Ad

வியாழன், 3 செப்டம்பர், 2020

பஞ்சாப்: `எனக்கு பயமில்லை!' திருடர்களை மடக்கி பிடித்த 15 வயது சிறுமி

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர், குசம் குமாரி. 15 வயதான குசம் குமாரி, இன்றைக்கு தேசிய அளவில் பேசப்படுபவராக மாறியுள்ளார். அவரது தைரியத்தை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெளியான வீடியோவின்படி, குசம் குமாரி சாலையில் நடந்து செல்லும்போது பைக்கில் வந்த இருவர் அவரது கையில் இருந்த மொபைலைப் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கின்றனர். ஆனால், குமாரி அவர்களது டி ஷர்ட்டைப் பிடித்து இழுத்து அவர்களை அங்கிருந்து தப்பிக்க விடாமல் பிடித்து வைக்க முயற்சி செய்கிறார். திருடர்கள் சிறுமியைக் கடுமையாகத் தாக்கிய பின்னரும் அவர்களை எதிர்த்து காயங்களுடன் குமாரி போராடுகிறார். இதையடுத்து, அருகில் இருந்த நபர்கள் சிறுமிக்கு உதவி செய்ய முன் வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் உயர் அதிகாரிகள் உட்பட பலரது கவனத்தையும் பெற்றுவரும் குசம் குமாரியின் வீடியோ வைரலாவதற்குக் காரணமான சம்பவத்தை நினைவுகூர்ந்து அவர் பேசும்போது, ``நான் டியூஷன் முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன். பைக்கில் வந்த இரண்டு நபர்கள் என் முன்னால் வந்து பைக்கை நிறுத்தினர். என் கையில் இருந்த மொபைலைப் பறிக்க முயற்சி செய்தனர். நான் அவர்களின் பின்னால் ஓடிச்சென்று அவர்களின் டி-ஷர்ட்டைப் பிடித்து இழுத்தேன். அவர்களைப் பிடிக்க அருகில் இருந்த ஒருவர் எனக்கு உதவி செய்ய முன் வந்தார். அந்தத் தருணத்தில் எனக்கு எந்த பயமும் இல்லை. ஏனெனில், எனக்கு டேக்வாண்டோ எனும் தற்காப்புக் கலை தெரியும். மூன்று மாதங்களாக நான் அதைப் பயின்று வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

Also Read: தி.மலை: `அழுகையைக் கட்டுப்படுத்திக்கிட்டு நின்னேன்!’ - பெண் இன்ஸ்பெக்டரை நெகிழ வைத்த ஆட்சியர்

திருடர்களின் தாக்குதலால் பலத்த காயமடைந்த குமாரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையில் இருந்தபடி அவர் பேசும்போது, ``அவர்கள் என்னைத் தாக்கும்போது நான் அதை உணரவில்லை. சம்பவம் நடந்து முடிந்த பின்னரே, அதை உணர்ந்தேன். இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும்போது யாரும் அச்சப்படக் கூடாது. இந்தச் சம்பவத்தால் நான் வைரல் ஆவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். ``என்னுடைய அப்பா தொழிலாளி, அம்மா வீட்டு வேலை செய்து வருகிறார். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் அம்மா மிகவும் வருத்தப்பட்டார். சிறிது நேரம் கழித்து சமாதானமும் ஆனார். ஆனால், என் அப்பா `நீ மிகவும் தைரியசாலி’ என்று பாராட்டினார். என்னை நினைத்து பெருமையும் அடைந்தார். ஒரே சம்பவத்தில் பலரையும் இன்ஸ்பையர் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்றும் தெரிவித்துள்ளார்.

குசம் குமாரி

காவல்துறை அதிகாரியாக வர வேண்டும் என்பதே தன்னுடைய கனவு என்றும் குசம் குமாரி தெரிவித்துள்ளார். ஜலந்தரின் துணை ஆணையர் கான்ஷ்யம் தோரி சிறுமியின் செயலைப் பாராட்டி 50,000 ரூபாய் பரிசாக அறிவித்துள்ளார். சிறுமிகளை ஊக்கப்படுத்தும் விதமாக குமாரியை வைத்து கேம்பைன் ஒன்றை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குசம் குமாரியின் இந்தச் செயலை கௌரவிக்கும் விதமாக தேசிய மற்றும் மாநில அளவில் தைரியமான செயல்களுக்கு வழங்கப்படும் விருதுக்கு அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நெட்டிசன்களும் ``பிரேவ் கேர்ள், யு கோ கேர்ள்” என்று கமென்ட்டுகளைப் பதிவிட்டு குசம் குமாரியைப் பாராட்டி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் பிரச்னைகளை எதிர்த்து தைரியமாகப் போராடிய சிறுமி குசம் குமாரியின் இந்தச் செயல் பல பெண்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

Also Read: மதுரை: `கெட்டியாகப் பிடித்துக்கொண்ட பெண்; சிக்கிய பாதி சங்கிலி!’ - ஊரடங்கில் பதற வைத்த வழிப்பறி



source https://www.vikatan.com/news/india/video-of-15-year-old-girl-fights-with-phone-snatchers-in-punjab-went-viral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக