Ad

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

புதுக்கோட்டை: `ஒரு டீ-க்கு கூட வழியில்லாம இருந்தேன்! - பெட்டிக்கடையால் தலைநிமிர்ந்த டீ மாஸ்டர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிதம்பரவிடுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(46). மனோகரனுக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு இருக்க, ஒருநாள் திடீரென ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், மூளையில் உள்ள நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தி மனோகரனின் கை, கால்களையும் முடக்கிப்போட்டுவிட்டது. அதோடு வீட்டிலேயே முடங்கிக்கிடந்துள்ளார். இரண்டு பெண் குழந்தைகளுடன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனோகரன் சாப்பாட்டிற்கே சிரமப்படுகிறார் என்பதை அறிந்து அவருக்கு உதவி செய்ய கீரமங்கலத்தைச் சேர்ந்த பாரதப்பறவைகள் அறக்கட்டளை என்ற அமைப்பினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

மனோகரனிடம் எவ்வளவு பண உதவி வேண்டும் என்று கேட்க மனோகரனோ ஒத்த கால், ஒத்த கையில் இன்னும் வலு இருக்கிறது பணம் எனக்கு வேண்டாம் பெட்டிக்கடை வைத்துப் பிழைக்க வழி வகை செய்தால் போதும் என்று அவர்களிடம் கூற, அடுத்த சிறிது நாட்களிலேயே பெட்டிக்கடைக்குத் தேவையான பொருட்கள், கட்டில் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து கொடுத்து மனோகரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த மனோகரன் தற்போது, அரசு தொடக்கப்பள்ளி அருகே பெட்டிக்கடை போட்டு பள்ளி குழந்தைகளிடம் தின்பண்டங்கள் விற்று குழந்தைகளுடன், குழந்தையாக வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

இதுபற்றி மனோகரனிடம் பேசினோம், ``20 வருஷமா அறந்தாங்கியில டீக்கடையில, ஹோட்டல்ல வேலை செஞ்சு தான் மனைவி, பிள்ளைகளை காப்பாத்திக்கிட்டு இருந்தேன். திடீர்ன்னு இப்படி ஆகும்னு கனவுல கூட நெனச்சுப்பார்க்கலை. சுத்தமா ஒரு கையும், காலும் செயலிழந்து போச்சு. இப்ப கூட கொஞ்ச எழுந்திருச்சு நடக்க முடியுது. அப்பெல்லாம், எழுந்து நடக்கக்கூட முடியாது. அந்த நேரத்தில் என் மனைவி சுந்தரம்பாள், ரெண்டு பொம்பள பிள்ளையோட என்னையும் அவளோட பையன் மாதிரி பார்த்துக்கிட்டாள்.

பெட்டிக்கடையால் தலைநிமிர்ந்த மனோகரன்

நான் வேலைக்குப் போன வரைக்கும் அவளை வேலைக்கு எல்லாம் போய் கஷ்டப்பட விடாம வச்சிருந்தேன். ஆனா, இப்போ அவள் கூலி வேலைக்குப் போன தான் எங்க மூணு பேருக்கும் சாப்பாடு. என்னை அப்படியே விட்டுடாம, அங்க இங்க கடன வாங்கி, திருச்சி, மதுரைன்னு சுந்தராம்பாள் என்னைக் கூட்டுக்குப்போகாத ஆஸ்பத்திரியே இல்லை. ஆனாலும், சரியாகலை. கடன் தான் ஏறிக்கிட்டே போச்சு. அதோட ஆஸ்பத்திரி போறத விட்டாச்சு. ஒத்த கால், ஒத்த கையை வச்சி விடாம எழுந்து நடக்க ஆரம்பிப்பேன்.

கொஞ்ச நேரத்தில தலைசுத்தி கீழே விழுந்துடுவேன். இப்போ, கொஞ்சம் நடக்க முடியுது. அவளே கூலி வேலை செஞ்சு கிட்டு எங்களைக் கஷ்டப்பட்டு பார்த்துக்கிட்டு இருக்கா, அதனால மனைவிக்கிட்ட டீ குடிக்க காசு கேட்கச் சங்கடமாக இருக்கும். கடைத்தெருவுக்கு போனா, நானா அவங்ககிட்ட கேட்க மாட்டேன், என்னோட நிலையைப் பார்த்து யாராவது டீ வாங்கிக்கொடுத்திடுவாங்க. பல நாட்கள் டீ கிடைக்காம திரும்பி வந்திருக்கேன். டீ மாஸ்டரா எத்தனையோ பேருக்கு டீ போட்டுக் கொடுத்திருக்கேன்.

பெட்டிக்கடையால் தலைநிமிர்ந்த மனோகரன்

இன்னைக்கு நமக்கு ஒரு டீக்கு வழியில்லையேன்னு சொல்லி புலம்பி இருக்கேன். ஆனா, இப்போ சொற்ப வருமானம் கிடைச்சாலும், இந்தப் பெட்டிக் கடை, உழைச்சு டீ குடிக்க வச்சிக்கிட்டு இருக்கு. கடைத்தெருவுக்குப் போனா எனக்கு டீ வாங்கிக்கொடுத்தவங்களுக்கு டீ வாங்கிக்கொடுக்க என்னால முடியுது. என்னாலயும் உழைக்க முடியும்னு சொல்லி பெட்டிக்கடை வைத்துக் கொடுத்தவங்களை என்னைக்கும் நான் மறக்க மாட்டேன்.

அதே நேரத்தில ஆறு மாசமா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கேட்டு அழைந்து திரிஞ்சிருக்கேன். இன்னும் கிடைக்கலை. அதோட அந்த முயற்சியை விட்டுட்டேன். நம்ம வியாபாரம் எல்லாம், சின்னப்பிள்ளைகள் கொடுக்கிற காசு. சில பிள்ளைகள் காசு இல்லாமயும் வந்து நிக்குங்க. அதுகல நம்ம பிள்ளை மாதிரி தானே, காசு இல்லைன்னா என்ன வேணும்னு கேட்டு எடுத்துக்கொடுத்திடுவேன். ஆனா, அடுத்த நாள் காசு வந்து கொடுத்திடுவாங்க. இப்ப உள்ள பிள்ளைங்க ரொம்பவே நல்ல பிள்ளைகளா இருக்காங்க.

பெட்டிக்கடையால் தலைநிமிர்ந்த மனோகரன்

இவ்வளவு நாள் வீட்டுக்குள்ள முடங்கிக்கிடந்த எனக்கு இது சந்தோஷமா இருக்கு. இப்போதைக்கு கிடைக்கும் வருமானத்தை வச்சு நிறைய பொருட்கள் வாங்கி வியாபரத்தை பெருக்க முடியலை. எவ்வளவு வருஷம் ஆகும்னு தெரியலை ஆனா, பெட்டிக்கடையை, மளிகைக்கடையாக்கி, மளிகைக்கடையை டிப்பார்ட்மெண்ட் ஸ்டோராக மாத்தணும். பழையபடி சம்பாதித்து பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும், மனைவியை நல்லா பார்த்துக்கணும்" என்று சொன்னவர் கண்கள் கலங்கின.



source https://www.vikatan.com/news/tamilnadu/manokaran-who-works-hard-even-after-he-has-nerve-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக