Ad

வியாழன், 3 செப்டம்பர், 2020

தஞ்சை: தரமற்ற விதையால் பதராய் போன கதிர்கள்... பதறும் விவசாயிகள்!

இயற்கை சீற்றம் உட்படப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையே விவசாயிகள் தங்களது கடும் உழைப்பையும் முதலீட்டையும் செலுத்தி பயிர்களை வளர்த்தெடுக்கிறார்கள். பல மாத காத்திருப்புக்குப் பின், ஆவலோடு அறுவடையை எதிர்பார்க்கும்போது, செலவுக்குக் கட்டுப்படியாகும் அளவுக்குக் கூட விளைச்சல் இல்லையென்றால் அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்? ஏமாற்றத்தில் மனம் உடைந்து போவார்கள். பொருளாதார இழப்பிலிருந்து மீண்டு வருவதும் அத்தனை எளிதான காரியமல்ல. தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகிலுள்ள நல்லவன்னியன் குடிகாடு கோவிலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடந்ந சம்பா பருவத்தின்போது சாகுபடி செய்த நெற்பயிர்களில் பெரும்பகுதி, பதர்களாய் போனதால் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தார்கள்.

தனியார் நிறுவனத்தில் வாங்கிய, விதைநெல் தரமற்று இருந்ததாலேயே, இவர்களுக்கு இந்த அவலநிலை. இதைத் தட்டிக் கேட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டிய வேளாண்மைத்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆதங்கப்படுகிறார்கள் விவசாய சங்கத்தினர். நீதி கேட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த இப்பகுதி விவசாயிகள் ஆயத்தமாகிவருகிறார்கள்.

விவசாயி தங்கமணி

விதைதான் விவசாயத்தின் ஆதாரம். விதைதான் விவசாயத்தின் உயிர். இதனால்தான் விதைகளின் தரத்தை ஆய்வு செய்யவும் சான்று அளிக்கவும் வேளாண்மைத்துறையில் இதற்கென பல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தரமற்ற விதையை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது விதைச்சட்டம். ஆனால், நடைமுறையில் இது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருப்பதுதான் தங்களின் துரதிர்ஷ்டம் என வேதனைப்படுகிறார்கள் விவசாயிகள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்டம் நல்லவன்னியன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த நெல் விவசாயி தங்கமணி, "கடந்த சம்பா பருவத்துல எங்க பகுதியில உள்ள தனியார் உரக்கடையில ஏ.டி.டீ 38 ரக விதைநெல் வாங்கி, 6 ஏக்கர்ல பயிர் பண்ணினேன். வழக்கம்போல தேவையான அளவுக்கு உரம் போட்டு, களை எடுத்து, பயிரைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தேன்.

இப்படி ஆகும்னு கொஞ்சம்கூட நான் எதிர்பார்க்கலை. கதிர்கள்ல பெரும் பகுதி பதர்களாவே இருந்துச்சு. வழக்கமா ஏக்கருக்கு 35 மூட்டை மகசூல் கிடைக்கணும். ஆனால், எனக்கு வெறும் 5 மூட்டைதான் மகசூல் வந்துச்சு. ஏக்கருக்கு 25,000 ரூபாய்க்கு மேல நஷ்டம்" என்றார். இவரைப் போல் இன்னும் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகி பக்கிரிசாமி, ``இந்தப் பகுதியில இது மாதிரி 20 விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்காங்க. இவங்க எல்லாருமே ஒரே கடையிலதான் விதைநெல் வாங்கியிருக்காங்க. இது எல்லாமே ஒரே ரகம். 30 கிலோ எடை கொண்ட 130 பைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கு. இந்த விதைநெல் எல்லாமே தானியகலா என்ற நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. கதிர்கள்ல பெரும்பகுதி பதர்களாகவே இருக்குனு விவசாயிகள் புகார் தெரிவிச்சும்கூட வேளாண்மைத்துறை அதிகாரிகள், சட்டப்படியான எந்த நடவடிக்கையுமே எடுக்கலை.

பக்கிரிசாமி

விதைநெல் தரமில்லாமல் இருந்ததுனாலதான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கு. வேளாண்மைத்துறை அலுவலர்கள் வந்து பார்த்துட்டு தனிப்பட்ட முறையில, இதை ஒத்துக்கிட்டாங்க. ஆனால், முறைப்படி நடவடிக்கை எடுக்கலை. தானியகலா நிறுவனத்தின் உரிமையாளரான ராமசாமி, ஏற்கெனவே வேளாண்மைத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதனால்தான் நடவடிக்கை எடுக்க மாட்டேங்குறாங்க. விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, ஏக்கருக்கு 25,000 ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கணும். இதைப் பெற்றுத் தர வேண்டியது, வேளாண்மைத்துறை அதிகாரிகளின் பொறுப்பு. விதைநெல் பிரச்னைதானே, நமக்கென்னனு தஞ்சை மாவட்ட நிர்வாகமும் இதுல அலட்சியமாக இருந்துடக் கூடாது. இதை வலியுறுத்தி இன்னும் ஒரு சில நாள்கள்ல தஞ்சாவூர் கலெக்டர் ஆபீஸ்ல போராட்டம் நடத்தப்போறோம்” என்றார். விவசாயிகளின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் தானியகலா விதைநெல் நிறுவனத்தின் உரிமையாளரான ராமசாமியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ``நாங்கள் விற்பனை செய்தது தரமான விதைநெல். நோய் பாதிப்பினால்தான் பாதிப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியிலுள்ள உரக் கடைக்காரர் எங்களுக்குத் தர வேண்டிய பணத்தைத் தராமல் ஏமாத்துறதுக்காகத்தான், விவாயிகளை எங்களுக்கு எதிராகக் கிளப்பிவிடுறார். எங்களோட விதைநெல்ல எந்தக் குறையும் இல்லை’’ என்றார்.

தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குநரான ஜஸ்டினிடம் பேசியபோது, ``பாதிக்கப்பட்ட விவசாயிகள், அறுவடைக்கு முன்பே எங்ககிட்ட முறைப்படி புகார் கொடுத்திருந்தால், ஆய்வு செஞ்சு, நடவடிக்கை எடுத்திருப்போம். அறுவடைக்குப் பிறகுதான் இந்தப் பிரச்னையே எங்க கவனத்துக்கு வந்துச்சு. ஆனாலும், இப்பிரச்னையைத் தீர்க்க, எங்களால் ஆன முயற்சிகளைக் கண்டிப்பாகச் செய்றோம்’’ என்றார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையைக் கொண்டு சென்று விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்க விகடன் முயன்று வருகிறது.



source https://www.vikatan.com/news/agriculture/thanjavur-farmers-faces-severe-loss-because-of-low-quality-seeds

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக