'தமிழக கோயில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் ஜக்கி வாசுதேவ்!
இதில், 'இந்து சமுதாயத்தினர் தங்களது புனிதமான வழிபாட்டுத் தலத்தை தானே பேணிப் பராமரித்து நிர்வகிக்க, அவர்களுக்கு உண்டான ஜனநாயக உரிமையை அரசு வழங்கவேண்டும்' என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஜக்கி வாசுதேவின் இந்த கோரிக்கைக்கு ஏற்கெனவே நடிகர் சந்தானமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையிலும் 'அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் இந்துக்களிடமே ஒப்படைக்கப்படும்' என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
'கிறிஸ்தவர்களிடம் சர்ச் இருக்கிறது; முஸ்லிம்களிடம் மசூதி இருக்கிறது. அதேபோல இந்துக்களிடம் கோயில்கள் இருக்கவேண்டும். ஏன் இந்து சமய அறநிலையத்துறை என ஓர் அமைப்பை உருவாக்கி அரசே கோயில்களை நிர்வகிக்கிறது?' என்றக் கேள்வியை எழுப்பி தங்கள் கோரிக்கைக்கு வலு சேர்க்கிறார்கள் இவர்கள்.
இந்த நிலையில், தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான ராஜீவ்காந்தியிடம், இந்த விவகாரத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்னவென்று விளக்கம் கேட்டோம்.... ''இந்து அறநிலையத்துறையை ஒழிக்கவேண்டும் என்பது பா.ஜ.க-வின் திட்டம். ஆனால், இந்த விஷயத்தை நேரடியாக அவர்கள் எழுப்பினால் எடுபடாது என்று, ஜக்கி வாசுதேவ் மூலமாக கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால், இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
Also Read: சென்னை: `இன்சூரன்ஸ் பாலிசி முதிர்ச்சி பெற்றுவிட்டது!' -ரூ.2 கோடியை ஏமாற்றிய 6 பேர் சிக்கியது எப்படி?
கிருஷ்ணசாமி ஐயர் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழுதான் இந்து கோயில்களை அரசுடைமையாக்கவேண்டும் என்று முதன்முதலில் அரசுக்கு கடிதம் எழுதுகிறார்கள். தொடர்ச்சியான போராட்டங்களையும் நடத்திவருகிறார்கள். 1970-ல் தி.மு.க அரசுதான் இந்து அறநிலையத்துறைக்கு என்று தனி அமைச்சரையும், தனி வரவு செலவுத் திட்டத்தையும் கொண்டுவந்தது.
கோயில் நிர்வாகம், பூசை மற்றும் கணக்கு வழக்கில் நேரடியாக அரசு தலையிடாது. இவற்றையெல்லாம் கண்காணிப்பதற்கென்று தனியே அறங்காவலர் குழு உள்ளது. ஏற்கெனவே இதேபோன்ற அறங்காவலர் குழு இருந்துவந்தாலும் அதில் உயர் சாதியினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்துவந்தனர். அதை மாற்றி, பெண்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் அறங்காவலர் குழுவில் உறுப்பினர்களாக நியமித்து மாற்றத்தைக் கொண்டுவந்தது தி.மு.க அரசு.
இந்து கோயில்களுக்குப் பாத்தியப்பட்ட இரண்டரை லட்சம் ஏக்கர் நிலங்கள் தனியார் முதலாளிகள் வசம் இருந்ததை மீட்டெடுத்ததோடு, சிதிலமடைந்துபோன 5 ஆயிரம் கோயில்களைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியது தி.மு.க அரசுதான். 'கடவுள் இல்லை என்பது எங்களது தனிப்பட்ட கொள்கை. ஆனால், எடுத்துக்கொண்ட பொறுப்பில் நேர்மையாக இருப்பது எங்கள் கடமை' என்றார் கருணாநிதி.
இன்றைக்கு 'இந்து கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைத்துவிடு' என்கிறார்கள். அறநிலையத்துறை என்ற அரசு அமைப்பின் கீழ் கோயில் நிர்வாகம் இருக்கும்வரையில்தான் தனிநபர்களின் ஆதிக்கமோ, ஊழலோ நடைபெறாமல் தடுக்க முடியும். மாறாக அறநிலையத்துறையைக் கலைத்துவிட்டால், இந்து என்ற பெயரில், தனிப்பட்ட நபர்களின் கைகளுக்குள் கோயில் நிர்வாகமும், சொத்துக்கட்டுப்பாடுகளும் போய்விடும். குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கோயிலுக்குள் நுழையமுடியும் என்ற தீண்டாமைக் கொடுமைகள் மறுபடியும் தலைதூக்கும். கோயில் சொத்துக்களும்கூட குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமேயானது என்று சொல்லி, கோயிலுக்குச் சொந்தமான நிலம், நகை உள்ளிட்ட சொத்துக்களை எந்தவித கணக்கு வழக்குமின்றி குறிப்பிட்ட தனிநபர்களே சூறையாடிக்கொள்ளவும் வழி பிறந்துவிடும்'' என்கிறார் தெளிவாக.
Also Read: மும்பை: பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சிறுமி, வாக்குமூலத்தை தடுத்த தாய்... கண்டித்த நீதிமன்றம்!
அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜ், இதுகுறித்துப் பேசும்போது, ''இந்து கோயில்களை இந்துக்கள்தான் நிர்வகிக்கவேண்டும் என்று சொல்லித்தான் கோரிக்கை வைக்கிறார்கள். இந்து அறநிலையத்துறை அதிகாரிகளாக இருப்பவர்களும் இந்துக்கள்தான்; கோயில்களில் இறை வழிபாட்டுக்குச் செல்லும் மக்களும் இந்துக்கள்தான். இதில் என்ன குழப்பம் இவர்களுக்கு?
இந்து அறநிலையத்துறை என்ற நிறுவனம் அரசுத் துறையாக செயல்படும்போதுதான், கோயில் சொத்துப் பராமரிப்பும், கோயில் நிர்வாகமும் எந்தவித பாரபட்சமின்றி செவ்வனே நடைபெறும். மாறாக, குறிப்பிட்ட தனிநபரின் கைகளில் கோயில் நிர்வாகத்தைக் கொடுப்பது என்றால், அந்தத் தனிநபர் யார்? எதன் அடிப்படையில் அவரை நம்பி கோயில்களை ஒப்படைக்க முடியும்?
ஓர் ஊரில் பெரும்பான்மையாக 4, 5 சமுதாயத்தினர் இருக்கிறார்கள் என்றால், எந்த சமுதாயத்தினரிடம் கோயில் நிர்வாகத்தை ஒப்படைப்பது? ஆக, இவையெல்லாம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தவும் பிரச்னையை உருவாக்கவும்தானே வழிவகுக்கும். எனவே, இப்போது இருக்கிற நடைமுறைதான் சரியானது.
கோயில் என்ற பெயரில், தனியாக ஒரு நிறுவனம் நடத்தி அங்கு தியானம், யோகா என எல்லாவற்றுக்கும் தனித்தனியே கட்டணங்களை வசூல் செய்துகொண்டு, குறுகிய காலத்திலேயே சிலர் ஆயிரக்கணக்கிலான கோடிகளுக்கு அதிபதி ஆகிவிடுகிறார்கள். பொதுமக்களுக்குச் சொந்தமான கோயில்களையும் அதன் சொத்து வரவு செலவுகளையும் தங்களது தனிப்பட்ட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புகிறார்கள். அதற்கு அரசு ஒருபோதும் துணை போகாது!'' என்கிறார் உறுதியாக.
source https://www.vikatan.com/government-and-politics/policies/temples-will-be-under-government-control-says-admk-dmk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக