Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

கொரோனா சீசன் 2... எப்படி சமாளிக்கிறது இத்தாலி பள்ளிகள்? - நேரடி ரிப்போர்ட் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஆறு மாத போராட்டத்திற்கு பிறகு இதோ, இந்த மாதம் பள்ளிகள் திறந்தாயிற்று. ஆம். கடந்த மார்ச் மாதம் முதல் இத்தாலியையே தலைகீழாக புரட்டி போட்ட கொடிய கொரோனா பாதிப்பு சில மாதங்களுக்கு முன் கட்டுக்குள் வந்தது. இத்தாலியின் அன்றைய நிலைமையை பற்றி தெளிவாக நான் மை விகடனில் பதிவிட்டிருந்தேன்.

எத்தனை காலம் தான் பிஞ்சு பிள்ளைகளை வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பது?

சென்ற கல்வியாண்டு இறுதிவரை ஆன்லைன் முறையிலேயே முடிந்தது. பிள்ளைகள் தங்கள் நண்பர்களை சந்திக்க கூட முடியாமல் பிரியாவிடை அளித்து கொண்டிருந்தனர்.

இத்தாலியில் பல இன்னல்களுக்கு பிறகு ஒரு வழியாய் இதோ, அனைத்து பள்ளிகளும் கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டு விட்டது. இருப்பினும், முன்னெச்சரிக்கை காரணமாக ஒவ்வொரு வகுப்பிலும் பாதி மாணவர்களே இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படுகிறது.

Back to school

அதாவது, பாதி மாணவர்கள் ஆன்லைன் மூலமும், மீதம் உள்ளவர்கள் நேரிலும் கல்வி கற்கிறார்கள். நேற்று நேரில் சென்றவர்கள் இன்று ஆன்லைனிலும், நேற்று ஆன்லைனில் பங்குபெற்றவர்கள் இன்று நேரிலும் என்று மாற்றி மாற்றி இந்த கல்வி ஆண்டு துவங்கியுள்ளது.

கடுமையான சமூக இடைவெளி, மாஸ்க், சானிடைசேர் பழக்கம் என்று அனைத்தும் பின்பற்றபடுகிறது. பெற்றோர்கள் யாருமே பள்ளிவளாகத்தினுள் அனுமதி இல்லை.

அரசாங்க பள்ளிகளில் குழந்தைகளுக்கு வாரத்திற்கு 5 மாஸ்க் என்று இலவசமாக கூட வழங்கப்படுகிறது.

இவ்வளவு பாதுகாப்புக்கு பின்னும், இங்கொன்றும் அங்கொன்றுமாய் கொரோனா சோதனைகள் நடந்த வண்ணமே உள்ளன.

ஒரு வாரமாக எந்த தொல்லைகளுமின்றி பள்ளிக்கு சென்று வந்த என் நண்பரின் ஒன்பது வயது குழந்தை நேற்று காய்ச்சலில் அவதியுற்றது. உடனே மருத்துவரை அணுகியபோது அவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தினார்கள்.

ஆம், மிரண்டு தான் போனார்கள் என் நண்பர்கள். இருக்காதா பின்னே?

கொரோனாவின் பாதிப்பிற்கு அஞ்சி பள்ளியின் கோடை விடுமுறையில் கூட எங்கும் வெளியில் சென்று மகிழாமல் குழந்தைகளின் நலன் கருதி வீட்டிலேயே இருந்து வந்த அவர்களுக்கு பேரதிர்ச்சி.

இது வெறும் சாதாரண காய்ச்சல்தான், குழந்தைக்கு ஏதும் ஏற்படாது என்று அறிவு கூறினாலும், அவர்கள் ஒருவித பயத்திலேயே இருந்தார்கள்.

உடனே கொரோனா பரிசோதனை (SWAB TEST / TAMPONI) செய்ய கிளம்பினார்கள். மிலானில் வசித்து வரும் அவர்கள் நேற்று மருத்துவமனை சென்று பரிசோதனை முடித்து வந்துள்ளனர். அவர்களது அனுபவங்கள் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே இந்த பதிவை வெளியிடுகிறேன்.

மிலானில், குறிப்பாக இரண்டு மருத்துவமனைகளில், இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.

நீண்ட வரிசையில் காரில் காத்திருக்கும் மக்கள்..

சில குறிப்பிட்ட இடங்களிலே செய்வதன் விளைவு, நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட 3 மணிநேரம் வரிசையில் இருந்து பரிசோதனை முடித்து திரும்பியுள்ளார் எனது நண்பர்.

இந்த இரண்டு மருத்துவமனையிலும் அவசர பிரிவில் நீங்கள் காரில் இருந்தபடியே சோதனையை மேற்கொள்ள வசதிகள் செய்துள்ளார்கள். சுட்டெரிக்கும் வெயிலிலும், நீண்ட வரிசையிலும் கால்கடுக்க நிற்பதற்கு இப்படி காரிலே உட்கார்ந்து கொண்டிருப்பது எவ்வளவோ மேல், இல்லையா?

நீண்டிருந்த வரிசையில் காலை 10 மணிக்கு நின்றார், மன்னிக்கவும், காரை நிறுத்தினார்.

கொரோனாவிற்காகவே பிரத்யேகமாக நிறுவப்பட்டிருந்தது இந்த பரிசோதனை நிலையத்தின் உள்ளே, இருக்கைகள், கை கழுவ தனி இடங்கள் என்று சில வசதிகளும் செய்து வைத்திருந்தனர்.

பொறுமையை சோதிக்கும் வகையில் ஆமை வேகத்தில் வரிசை முன்னேறிக் கொண்டிருந்தது. அவர் வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், அந்த பரிசோதனை பற்றி அறிந்துக் கொள்வோம்.

இந்த பரிசோதனை என்பது, ஒரு நபரின் மூக்கினுள் சிறிய பட்ஸ் மூலமாக திசுக்களை எடுத்து செய்யப்படுவது. எனவே, பரிசோதனைக்கு வந்திருக்கும் நபரின் முழு ஒத்துழைப்பும் தேவை.

மருத்துவரின் கையைத் தட்டி விட்டு மறுப்பது சாதாரணமாக நீங்கள் காணும் ஒன்று. பற்பல முயற்சிகள் செய்து அதை எடுக்க வேண்டி வரும். அதுவும் குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அந்த குழந்தைகளை சமாதானம் செய்து மூக்கில் நுழைத்து பரிசோதனை செய்வது பெரிய டாஸ்க்.

Corona test Form

அங்குள்ள நர்ஸுகளையும், மருத்துவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும். அவ்வளவு பொறுமையாக குழந்தை பெரியவர் என்று நேர்த்தியாக பரிசோதனைகள் செய்கிறார்கள்.

எனவே, பரிசோதனை நேரமும் நீண்டு கொண்டு செல்கிறது, வரிசையும் நகர மறுக்கிறது. இப்பொழுது புரிகிறதா, எதற்கு வரிசை ஆமை வேகத்தில் நகர்கிறது என்று?

மக்கள் நீண்ட நேரமாக காத்து கிடப்பதின் காரணமாக அங்கே இலவசமாக தண்ணீர், பிஸ்கட்ஸ் என்று கொடுத்து புண்ணியம் சேர்த்துக் கொள்கிறார்கள்!

ஒருவழியாய் நமது நண்பரின் முறையும் வந்தது. பரிசோதனை மேற்கொள்வது ஒரு பள்ளி குழந்தை என்ற காரணத்தால் தனியாக ஒரு form பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. அதில் தெளிவாக குழந்தையின் பெயர் விவரங்கள் கூடவே, எந்த பள்ளியில் படிக்கிறார் என்ற விவரங்களும் கேட்கப்பட்டிருந்தது.

சோதனைக்கு வரும் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட பள்ளிகளிருந்து வந்தபடி இருந்தால், அந்த பள்ளிக்கு தெரியப்படுத்தி ஆவண செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. அந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு, பரிசோதனைக்கு தயாரானது அவரது குழந்தை. காலையிலிருந்து பலருக்கு பரிசோதனைகள் செய்தும், மலர்ந்த முகத்தோடு அந்த குழந்தைக்கு பரிசோதனை செய்து வழியனுப்பி வைத்தனர் மருத்துவர்கள்.

ஒருவழியாக பரிசோதனையை முடித்து எனது நண்பர் மருத்துவமையிலிருந்து விடைபெறும் பொழுது அவரது மணிக்கட்டில் இருந்த கைக்கடிகாரம் மணி மதியம் ஒன்றரை என்று சிரித்தது.

சான் கார்லோ, பரிசோதனை செய்யும் இடம்..

வீடு வந்து சேர்ந்தவுடன் எனது நண்பர் தன் குழந்தையின் பள்ளிக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்தினார். பரிசோதனை முடிவு வரும் வரை தன் குழந்தை பள்ளிக்கு வர முடியாதென்றும், பாடங்களை தொடர முடியாது என்றும் தனது நிலையை எடுத்துரைத்து மின்னஞ்சல் அனுப்பினார்.

மின்னஞ்சல் அனுப்பிய மறு நிமிடமே அந்த பள்ளியிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. குழந்தையின் ஆரோக்கியம் விசாரித்த முதல்வர், பின் அவர்கள் பள்ளியில் நடைமுறையிலுள்ள விவரங்களை தெளிவுப்படுத்தினார்.

கொரோனா காரணத்தால் பிள்ளைகள் பள்ளிக்கல்வியை இழக்க கூடாதென்று "hybrid" கல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அதன்படி, குழந்தைகள் இது போன்று பாதிப்பினால் அவதிப்பட்டால் அவர்களுக்கு தனியாக பாடம் நடத்தும் வகையில் தனியே ஒரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்தார்.

Also Read: `வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் எவ்வாறு அழைத்து வரப்படுகிறார்கள்?' - ஒரு லைவ் ரிப்போர்ட் #MyVikatan

குழந்தையின் உடல் ஆரோக்கியமே முக்கியம் என்றும், அதே வேலை அக்குழந்தை கல்வியிலும் பின்தங்கி விடக் கூடாதென்று இந்த பள்ளிகள் எடுக்கும் முயற்சியை பற்றி என் நண்பர் கூறியதும் என்னால் இந்த நாட்டையும், நாட்டின் கட்டமைப்பையும் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

அதற்கும் மேலாக ஒவ்வொரு பள்ளிகளும் தங்கள் பிள்ளைகளை முன்னேற்றுவதில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை காணும் போதும் நமது அடுத்த தலைமுறை மிகவும் சரியான கல்வியாளர் கையில் இருப்பதை கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.

செய்யும் தொழிலை செவ்வனே செய்யும் இந்த மருத்துவர்களையும், கல்வி கண்ணை திறக்கும் ஆசிரியர்களையும் எல்லாம் வல்ல இறைவன் என்றும் இவர்கள் கூடவேயிருந்து பாதுகாக்க வேண்டிக்கொள்கிறேன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/back-to-school-situation-of-italy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக