Ad

ஞாயிறு, 15 நவம்பர், 2020

`பறவைகள் பயமில்லாமல் வாழணும்!' - 100 ஆண்டுகளுக்கும் மேல் வெடிச்சத்தம் இல்லாத கிராமம்

சீர்காழி அருகே 100 ஆண்டுகளைக் கடந்து வௌவால்களை பாதுகாக்கும் கிராம மக்கள், தீபாவளி அன்றும் வெடி வெடிப்பதில்லை. இங்கு பறவைகள் சரணாலயம் அமைத்துத் தரக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பறவைகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெரம்பூர், பசுமை போர்த்திய இயற்கை எழில் சூழ்ந்த விவசாய கிராமம் ஆகும். இக்கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆல மரத்தில் பல்லாயிரக்கணக்கான வௌவால்கள் வாழ்ந்து வருகின்றன. கிராமத்தின் நடுவே வயல்வெளியில் அமைந்துள்ள ஆலமரத்தில் வௌவால்கள் வசிப்பதால் இப்பகுதியை வவ்வாலடி எனவும் அழைக்கின்றனர். இந்த வௌவால்கள் வசிக்கும் பகுதிக்கு கிராம மக்கள் அனுமதியின்றி வெளிநபர்கள் யாரும் செல்ல முடியாது. வௌவால்களைப் பாதுகாக்க இளைஞர்கள் கொண்ட வேட்டைத் தடுப்புக் குழு ஒன்றை அமைத்தும் மூன்று தலைமுறைகளாகப் பாதுகாத்து வருகின்றனர்.

தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதையும் தடை செய்துள்ளனர். பட்டாசு சப்தத்தால் வௌவால்கள் அச்சமடையும் என்பதால் இந்த கட்டுபாடு 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இந்தக் கிராம மக்கள், வௌவால்களை தங்கள் கிராமத்தைக் காக்கும் தெய்வமாகக் கருதி  வழிபட்டு வருகின்றனர். சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பட்டாசு வெடிக்க ஆசைபட்டால் அருகிலுள்ள மற்ற கிராமங்களுக்குச்  சென்று வயல் பகுதியில்தான் வெடிக்கவேண்டும் எனவும் பெரம்பூர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

வௌவால்கள்

இக்கிராமத்தினர் சிலரிடம் பேசினோம்.

"எங்க ஊருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய நாட்டுப் பறவை இனங்களான வக்கா, பூ நாரை, நீர் காகம், வெள்ளை காக்கை உள்ளிட்டவை  வரத் தொடங்கின. அக்டோபர் மாதம் வரும் பறவைகள் மார்ச் மாதம் வரை தங்கி இனப்பெருக்கத்திற்குப் பின் தன் குஞ்சுகளுடன் தாயகம் திரும்புவது வழக்கம். ஆனால் எங்க கிராமத்தின் பசுமை சூழலால் கவரப்பட்ட பறவைகள் தற்போது இங்கேயே நிரந்தரமாகக் கூடுகள் அமைத்துத் தங்கிவிட்டன. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரங்களில் நூற்றுக்கணக்கான பறவைகள் தங்கியுள்ளன. பறவைகளை எந்த இடையூரும் செய்யாமலும்  வெளியாட்கள் வேட்டையாடுவதை தடுத்தும் பாதுகாத்து வருகிறோம். தற்போது வயல்வெளிகளில் ஆயிரகணக்கான பறவைகள் உலா வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இப்பறவைகளை பாதுகாக்க இப்பகுதியில் ஒரு சரணாலையம் அமைக்கவேண்டும். சாலை வசதிகள் செய்து தரவேண்டும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/agriculture/a-village-in-seerkazhi-not-bursting-crackers-for-more-than-100-years-to-help-birds

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக