Ad

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

COVID19: இரண்டு மாஸ்க் அணிவது அவசியமான ஒன்றா? - விளக்கும் மருத்துவர்

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவே தத்தளித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் டபுள் மாஸ்க், அதாவது ஒரு மாஸ்க் மீது இன்னொரு மாஸ்க் அணிவது பற்றி மருத்துவ உலகம் பேசிக்கொண்டிருக்கிறது. கூடவே 16-18 வயதினருக்கான தடுப்பூசியைப் பற்றியும். இவையிரண்டும் குறித்த முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா மருத்துவரான ஶ்ரீதரனிடம் பேசினோம்.

ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா மருத்துவர் ஶ்ரீதரன்

``ஒரு மாஸ்க் மீது இன்னொரு மாஸ்க் அணிவது அவசியமா என்றால், எங்களைப் போன்ற மருத்துவர்கள் கூடுதல் பாதுகாப்புக்காக இரண்டு மாஸ்க் போட்டுக்கொள்ளலாம். பொதுமக்கள் என் 95 மாஸ்க் அணிந்துகொண்டால் இன்னொரு மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், துணியாலான மாஸ்க் அணிகிறீர்களென்றால், கூடுதல் பாதுகாப்புக்காக இந்நேரத்தில் இரண்டு மாஸ்க் போட்டுக்கொள்ளலாம். சிலர் ஒரு மாஸ்க் போட்டாலே மூச்சுவிடக் கடினமாக இருக்கிறது என்பார்கள். உண்மை என்னவென்றால், மாஸ்க் போட்டுக்கொண்டால் மூச்சுத் திணறுகிறது என்பதற்கு முக்கால்வாசி காரணம் மனத்தடைதான். அவர்கள் அப்படி நினைத்துக்கொள்வதால்தான் அப்படி உணர்கிறார்கள். மருத்துவர்கள் நாங்கள் நாள் முழுவதும் மாஸ்க் அணிந்துகொண்டுதான் இருக்கிறோம். எங்களுக்கு மூச்செல்லாம் திணறவில்லையே...

ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் டபுள் மாஸ்க் போடலாமா?

இந்தப் பிரச்னை இருப்பவர்கள் ஒரு மாஸ்க் அணிவதற்கே கஷ்டப்படுகிறார்கள். மருத்துவர்களிடம் பேசும்போதுகூட `மூச்சு திணறுகிறது' என்று மாஸ்க்கை கீழே இறக்கிவிட்டுக்கொண்டுதான் பேசுகிறார்கள். அவர்கள் சொல்வதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது. ஏனென்றால், இவர்களில் பலர் மூக்கால் இல்லாமல் வாயால்தான் மூச்சு விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மாஸ்க் போட்டால் மூச்சுத்திணறுவதுபோலதான் உணர்வார்கள். ஆனால், மருத்துவரீதியாக இது உண்மை கிடையாது. ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களும் டபுள் மாஸ்க் அணிந்துகொள்ளலாம். அல்லது என் 95 மாஸ்க் அணிந்துகொள்ளலாம்.

மாஸ்க்

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் டபுள் மாஸ்க் அணியலாம்?

வீட்டைவிட்டு வெளியே இருக்கும் நேரம் முழுக்க டபுள் மாஸ்க் அணிந்திருக்கலாம். வீட்டுக்குள் இருந்தால் அவசியமில்லை. ஒருவேளை வீட்டுக்குப் பொருள்களை டெலிவரி செய்ய வெளிநபர் யாராவது வந்தால், அந்த நேரத்தில் நீங்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். அவர்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

16 - 18 வயதினருக்கான தடுப்பூசி இந்தியாவிலும் உலக அளவிலும் என்ன நிலைமையில் இருக்கிறது?

நம் நாட்டில் தடுப்பூசியின் கையிருப்பு அவ்வளவாக இல்லை. அதனால்தான், முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றார்கள், பிறகு இணை நோய்கள் இருப்பவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றார்கள், அதன் பிறகு 45 வயதுக்கு மேற்பட்டவர்களை போட்டுக்கொள்ளுங்கள் என்றார்கள். தற்போது மே முதல் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். இது மிக மிக நல்ல செய்தி. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஆன்டிபாடியை உருவாக்குகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசி

Also Read: COVID19: `இம்முறை குழந்தைகள், இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்!' - நிபுணர்கள் சொல்வது என்ன?

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. நியூயார்க்கில் 12 வயது முதல் 16 வயது வரையான பருவத்தினருக்குத் தடுப்பூசி போடுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களைவிட 12 முதல் 16 வயது வரை இருப்பவர்களுக்குத் தடுப்பூசி கூடுதலான ஆன்டிபாடியை உருவாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பள்ளிக்கூடங்களிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும். மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளைவிட்டு மறுபடியும் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பிப்பார்கள். இதேபோல இந்தியாவிலும் கூடிய விரைவில் நடக்கும் என்று மருத்துவர்கள் நம்புகிறோம்.



source https://www.vikatan.com/health/healthy/is-double-masking-will-help-to-prevent-coronavirus-infections-what-doctor-says

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக