பார்வையில்லாதவர்களுடைய உலகம் எப்படியிருக்கும்? கருப்பாக, இருட்டாக... பார்வையுள்ளவர்கள் அந்த உலகத்தை எவ்வளவு சிருஷ்டித்தாலும் அது உண்மைக்கு நெருக்கமாக இருக்காது. பார்வையில்லாதவர்கள் அனுபவிக்கும் துயரத்தை பார்வையில்லாதவர்கள் மட்டுமே அறிவார்கள். ஆனால், தேனி சீருடையான் படைப்புகளை வாசிக்கும் அனைவரும் அந்த இருட்டு உலகில் பிரவேசிக்கலாம்.
ஒரு பக்கம் விளிம்பில் தள்ளுகிற வறுமை, இன்னொரு பக்கம் விழித்திறன் சவால்... இரண்டிலும் ஆட்பட்டு கடும் துயரங்களை அனுபவித்து மீண்டவர் சீருடையான். பார்வையற்றவர்களின் உலகத்தை முற்றுமுழுதாக வாழ்ந்து பார்த்தவர். தேனி நகரத்தில் சிறிய பழக்கடை ஒன்றை நடத்தும் சீருடையான் எழுதிய அத்தனை படைப்புகளும் அவர் வாழ்விலிருந்து முளைத்தவைதான்.
ஒவ்வொரு வாரமும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் நூலொன்றை அறிமுகம் செய்யும் கமல்ஹாசன் இந்த வாரம் வித்தியாசமான ஒரு நூலை அறிமுகம் செய்தார். விகடன் பிரசுரம் வெளியிட்ட இந்த நூலின் ஒரு பக்கம் எழுத்தாளர் தேனி சீருடையானின் 'நிறங்களின் உலகம்' நாவல். இன்னொரு பக்கம், மனோகர் தேவதாஸ் வரைந்த ஓவியங்கள், 'நிறங்களின் மொழி'. 'நிறங்களின் உலகம்' சீருடையானின் வாழ்க்கையைப் பேசும் நிஜத்துக்கு நெருக்கமான நாவல். 'நிறங்களின் மொழி', மனோகர் தேவதாஸின் ஓவியங்கள், கோடுகளில் மனக் காட்சிகளை உயிர்பிப்பவை.
ஆகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான சீருடையான் ‘ஆகவே’, ‘ஒரே வாசல்’, ‘விழுது’, ‘பயணம்’, ‘மான் மேயும் காடு’ போன்ற பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். பழ வியாபாரியின் வாழ்க்கைப்பாட்டைப் பேசும் 'கடை' நாவல் சீருடையானின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்று.
தேனிக்கு அருகேயுள்ள அம்மாப்பட்டியைச் சேர்ந்தவரான் இவரின் இயற்பெயர் கருப்பையா. சீருடையானின் தந்தை பொரி கடலைக் கடையில் வேலை செய்தவர். கிடைக்கும் வருமானத்தை குடித்து அழித்தவர். 6 சகோதரர்களோடு பிறந்த சீருடையானுக்கு வறுமையைத் தவிர வேறெதுவும் வாய்க்கவில்லை. சோளக்களி... அதுவும் கிடைக்காவிட்டால் வயற்காடுகளில் விளைந்துகிடக்கும் சனம்புக்கீரை... இதுதான் உணவு. இந்தச் சூழலில் 2-ம் வகுப்புப் படிக்கும்போது பார்வையில் பிரச்னை தொடங்கியது. மெல்ல மெல்ல வெளிச்சம் குறைந்தது. ஒருநாள் கடைக்குச் சென்ற சீருடையான் வழியில் இருந்த மின்கம்பத்தில் மோதி காயமடைந்து வந்தார். அப்போதுதான் குடும்பம் அறிந்தது, சீரூடையானுக்குப் பார்வை மொத்தமாக பறிபோனதை! இது நடந்து கொஞ்ச நாளில் அவரது தங்கைக்கும் பார்வை பறிபோனது இன்னொரு சோகம்.
குடும்பத்தின் துயரமறிந்து உறவுக்காரர் ஒருவர் சென்னையில் இருக்கும் பார்வையற்றோர் பள்ளியைப் பற்றிச்சொல்ல, தட்டுத்தடுமாறி அங்கு வந்து சேர்ந்தார் சீருடையான். பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு ஊர் திரும்பி சீருடையான், ஓர் இலவச கண்சிகிச்சை முகாமுக்குச் செல்ல, அவர்கள் மூலம் நடந்த அறுவை சிகிச்சையில் ஓரளவுக்குப் பார்வை திரும்பியது. இனி எல்லாம் இருட்டுதான் என்று நம்பிய ஒருவருக்குத் திடீரென வெளிச்சம் கிடைத்தால்... சீருடையானுக்கு வாழ்க்கையில் பிடிப்பு வந்தது. வாழ்வாதாரத்துக்கு ஒரு பழக்கடையைத் தொடங்கிவிட்டு, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து இலக்கியம் செய்ய ஆரம்பித்தார். எப்போதும் அழுக்கு தோய்ந்த உடையோடு சுற்றும் ஒரு மனிதனை நினைவுகூரும் வகையில் 'சீருடையான்' என்று தனக்கு புனைப்பெயர் இட்டுக்கொண்டார்.
உச்சபட்ச இருட்டையும் அதிவெளிர் வெளிச்சத்தையும் ஒருசேரத் தரிசித்த சீருடையானின் வாழ்க்கைதான் 'நிறங்களின் உலகம்'. நாவலின் கதாநாயகனான பாண்டியில் நாம் சீருடையானை அடையாளம் காணலாம். பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடமும், அதிலும் மாநில அளவில் ஆங்கிலத்தில் முதலிடமும் பெற்ற பாண்டியால் அதற்கு மேல் படிக்க வாய்க்கவில்லை. அறுவை சிகிச்சையால் பார்வை பெற்று தன் படிப்பை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யச் சென்றால் அங்கும் சிக்கலாகிறது. ''உனக்கு பார்வை வந்துவிட்டது. ஆனால் பார்வையற்றோர் பள்ளி சான்றிதழ் இங்கே செல்லாது'' என்கிறார்கள். பாண்டி என்னவாகிறான் என்று நீள்கிறது நாவல்.
பார்வையற்றவர்களின் அன்றாடங்கள், அவர்கள் எதிர்கொள்கிற சிரமங்கள், அவர்களை சமூகம் நடத்துகிற விதம் அனைத்தும் நாவல்தோறும் பதிவாகியிருக்கிறது. பின்புலமில்லாத, பொருளாதார பலமில்லாத, கட்டுப்பாடில்லாமல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிற ஒரு குடும்பத்தை சூழ்கிற வறுமை எவ்வளவு கொடூரமானது என்பதையும் நாவல் வெளிச்சமிடுகிறது. நாவலாசிரியனின் சொந்த அனுபவமாகவும் இருப்பதால் அதன் வலி நம்மையும் துளைக்கிறது. குடிகார கணவனால் எந்தப் பயனுமில்லாத சூழலில் தம் பிள்ளைகளின் பசியாற்ற தாய் படுகிற துயரத்தை நம்மால் எளிதில் கடக்க முடியவில்லை.
வாழ்க்கை என்னமாதிரி அனுபவங்களை ஒவ்வொருவருக்கும் வழங்கிக்கொண்டே செல்கிறது? ஒருவருக்கு வாய்க்கும் அனுபவத்தை இன்னொருவர் கற்பனைகூட செய்யமுடியாது. பாண்டியின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. கடையின் முன்நின்று பழங்களை துணியால் துடைத்துக்கொண்டிருக்கிற 'வாழும் பாண்டி' சீருடையானின் கரங்களில் எத்தனை தழும்புகள்... நிறங்களின் உலகம் நாவலை எல்லோரும் படிக்க வேண்டும்.
இந்த நூலை இன்னொரு பக்கம் திருப்பிப் புரட்டினால் 'நிறங்களின் மொழி'யாக மாறுகிறது. ஓவியர் மனோகர் தேவதாஸின் ஓவியங்கள். மனோகரின் வாழ்க்கை, அன்பாலும் காதலாலும் துயரத்தாலும் நிரம்பியது. மனோகர் தன் மனைவி மஹிமா மேல் மிகுந்த அன்பு கொண்டவர். ஒருநாள் ஒரு பெரும் விபத்து. படுகாயமடைந்த மஹிமாவுக்கு கழுத்துக்கீழே உடல் செயல்படவில்லை. அடுத்து இன்னொரு பேரிடியாக மனோகரின் பார்வை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்தச்சூழலில் தான் பார்த்த மதுரையை ஓவியங்களாக்கத் தொடங்குகிறார் தேவதாஸ். மிகவும் நுட்பமாக அவர் வரைந்த ஓவியங்கள் பெரும் கவனம் பெற்றன. ஒரு கட்டத்தில் பார்வை முழுமையாகப் பறிபோனது. அதன் பிறகான நாள்களிலும் தன் மனதில் படிந்த மதுரையையும் சென்னையையும் கோடுகளால் உயிர்பிக்கிறார் மனோகர் தேவதாஸ். வண்ணங்களை அறியமுடியாததால் கருப்பு-வெள்ளையாகவே வரைகிறார்.
‘Green Well Years’, ‘Mahema and the Butterfly’ என 7 நூல்களை எழுதியுள்ளார் தேவதாஸ். இந்திய அரசின் உயர் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார்.
மதுரை ஆட்சியர் அலுவலகம், பழைமையான வீதிகள், மாடங்கள், மயில், மயிலிறகு என மனோகர் தேவதாஸ் வரைந்த நிறைய கருப்பு வெள்ளை சித்திரங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
சிறு பிராயத்தில் பார்வையிழந்து, பதின்பருவத்தில் வெளிச்சம் மீண்ட எழுத்தாளரின் நாவல், மத்திம வயதுக்கு மேல் படிப்படியாக வெளிச்சம் தொலைத்த ஓர் ஓவியரின் சித்திரங்கள் என 'நிறங்களின் உலகம்', 'நிறங்களின் மொழி' நூல் நம் மனதில் படிந்திருக்கும் இருளகற்றி பிரகாச வெளிச்சம் தருகிறது!
source https://www.vikatan.com/arts/literature/nirangalin-mozhi-nirangalin-ulagam-kamals-book-suggestion-this-week-in-bigg-boss
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக