நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையோரம் சற்றுத் தொலைவில் அமைந்துள்ளது புதுக்காடு பழங்குடி கிராமம். காபி செடியும், பலா மரங்களும் நிறைந்த இந்த அடர்வனத்தில் 20-க்கும் மேற்பட்ட பழங்குடிக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இப்போதுதான் அடிப்படை வசதிகள் மெல்ல எட்டிப்பார்க்கும் இந்தக் கிராமத்துக்கு இன்னும் தொலைத்தொடர்பு வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள், முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்கின்றனர். இவர்கள் ஊரைவிட்டு தொலைவில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கிப் பயின்று வந்தனர்.
கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு அவசர கதியில் பள்ளிகள் மூடப்பட்டபோது, இந்தக் கிராமத்து மாணவ, மாணவிகளும் சொந்த கிராமத்துக்குத் திரும்பிவிட்டனர்.
வனச்சூழலில் வாழும் இந்தக் குழந்தைகளுக்கு நாள்தோறும் ஆட்டம், பாட்டத்துக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், நீடித்த விடுமுறையால் படித்த படிப்பெல்லாம் மறந்துபோகும் நிலை ஏற்பட்டது. மாணவர்களின் இந்த நிலையைக் கண்டு வருந்திய இதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆசிரியையாக மாறி அவர்களுக்கு கல்வியும் நம்பிக்கையும் கொடுத்து வருகிறார். அவர், சோபியா.
பழங்குடியினப் பெண் சோபியாவிடம் பேசினோம்.
``இங்க பாதி பசங்க வீட்டுல போன் கிடையாது. அப்படி இருந்தாலும் சிக்னல் கிடைக்காது. பசங்கள ஆன்லைன் கிளாஸ் அட்டெண்ட் செய்யச் சொல்லி ஸ்கூல்ல சொல்றாங்க. ஆனா, அதுக்கு வசதியும் இல்ல, வாய்ப்பும் இல்ல. இப்படியே பசங்கள விட்டா படிச்சதெல்லாம் மறந்துடுவாங்க.
நான் ப்ளஸ் டூ வரைதான் படிச்சிருக்கேன். உடம்பு சரியில்லாம போனதால அதையும் முடிக்க முடியல. இருந்தாலும், நமக்குத் தெரிஞ்சதை வெச்சு இவங்களுக்கு டெய்லி சொல்லிக்கொடுக்கலாம்னு முடிவு செஞ்சு, இப்போ ஒரு மணி நேரம் கிளாஸ் எடுக்குறேன். புக்ஸ் பாத்து சொல்லிக்கொடுக்குறேன். சிக்னல் கிடைக்கிற இடத்துக்கு போயி சப்ஜெக்ட்டை போன்ல டவுன்லோடு செஞ்சு கொண்டுவந்து சொல்லிக் கொடுக்குறேன். நான் சொன்னா பசங்க கேட்டுக்கிறாங்க. இவங்களுக்கு டச் விட்டுப்போகாம இருக்கணும். அதுக்கு என்னால முடிஞ்சது இது. ஸ்கூல் திறக்கும்வரை சொல்லிக்கொடுப்பேன்" என்கிறார் அக்கறையுடன்.
இதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமி யோகேஸ்வரி பேசுகையில், ``நான் சிக்ஸ்த் முடிச்சு செவன்த் போகப்போறேன். ஆன்லைன் கிளாஸ் அட்டண்ட் பண்ண முடியல. சோபியா அக்காதான் சொல்லித் தர்றாங்க. எங்க ஊர்ல எல்லாருமே இப்போ இவங்ககிட்டதான் படிச்சிக்கிறோம். எங்க அப்பாவும் அம்மாவும், `நல்லவேள சோபியாவால பிள்ளைகளுக்கெல்லாம் படிப்பு விட்டுப்போகாம இருக்கு'னு சொல்றாங்க'' என்றார் தன் ஆசிரியை மீது அன்புடன்.
முதல் தலைமுறை மாணவர்களை கல்வியில் கரையேற்ற இந்த இளம்பெண் எடுத்துள்ள முயற்சி, மக்களிடம் பாராட்டைப் பெற்று வருகிறது.
source https://www.vikatan.com/news/education/tribal-woman-sofiya-teaches-to-students-who-cant-able-to-attend-online-classes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக