Ad

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

`தலைமைக்குப் புகார்; மார்ஃபிங்!' - குமரி அ.தி.மு.க-வில் புகைச்சலை ஏற்படுத்திய வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக இருப்பவர் கிருஷ்ணகுமார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்தின் உதவியாளராகவும் செயல்பட்டு வருகிறார். கிருஷ்ணகுமாரின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அதில் வேறு யாரும் உடன் இருப்பது போன்ற காட்சி இல்லை. சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதுபோன்ற வீடியோ வெளியாகியிருப்பது அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமாரிடம் பேசினோம்.``கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகனுக்கு எதிராக நாங்க டீமா சேர்ந்து மெட்ராஸுக்குப் போய் பெட்டிஷன் கொடுத்தோம். அதனால, என்னை எதாவது பண்ணணும்னு அசோகன் குறியா இருக்கார். இது மட்டுமில்ல இன்னும் ஜாஸ்தியாத்தான் எதிர்பார்க்கேன். இன்னும் நிறைய செட்டப் பண்ணுவாங்க. நான் அண்ணன்கிட்ட (தளவாய் சுந்தரம்) கலந்துபேசி பெட்டிஷன் கொடுப்பமான்னு கேட்டேன். `ஒரே கட்சிக்குள்ள புகார் கொடுக்க வேண்டாம். மேல கேட்டுகிட்டு சொல்லுறே'ன்னு சொல்லியிருக்கிறார்.

அ.தி.முக மாவட்டச் செயலாளர் அசோகன்

இதுல நிறைய மார்ஃபிங் நடந்திருக்கு. அதனால இதுபத்தி விளக்கம் கொடுக்க ஃபேஸ்புக்குல போடலாமான்னும் அண்ணனுகிட்ட கேட்டேன். `நீ வெயிட் பண்ணுப்பா கட்சி மாவட்டச் செயலாளருக்கு எதிரா நீ எதுவும் பண்ணாத'ன்னு தடுத்துகிட்டிருக்கார். இன்னும் டூமச்சா பண்ணுவாங்க. நம்மள முடக்கணும்னு பாப்பாங்க. ஆனா அவருக்கு எதிரா நான் களம் இறங்குனதுனால இனி விடப்போறதா இல்ல" என்றார் ஆவேசமாக.

இந்த புகார் குறித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் அசோகனிடம் பேசினோம். ``அவங்க கம்ப்ளைண்ட் கொடுத்ததுனால எனக்கு பெருசா ஒண்ணும் கிடையாது. அது எங்க உட்கட்சி பிரச்னை. நான் எங்க கட்சிகாரங்கள விட்டுக் கொடுப்பேனா? எங்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளரை எதாவது பண்ணினா கட்சிக்கு இல்ல கெட்டப்பேரு. அவங்க என்னவேணும்னாலும் சொல்லட்டும். எனக்கும் அந்த வீடியோவுக்கும் சம்பந்தம் இல்ல" என்றார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம்

இதுகுறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,``தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் கடந்த மாதம் அளித்த பேட்டியில்,`எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்வர் வேட்பாளர்' என கூறியிருந்தார். அந்த பேட்டியின்போது ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான அ.தி.மு.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகனும் உடன் இருந்தார். இதனால், அசோகன் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவிவிட்டதாக செய்திகள் பரவியது. அதற்கு மறுப்பு தெரிவித்த அசோகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், `தான் என்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்" என விளக்கம் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்துதான் ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் சென்னை சென்று அசோகனை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என புகார் அளித்திருந்தனர். இதுதான் இருதரப்புக்கும் புகைச்சல் ஏற்பட காரணம்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/kanyakumari-admk-cadres-complain-each-other-over-viral-video

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக