Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

``விலகிய ஆமீர் கான்... கடுப்படித்த ரஹ்மான்... ஜாக்கியின் அந்த கண்ணீர்!'' #25YearsOfRangeela

`ரங்கீலா' எனும் கலர்ஃபுல் காதல் வானவில் வெள்ளித்திரையில் உதித்து 25 ஆண்டுகள் ஆகிற்று.

ஏ.ஆர்.ரஹ்மான் எல்லோருக்கும் நன்றி சொல்லி 25 வருட கொண்டாட்டத்துக்கு அடையாளமாக தனி வீடியோவே போட்டிருக்கிறார். பாலிவுட்டில் அவரின் முதல் அஃபிஷியல் என்ட்ரி அல்லவா!

ரங்கீலா - இந்திய சினிமாவில் சிறந்த காதல் படங்களை பட்டியலிட்டால் முதல் பத்து இடங்களுக்குள் நிச்சயம் இடம்பிடித்துவிடும்.
Rangeela

படத்தின் இயக்குநர் ராம் கோபால் வர்மாவோ, "ஏங்க எனக்கு லவ் ஸ்டோரீஸ்னாலே முகத்துல பிம்பிள்ஸ் வந்துடும். நான் அமிதாப் பச்சன் படம் பார்த்து வளர்ந்தவன். ராஜேஷ் கன்னாவோட ஒருபடம்கூட நான் பார்த்ததே இல்லை. சத்தியமா ரங்கீலாவை காதல் படமா நினைச்சு எடுக்கவே இல்லை. மூணு கேரக்டர்களோட எமோஷன்ஸை வெச்சு ஜாலியா ஒரு படம் பண்ணலாமேனு எழுதுன கதை அது!" என்று சிரிக்கிறார்.

"முதலில் ஸ்கிரிப்ட்டைக் கேட்டு ஆமீர்கான் பயங்கர கோபப்பட்டார். 'இந்தக் கதையில் நானென்ன காமெடியனா? கைகால் நல்லாத்தானே இருக்கு? அப்புறம் ஏன் ஊர்மிளாவுக்கு என் லவ் புரியலை. நான் பண்ணலை!' என ஆமீர் புராஜெக்ட்டிலிருந்தே விலகிக் கொண்டார். ஊர்மிளாவைப் பற்றி நிறைய பேசிட்டேன். ஊர்மிளா அழகுல மயங்கித்தான் ஒவ்வொரு ஃபிரேமும் படத்துல வெச்சேன்."

இண்டெஸ்ட்ரிக்கு ராம்கோபால் வர்மா அறிமுகமான முதல் படம் நாகார்ஜுனாவின் மல்ட்டி லாங்குவேஜ் 'சிவா'!

படம் தெலுங்கு, தமிழ், இந்தி என வெற்றி பெற்றதால் தயாரிப்பாளர் ஜமு சுகந்த் ஆசை ஆசையாய் ஆமீர்கான், சஞ்சய் தத் கால்ஷீட்டை 'ரங்கீலா'வுக்காக வாங்கி வைத்திருந்தார். ஆமீர் விலகியதாலேயே சஞ்சய் தத்தும் வேறு படத்துக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார்.

"ரங்கீலா டேக்-ஆஃப் ஆகவே ஆகாது என நினைக்க இந்த ஒரு காரணமே போதாதா? முன்பு சென்னைக்கு வரும்போதெல்லாம் மணிரத்னத்தை சந்திப்பேன். 'ரோஜா' சமயத்தில் திலீப் என்ற இளைஞரை மணி எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நான் பெரிதாய் கண்டுகொள்ளாமல் 'ஹாய்' மட்டும் சொல்லி வைத்தேன். ஆனால், படம் ரிலீஸான போது அந்தப் படத்தின் பாடல்கள், அதன் வித்தியாசமான சவுண்ட் என்னை ரொம்பவே ஈர்த்தது. இந்தப் பையனை வெச்சு மியூசிக்கல் ஸ்டோரி ஒண்ணை நாம பண்ணணும் என நினைத்தேன். அப்போது உதித்ததுதான் 'ரங்கீலா'.

Rangeela Audio Launch

தயாரிப்பாளர் தரப்போ அப்போது பாலிவுட்டில் பிரபலமாக இருந்த அனு மாலிக்கை மியூசிக் டைரக்டரா கமிட் பண்ணவே ஆர்வம் காட்டியது. தென்னிந்திய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்த அவர்களுக்கு விருப்பமில்லை. நான் ரஹ்மான் மீது நம்பிக்கை வைத்து புராஜெக்ட்டுக்குள் அழைத்து வந்தேன். ஆனால், ரஹ்மானின் வொர்க்கிங் ஸ்டைல் ஆரம்பத்தில் 'எனக்கு தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்துட்டோமோ?' என நினைக்க வைத்தது. ரஹ்மான் மீது கோபமெல்லாம்கூட வந்தது தெரியுமா?" என சின்ன ஆச்சர்யம் கொடுத்து ரஹ்மான் 'ரங்கீலா' ஆல்பத்தைக் கொடுத்த விதத்தை விவரிக்கிறார் ஆர்.ஜி.வி.

"இருக்காதா பின்னே? சென்னைக்கு ரஹ்மானோட அந்த குட்டி ஸ்டூடியோல ஒரு பாட்டுக்கு கம்போஸிங் உட்கார்ந்தா மென்மையான வாய்ஸில் அவர் பாடிக்காட்டிய ட்யூன்லாம் சத்தியமா புரியவே இல்லை. செம மூட் ஸ்பாய்லராக இருந்தது. இது சரிப்பட்டு வராது. பேசாம நாம நினைச்ச சிச்சுவேஷன்களை சொல்லிட்டு கிளம்பிடுவோம். அப்புறம் ரஹ்மான் 'ரங்கீலா'ல இருக்காரா இல்லையானு முடிவெடுத்துக்குவோம்னு மனசுல நினைச்சுட்டு கிளம்பினேன்.

இன்னொரு பக்கம் படத்திலிருந்து விலகிய ஆமீர்கானை நேர்ல சந்திச்சு, கதையை மீண்டும் விவரிச்சேன். அவரோட கேரக்டர் பலவீனமா இருக்கிறதா அவர் சொன்னார். சஞ்சய் தத் நடிக்கிறதா இருந்த அந்த சினிமா ஸ்டார் ராஜ்கமல் கேரக்டரை வில்லனா மாத்திடுங்கனு சொன்னார். 'ஐயோ ஆமீர்... நிஜ வாழ்க்கைல நாம என்ன வில்லன்களாவா இருக்குறோம். அந்தந்த நேரத்து எமோஷன்ஸ் எல்லோருக்கும் சமம்தானே... காதல் விஷயத்துல நாம டீப்பா ஒண்ணை உணர்றோம் இல்லையா... அதான் படத்தோட மையமே. 'ரங்கீலா'ல யாருமே வில்லன் இல்லை. எல்லோருமே நல்லவங்கதான்!' என விலக்கினேன். ஆமீர் கன்வின்ஸ் ஆகலை. 'அப்படினா ஊர்மிளா ஏன் என் லவ்வை புரிஞ்சுக்க மாட்டேங்குறா? நடுவுல கமல் வந்ததும் ஏன் நான் கடுப்பாகணும்?' என கேள்விகளாகவே கேட்டுக்கொண்டிருந்தார்.

Rangeela

இறுதியில் கன்வின்ஸ் ஆகாமலேயே, 'ராமிஜி... உங்க கதை... இவ்ளோ கான்ஃபிடன்ஸா நீங்க சொல்றதால படத்தை பண்றேன். முன்னா கேரக்டரைப் பார்த்ததும் ஆடியன்ஸ் கடுப்பானாங்கன்னா நான் பொறுப்பில்லை!' என்று சொல்லித்தான் புராஜெக்ட்டுக்குள் வந்தார் ஆமீர். ஆனால், அவர் ஏன் இந்தியாவின் சிறந்த நடிகராக இன்று கொண்டாடப்படுகிறார் என்பது பிறகு புரிந்தது. அரைமனதோடு 'ரங்கீலா'வுக்குள் வந்த அவர் ஒருநாளும் அரை மனதோடு நடிக்கவே இல்லை. கமிட்மென்ட், டெடிகேஷன் என்ற வார்த்தைக்கு அகராதியில் ஆமீர் பெயர் நிச்சயம் இருக்கும். படம் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானதும், 'ராமிஜி நான் உங்ககிட்ட தோத்துட்டேன். நீங்க சரியாத்தான் கணிச்சிருக்கீங்க!' என ஓப்பனாகவே சொன்னார்.

'இல்லை ஆமீர்... ஒருவேளை படம் ஓடலைனா நீங்க கணிச்சது சரியா ஆகியிருக்கும். இது நானேகூட ரிஸ்க் எடுத்த ஒண்ணுதான்!' எனச் சொன்னேன். தலையாட்டி ஆமோதித்தார். சரி... ரஹ்மானுக்கு வருவோம்.

சஞ்சய்தத்துக்குப் பதிலாக ஜாக்கி ஜெராஃபை வைத்து ஷூட்டிங் ஆரம்பித்து விட்டேன். ஆனால், ரஹ்மானிடமிருந்து டியூன் எதுவும் வரலை. முதன்முதல்ல ஒரு மியூஸிக் பிட்டைப் போட்டு 'தீம் மியூசிக் சார்!' என ஆடியோவை எனக்கு அனுப்பியிருந்தார். ஊர்மிளா வேகமாக டான்ஸ் ஆடும் பாடலில் வராத மியூசிக் பிட் அது. என் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. என் கார் டிரைவர், 'என்னா சார் இது. நல்லாவே இல்லை!' என்றார். 'போச்சுடா' என நினைத்தேன். நான் போகுமிடமெல்லாம் அன்று முழுவதும் கேட்டேன். மாலையில் என் செட்டில் இருந்த பாதிபேர் அந்த தீம் மியூசிக்கை ஹம் செய்ய ஆரம்பித்தார்கள். உடனே சரோஜ் கானை வரவைத்து ஊர்மிளாவுக்கு கொரியோகிராப் பண்ண வைத்து அடுத்த நாளே ஷூட்டிங் போனேன். ஷூட்டிங் முடிந்து வீடு வந்தபோது என் டிரைவரும் நானும் ஹம் பண்ணிக்கொண்டிருந்தோம்.

ஊர்மிளா - ரங்கீலா

இப்படி ஒவ்வொரு பாடலுக்கும் அழகான மெமரீஸ் உண்டு. 'ரங்கீலா ரே' பாட ஆஷா போன்ஸ்லே வந்ததும் ஒரே டேக்கில் மியூசிக் இல்லாமலேயே பாடிக்கொடுத்துவிட்டு கிளம்பினார். பாடலாக எப்படி வரும் என அவருக்குமே தெரியவில்லை. ஆனால், டியூன் வித்தியாசமா இருக்கு என ரஹ்மானை வாழ்த்திவிட்டுப்போனார். நம்ம சிற்றறிவுக்குதான் எட்டலையோ என நினைத்தேன். அதேபோல 'பாலிவுட்டின் வாலி' கவிஞர் ஜாவேத் அக்தரோட தேதி கிடைக்காததால் மெஹ்பூப் என்பவரை அவசரத்துக்கு ஃபிக்ஸ் பண்ணியிருந்தேன். 'டியூன் கஷ்டமா இருக்கு!' என்று அவர் சொன்னால் 'அதுக்குதானே உங்களை ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன்!' என்பேன். பதற்றத்தோடு எழுதினார். அந்த ஆண்டின் விருதுகளை வாரிக்குவித்து அவரும் பாலிவுட்டில் அழுத்தமாக கால் பதித்தார்.

உதாரணத்துக்கு 'ஹே ராமா' பாடலை கம்போஸ் பண்ண அவரை கோவாவுக்கு அழைத்துப்போயிருந்தேன். படத்தில் ஜாக்கி ஷெராப்பின் கற்பனையில் வரும் எரோட்டிக் பாடல் அது. சிச்சுவேஷனை சொல்லியாச்சு. கோவாவுக்கு வந்து பீச் வியூ ரெசார்ட்ல ரஹ்மானுக்கு தனி ரூம் புக் பண்ணியாச்சு. இனிமே ரஹ்மான்கிட்ட இருந்து டியூன் வரும் என 4 நாள் காத்திருந்து ஏமாந்து போனேன். கடைசி வரை டியூன் எதையும் போடாமல் ரூமுக்குள் அடைபட்டுக் கிடந்தார். செம கோபத்தில் ரூமைக் காலி செய்து சென்னை திரும்பினோம். ரஹ்மானிடம் சரியாகக்கூட முகம் கொடுத்து பேசவில்லை. நான் ஹைதராபாத் போனதும் ரஹ்மானிடமிருந்து ஒரு ஆடியோ வந்திருந்தது. 'ஹே ராமா' பாடலை கர்னாட்டிக், கஸல், வீணை எல்லாம் கலந்து கட்டி கொடுத்திருந்தார். நான் மிஸ்டர் இந்தியால வர்ற ஒரு பாடலை மனசுக்குள் ரெஃபெரென்ஸ் வெச்சிருந்தேன். 'மாத்தி அனுப்பிட்டீங்களா, ரொம்ப மெலோடியா இருக்கே ரஹ்மான்?' என்றேன். 'சரியா வரும் சார்' என்றார்.

Rangeela

சிவமணியை அழைத்து ட்ரம்ஸ் இசையைச் சேர்த்து வேறொன்றாய் மாற்றியிருந்தார் ரஹ்மான். கோவால ரூமுக்குள் ரஹ்மான் 'முகல் ஈ ஆஸம்' படம் பார்த்துருக்கார். திலீப் குமார்- மதுபாலா வர்ற ஒரு சீன்ல பதே குலாம் அலிகான் சாரோட சின்ன ஆலாபனை வரும். அந்த இன்ஸ்பிரேஷன்ல இந்தப் பாட்டை மனசுக்குள்ளே கம்போஸ் செஞ்சிட்ந்த்தான் சென்னை வந்திருக்கிறார். ஹரிஹரன்- ஸ்வர்ணலதா வாய்ஸில் தெய்வ லெவல் பாட்டு அது.

மீண்டும் மீண்டும் கேட்டுக்கேட்டு 'அடிக்ட்' ஆகிவிட்டேன். இன்றும் மில்லினியல்ஸோட ப்ளே லிஸ்ட்ல அந்தப் பாட்டு தவறாமல் இடம் பிடிச்சிருக்குனா ரஹ்மானோட மேதமைதான் காரணம்.

'மங்தாகே கியா' பாடலை ரஹ்மானே பாடியபோது பாடல் ஹிட்டாகுமானு சந்தேகம் இருந்தது. 'அய்யய்யோ' என ஒரு ஓப்பனிங் மீனிங்லெஸ் வார்த்தைகளைக் கேட்டா சிரிச்சிடுவாங்களோனு பயந்தேன். ரஹ்மான் மறுத்தார். 'சார் செமையா ஒர்க் அவுட் ஆகும்!' என்றார். அந்த வருடத்தின் சூப்பர் கண்டுபிடிப்புனு எல்லோரும் அவர் வாய்ஸைக் கொண்டாடுனாங்க. 'யாரோ ஸூன்லோ ஸரா' பாட்டைப் பாடின உதித் நாராயண் துள்ளிக்குதித்து, 'திஸ் பாய் வில் கோ ப்ளேஸஸ்' என்றது ஞாபகத்தில் இருக்கு. அவரோட வாய்ஸ் மோடுக்கு மேட்ச் ஆகாத மெலோடி குயின் சித்ராவை டூயட் பாட வெச்சது, உதித்தின் 7 வயசு மகன் ஆதித்ய நாராயணை ஆஷா போன்ஸ்லேவோடு பாட வைத்தது, 'பியார் ஏ ஜானே கெய்ஸா'வில் கவிதா கிருஷ்ணமூர்த்தி - சுரேஷ் வாட்கர் காம்போ, ஸ்வேதா ஷெட்டியோட ஓப்ரா ஸ்டைல் வாய்ஸ்... இப்படி ரஹ்மானைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்!" என ஏகத்துக்கும் சிலிர்க்கிறார் ராம்கோபால் வர்மா.

A R Rahman

"ரஹ்மானைத்தாண்டியும் சில மேஜிக்கல் மொமன்ட்ஸ் படத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கு. டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான் திடீர்னு ஷூட்டிங் வராததால் லீவு சொல்ல வந்த அவரோட மகன் அகமது கானை நான் மிரட்டி டான்ஸ் கொரியோகிராப் பண்ண வெச்சு அதுக்கு விருதுகள் கிடைச்சது. காஸ்ட்யூம் டிஸைனர் நீது லல்லாவின் டைம் கிடைக்காமல் அவர் அசிஸ்டென்ட் மனீஷ் மல்ஹோத்ராவை 'ரங்கீலா'வில் அறிமுகப்படுத்தியது... அவர் சொன்ன சிம்பிள் ஐடியாவில் ஜாக்கி ஷெராப்பின் பனியனைக் கழட்டி 'தனுஹா தனுஹா' பாடலில் பீச்சில் ஓடவிட்டு இந்தியாவையே ஜொள்ளுவிட வைத்தது... எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

Also Read: மீடியா பசிக்கு இரையா ரியா?

ராம் கோபால் வர்மா

படத்தில் ஜாக்கி ஷெராப் கேரக்டர் க்ளைமாக்ஸில் விட்டுக் கொடுக்கணும். ஆனா, ஆடியன்ஸ்ல ஒரு ஆள்கூட வருத்தத்துல போகக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஆனால், என்னால் தெளிவாக ஸ்கிரிப்ட்டில் முடிவைக் கொடுக்க முடியலை. ஜாக்கி ஷெராப் எப்படி நடிக்கப்போகிறார் என நகம் கடித்து க்ளைமாக்ஸை ஷூட் பண்ணேன். நானே எதிர்பார்க்காத ஒரு ரியாக்‌ஷனை கண்ணில் கண்ணீர் மினுங்க விடை கொடுப்பதோடு அதிர்ந்து ஒரு சிரிப்பு சிரிச்சாரே பார்க்கணும். சான்ஸ்லெஸ். மெத்தட் ஆக்ட்டிங் கலைஞன்னா ஜாக்கிதான். படம் முடிந்து ரசிகன் வெளியே போனபோது ஜாக்கியோடு சேர்ந்து ரசிகனும் சிரித்தான். நெகிழ்ந்தான். இன்னும்கூட ரங்கீலா வந்து 25 வருஷம் ஆச்சுனு நம்பவே முடியலை. நேத்து நடந்த மாதிரியே இருக்கு!"

- உற்சாகம் குன்றாமல் சிலிர்த்து சிரிக்கிறார் ராம்கோபால் வர்மா!



source https://cinema.vikatan.com/bollywood/director-ram-gopal-varma-shares-rangeela-movie-memories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக