Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

'வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள்!' - முதல்வர் பழனிசாமி உறுதி

``புனித ஜார்ஜ் கோட்டையில் பா.ஜ.க கொடி பறக்காது. எப்போதும் தேசிய கொடிதான் அங்கு பறக்கும்” என பா.ஜ.க தலைவர் முருகனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.

எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடபாடி பழனிசாமி நேற்று ராமநாதபுரம் வந்திருந்தார். மாவட்டத்தில் நடந்து முடிந்த திட்ட பணிகளை துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டிய முதல்வர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் பின் விவசாய சங்கத்தினர், சிறுகுறு தொழிலபதிர்கள், மீனவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் வளர்ச்சி பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 48.50 கோடி மதிப்பீட்டில் 94 குடிமராமத்து பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டில் மேலும் 31 கோடி செலவில் 44 பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதன் முதலாக 14 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு பணிகள் துவக்கப்பட உள்ளன. இதன் படி முதல் பகுதியில் 118 கி.மீ, 2-ம் பகுதியில் 108 கி.மீ, 3-ம் பகுதியாக 33 கி.மீ என பணிகள் மேற்கொள்வதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பலனடையும். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், ஊரணிகள் அனைத்தும் நிரப்பப்படுவதுடன் நிலத்தடி நீரும் உயரும்.

மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி மற்றும் 4 அரசு கலைக்கல்லூரிகள் திறக்கப்பட்டுளன. விரைவில் கடல் உணவு மற்றும் ஜவுளி தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இது தவிர மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான படகிற்கு மத்திய மாநில அரசுகள் 70% மானியம் வழங்குகின்றன. மீனவர் நலனுக்காக மூக்கையூரில் துறைமுகம், குந்துகாலில் மீன் இறங்கு தளம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன'' என்றார்.

எடப்பாடி பழனிசாமி

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 3 மசோதக்கள் மூலம் விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள். இதனாலேயே அதனை அ.தி.மு.க ஆதரிக்கிறது. ராஜ்யசபாவில் இந்த மசோதாவிற்கு எதிராக பேசியது குறித்து எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். பா.ஜ.க தலைவர் முருகன், ' விரைவில் கோட்டையில் பா.ஜா.க கொடி பறக்கும்' என கூறியுள்ளார். இது அவரது விருப்பம். ஆனால் கோட்டையில் எப்போதும் தேசிய கொடிதான் பறக்குமே தவிர பா.ஜ.க கொடி பறக்காது'' என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-cm-palanisamy-says-that-the-agriculture-law-will-save-the-farmers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக