Ad

செவ்வாய், 26 ஜனவரி, 2021

கோவை: `பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!' - கொதிக்கும் மு.க. ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நேற்று கோவை வந்திருந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை ஸ்டாலின் கோவை வந்தார். இதையடுத்து, பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள, மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியைச் சேர்ந்த 105 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டியை சந்தித்து அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

பாப்பம்மாள் பாட்டியுடன் ஸ்டாலின்

Also Read: `மு.க ஸ்டாலின் ஆகிய நான்... 100 நாளில் தீர்வு!’ - புதிய கோணத்தில் தி.மு.க பிரசாரம்

பிறகு, ஈச்சனாரி பகுதியில் முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி கே.சி.பழனிசாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு, அங்கு மணமக்களை வாழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின், “நீங்கள் எல்லாம் தேர்தலுக்கு தயாராகிவிட்டீர்கள். இன்னும் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் வந்துவிடும். ஏப்ரல் மாதத்திலேயே தேர்தல் நடப்பதற்கான சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிடினும் தி.மு.க தான் தமிழக மக்களை காப்பாற்றும் என்ற உணர்வு எல்லோரிடமும் இருக்கிறது.

திருமண விழ◌ாவில் ஸ்டாலின்

இப்போதிருக்கும் ஆட்சி, கொரோனாவிலும் கொள்ளையடித்த ஆட்சி. பழனிசாமி தலைமையிலான ஆட்சியை தூக்கி எறிவதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். தேர்தலுக்கு நான் ரெடி, நீங்க ரெடியா..?” என்று பேசினார்.

இந்நிலையில், சென்னை செல்வதற்கு முன்பு, மு.க. ஸ்டாலின் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “உடனடியாக மத்திய பா.ஜ.க அரசு மூன்று வேளாண் சட்டங்களை, எந்தவித நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டங்கள் மாநிலங்களவையில் நிறைவேற அ.தி.மு.க காரணமாக இருந்தது நாட்டுக்கு தெரியும்.

மு.க. ஸ்டாலின்

முதல்வர் பழனிசாமியும், அ.தி.மு.க.வினரும் அதைத் தொடர்ந்து நியாயப்படுத்தி பேசுவதுடன் விவசாயிகளை கொச்சைப்படுத்தியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். எனவே, பழனிசாமி மக்களிடமும், இந்திய விவசாயிகளிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-leader-mk-stalin-attack-cm-palanisamy-over-farmers-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக