பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரித்தின் உச்சத்தில் இருந்தார்கள் என்பதற்கு கீழடி ஆய்வு முடிவுகளே சாட்சி.
ஒரு இனம் நாகரிகத்தில் உயர்ந்து இருந்த காலம் தெரியுமாயின் அந்த இனம் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும் அல்லவா! அப்படிப் பார்த்தால் 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழரின் வாழ்வு முறை தொடங்கியிருக்க வேண்டும். வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாற்றை எழுதும்பொழுது சிந்து சமவெளியில் இருந்தே தொடங்குகிறார்கள். இந்த மொகஞ்சதாரோ - ஹரப்பா நாகரிகம் குறித்து கூறும் அத்தனை கருத்துகளும் கீழடி ஆய்வுகளின் கருத்துகளோடு ஒத்திருப்பதைக் காண்கிறோம்.
ஒரு மொழியின் தொன்மை என்பது மனிதன் பேசத்தொடங்கிய காலத்தில் இருந்தே தொடங்குகிறது. தமிழ் எழுத்துக்களின் குறியீடுகள் ஓர் அகழ்வாய்வில் கிடைப்பது என்பது தமிழின் தொன்மையைக் குறிக்கிறது என்று கருதலாம். தமிழ் மொழி ஆய்வில் ஈடுபட்ட ஆங்கிலப்பாதிரியார் ஜி.யூ.போப் புறநானூற்றுப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு 'Tamil Heroic Poems' என்ற பெயரைச் சூட்டி இருந்தார். உண்மையில் அகநானூறும் புறநானூறும் காதலையும் வீரத்தையும் மட்டுமே குறிப்பதாகவே நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது இந்திய மொழிகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்ட சில ஆய்வாளர்களால், இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாயாக இருந்து இந்திய 'அறிவுக் கோட்பாட்டை' வளர்த்து எடுத்தது சமஸ்கிருதம் என்ற கருத்து நிலை உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் கல்வி முறையை அடியோடு மாற்றி வெறும் எழுத்தர்களை (Clerks) உருவாக்கும் கல்வியைக் கொண்டு வந்த மெக்காலே தன் பங்கிற்கு இந்திய மொழிகளிலும் தலையிட்டு உலகின் ஐந்து மொழிகள் மட்டுமே செம்மொழிகள் என்று அறிவித்தார். அதில் தமிழ் மொழி இடம் பெறவில்லை. இது வரலாறு. ஆனால் சமஸ்கிருதம் முதலிடம் பெற்றது. அதன் பின்னணியில் இருந்த அரசியலைப் புரிந்து கொண்ட தமிழ் அறிஞர்கள் விழித்துக்கொண்டு தமிழே செம்மொழி என்பதை ஆதாரங்களோடு நிரூபித்தார்கள்.
இந்த இடத்தில்தான் கீழடி ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கீழடி ஆய்வுகள் மூலம் நாம் பெறப்போவது தமிழ் இனத்தின் தொன்மை பற்றிய வரலாறு மட்டுமல்ல, தமிழர்களின் பண்பாடும் அறிவுத்திறன் சார்ந்த கலைத்திறமையும் வாழ்க்கைக் கோட்பாடுகளும் தெரிய வருகின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வர்ணங்களின் தன்மைகளை (Colouring and painting knowledge) அறிந்திருந்ததால் தான் வர்ணங்களை உருவாக்கி மண்பாண்டங்களில் வர்ணங்களைத் தீட்டி இருக்கிறான். வர்ணங்கள் உருவாக்கும் திறனைப் பெற்றிருந்தான் என்பது உண்மையென்றால் அதற்கான ரசாயன அறிவு வேண்டும். அந்த அறிவு மூலிகைச் சாற்றிலிருந்து பெற்றிருக்க வேண்டும். அதனால் அவனது மூலிகைகள் பற்றிய அறிவும், அவனது காடுகள் பற்றிய அறிவும் தெரிய வருகின்றன.
அது மட்டுல்ல, கீழடிப் பகுதிகளில் தெரிய வருகின்ற சாயப்பட்டறைகள் இருந்ததற்கான குறியீடுகள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.
இறந்தவர்கள் உடல்களை எரியூட்டாமல் மண்பாண்டங்களில் வைத்துப் புதைக்கும் அறிவைப் பெற்றிருந்ததையும் இவ்வாய்வின் மூலம் அறிகிறோம். இது எகிப்தின் பிரமிடுகளை ஒத்திருக்கிறது. உலகின் வெவ்வேறு தேசங்களில் காணப்படும் வழக்கங்கள் எப்படி இரு வேறு தேசங்களின் பண்பாடாயின என்பதை மேலும் ஆராய்ந்தால் மனித இனத்தின் வரலாறுகள் இன்னும் தெளிவாகும்.
வரி வடிவங்கள் அங்கு வாழ்ந்த மக்களின் மொழி அறிவை எடுத்துக்காட்டுவதுடன் அம்மக்களின் கல்வி அறிவையும் காட்டுகிறது. அங்கு கிடைத்துள்ள அணிகலன்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் அவர்களின் நவரத்தினங்கள் பற்றிய அறிவையும் (Gemmology) காட்டுகிறது.
மேலும் கட்டடங்கள் மற்றும் நகர அமைப்புகள் பற்றிய அறிவு முதலியன பிரமிக்க வைக்கிறது. இவ்வாறு பல துறைகளிலும் தமிழரின் அறிவும் திறமைகளும் தெரிய வருகின்றன.
இவை எல்லாம் ஒரு புறமிருக்க தமிழ் மொழி வரலாறும் வாழ்வியல் கோட்பாடுகள் பற்றிய விவரங்களும் இன்னும் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏன் என்றால் முதல் சங்ககால வாழ்க்கை பற்றிய விடைத் தெரியாத கேள்விகள் பலவற்றிற்கும் விடைகள் அறியப்பட வேண்டும்.
அகத்தியர், தொல்காப்பியர் போன்றவர்கள் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள். அகத்தியமும் தொல்காப்பியமும் தமிழின் முதல் நூல்கள். அகத்தியர் மொழி பற்றி மட்டுமின்றி மருத்துவம், சோதிடம், வானியல் போன்றவற்றையும் தமிழ் மொழியில் தந்திருக்கிறார்.
வேத கால முனிவராகவும் ரிக் வேதத்தை இயற்றியவர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார் அகத்தியர். அவரைப் பற்றிய முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கீழடி ஆய்வுகளில் மொழி பற்றிய கருத்துக்களும் இடம் பெறுவதால் அகத்தியம், தொல்காப்பியம் பற்றி மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியத்தீபகற்பத்துடன் இணைந்த நிலப்பரப்பாகக் கருதப்படுகின்ற, லெமூரியா எனும் கடல்கொண்ட பகுதி உண்மையா என்பது பற்றிய ஆய்வுகள் இனி வலுப்பெறும் என்று நம்பலாம்.
மேலும் ஒரு சுவையான செய்தி. இலங்கையில் ஒரு பழைமையான நதியின் பெயர் தாமிரபரணி . அங்குள்ள ஒரு ஊரின் பெயர் திருநெல்வேலி என்பதாகும். இலங்கையை பல தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள் இலங்கை மக்களின் பழக்க வழக்கங்கள், கலாசாரம் முதலியன நமது கலாசாரங்களுடன் ஒத்திருக்கிறது. எனவே கீழடி ஆய்வுகளின் தொடர்ச்சியாக லெமூரியா பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டால் பூம்புகார், கடல் கொண்ட கபாடபுரம், கடல் கொண்ட தமிழ்ச்சங்கம் பற்றியும் தரவுகள் கிடைக்கலாம். இன்னும் சிலர் கூறுவது போல் சேது சமுத்திரம், ராமர் பாலம் போன்றவற்றின் உண்மைத்தன்மைகள் அறிவதற்கான சாத்தியங்கள் ஏற்படும். அது மட்டுல்ல ஏற்கனவே அறியப்பட்டிருக்கிற உலக வரலாறும்கூட திருத்தப்படலாம்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கீழடி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே அறிஞர்களின் கருத்து. எனவே நாமும் கீழடி ஆய்வுகள் குறித்து அறிந்து கொண்டு நம் ஆதரவைத் தந்து நம் வரலாற்றுக் கடமையை ஆற்றுவோம்.
- கமலநாபன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/government-and-politics/archaeology/article-about-keezhadi-research-excavations
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக