்டார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் துணைத் தலைவராக இருந்தும், அவரிடம் ஒரு கார் வாங்கக்கூட காசு இல்லை. தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, கட்சித் தலைமைதான் கார் வாங்கிக் கொடுத்தது. அந்த அளவுக்கு நேர்மையானவர். விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. ரௌடிகளை மறைவாக வைத்துக்கொண்டு திராவிடக் கட்சிகள் கட்சியை வளர்க்கின்றன. நேர்மையாக வெற்றி பெறுவதற்கு யாரும் தேவையில்லை. அநியாயமாக வெற்றி பெறுவதற்காகத்தான் அவர்கள் ரௌடிகளை வைத்துள்ளனர். அவ்வாறு மிரட்டல் வந்தால், நாங்களும் எதிர்கொள்ள வேண்டுமல்லவா? எங்கள் கட்சிக்குள் ரௌடிகள் இருக்கலாம், ஆனால், ரௌடியிசத்தை ஊக்குவிக்கக் கூடாது என்பதை முக்கியக் கொள்கையாக வைத்திருக்கிறோம்.
Also Read: `அசராத' ஸ்டாலின், அசரடிக்கும் எடப்பாடி, 'கிட்னாப்' முருகன்... - தலைவர்கள் ரெடி!
ஜெயக்குமார், சேகர் பாபுவுக்கு செக்!
குற்றப் பின்னணிகொண்டவர்கள் கட்சிக்குள் வந்தாலும், அவர்களுக்குத் தொடர்ந்து வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். வடசென்னையில் பெரும்பாலான பூத்களில் ஜெயக்குமார், சேகர் பாபு ஆகியோரின் ஆதிக்கம் இருக்கிறது. இதை முறியடிக்க எங்களுக்கும் சிலர் தேவைப்படுகிறார்கள். திராவிடக் கட்சிகளில் அடித்தட்டுத் தொண்டர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பதவிகள் கிடைக்காது. அப்படியே பதவி கிடைத்தாலும், பணபலம் முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க-வில் பணபலம் இருக்க வேண்டிய அவசியமில்லை; கடுமையாக வேலை பார்த்தால் பதவிகள் கிடைக்கும். குற்றப் பின்னணி ஆட்கள் கட்சிக்குள் வந்த பிறகு அவர்களின் நன்னடத்தையை ஆராய்ந்துதான் தலைமை பதவி கொடுக்கிறது. அதன் பிறகும் அவர்கள் தவறு செய்தால், கட்சியைவிட்டு நீக்கப்படுவார்கள். இங்கு மரியாதை கிடைப்பதால்தான், பலரும் பா.ஜ.க-வை நோக்கி வருகிறார்கள்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-murugans-strategy-on-2021-assembly-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக