Ad

சனி, 9 ஜனவரி, 2021

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு!- இலங்கை அரசுக்கு எதிராகத் தொடரும் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ் பல்கலைக கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இலங்கை அரசு இடித்து அழித்தது. இதனைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழகம் முன்பு நேற்று இரவு முதல் தொடர் போராட்டங்களில் அங்குள்ள தமிழர்கள், மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை : யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம்.

இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதத்தில் இறுதிக்கட்ட தாக்குதல்களை நடத்தியது. இதில் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இந்தப் போரின்போது இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான விடுதலை புலிகளுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்களும் குண்டுவீசிக் கொல்லப்பட்டனர். தமிழர் பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இந்த இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டிருந்தது.

இரவில் இடிக்கப்பட்ட நினைவிடம்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினை பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று இரவோடு இரவாக இடித்து அழித்தது. இதனை அறிந்த மாணவர்கள், தமிழர் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் முன் திரண்டு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இலங்கை போலீஸார் மற்றும் ராணுவத்தினரின் துணையுடன் முள்ளிவாய்க்கால் நினைவிடம் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது.

Also Read: "முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பிரபாகரன் படம் இல்லை... ஏன் தெரியுமா?” #10yearsOfTamilGenocide

இதையடுத்து நேற்று இரவு முதல் மாணவர்கள் உள்ளிட்ட தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ் பல்கலை முன்பு போராடும் மாணவர்கள்

இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஏற்கெனவே தமிழர்களின் அறிவு பொக்கிஷமாகவும், ஆசியாவின் மிகச்சிறந்த நூழகங்களில் ஒன்றாகவும் திகழ்ந்த யாழ்ப்பாணம் நூலகத்தை கடந்த 1981-ம் ஆண்டு சிங்களர்கள் தீயிட்டுக் கொழுத்தினர். இதில் 97,000 நூல்கள் எரிந்து போனது குறிப்பிடத்தககது.

மாணவர்கள் போராட்டம்.

இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தினை அமல்படுத்துவதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்க வாய்ப்பு உருவாகும் என இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் இலங்கையில் இருக்கும்போதே போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/tense-situation-in-jaffna-university-after-government-removed-war-memorial

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக