Ad

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

``திருவொற்றியூர் மக்களே'' மேடையில் கர்ஜித்த பாரதிராஜா... நெகிழ்ந்த சீமான் - தொகுதி ஸ்பாட் விசிட்!

தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்றிரவு ஏழு மணியோடு அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் முடிவடைந்தன. இறுதி நாளான நேற்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொளத்தூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் டி.டி.வி தினகரன் கோவில்பட்டி தொகுதியிலும் சீமான் திருவொற்றியூர் தொகுதியிலும் நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும் என அவரவர் போட்டியிடும் தொகுதிகளில் தங்கள் பிரசாரத்தை மேற்கொண்டனர். இவர்களில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமானின் கடைசிக்கட்ட பிரசாரங்கள் எப்படி இருந்தன, மக்களிடம் அவருக்கு ஆதரவு எப்படியிருக்கிறது என்பவை குறித்து விரிவாகக் காண்போம்.

சீமான் பிரசாரம்

நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியில் அனைவராலும் அறியப்பட்டவர் என்றால், அது சீமான்தான். அதனால் 234 தொகுதிகளுக்கும் அவர் சுற்றுப்பயணம் செல்ல வேண்டியிருந்தது. அதனால் ஒரு மாதத்துக்கு முன்பாக, கடந்த மார்ச் 7-ம் தேதி அவருடைய பிரசாரம் தொடங்கியது. நீலகிரி மாவட்டம் தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்த சீமான், ஒட்டுமொத்தமாக 8,500 கி.மீட்டர் சுற்றி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு நாள்கள் அவர் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர். பிறகு வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக சென்னை வந்த சீமான், கடந்த 14-ம் தேதியும் தொகுதி முழுவதும் சுற்றிவந்தார். அதற்கடுத்து 16 நாள்களுக்குப் பின் கடந்த ஏப்ரல் 1-ம் தேதிதான் சென்னைக்கு வந்தார் சீமான்.

முதல் இரண்டு நாள்கள், தான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியோடு, ராயபுரம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, ஆர்.கே.நகர் ஆகிய தொகுதிகளுக்குள்ளும் வலம்வந்தார் சீமான். கடந்த 3-ம் தேதி திருவொற்றியூர் தொகுதியை மையமாகவைத்து பிரசாரத்தைத் தொடங்கினார். காலை பிரசாரத்தை தன் தம்பி, தங்கைகள் படையுடன் பறையொலி முழங்க வலம்வந்தார் சீமான். அவருடன் இயக்குநர் களஞ்சியம், மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் முத்துப்பாண்டி ஆகிய தோழமை அமைப்பினரும் சீமானுக்காக வாக்குக் கேட்டு வலம்வந்தனர். வழிநெடுகிலும் சீமானுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. `உங்கள் பிள்ளைகளின் தாய்மாமன் உங்களிடம் வாக்குக் கேட்டு வருகிறான்' என்கிற அறிவிப்பு முழங்க தொகுதியைச் சுற்றிவந்தார். சீமானோடு செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கு இளைஞர்களும், தங்கள் பிள்ளைகளைத் தூக்கிவைத்து புகைப்படம் எடுக்க திருமணம் ஆன இளைஞர்களும் குவிந்தனர். பல இடங்களில் பெண்கள் சீமானுக்கு நெற்றித் திலகமிட்டு வாழ்த்தி அனுப்பினர். நாம் தமிழர் கட்சியினர் மட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த ஷாகீன் பாக் போராட்டக்குழு - தமிழ்நாடு, இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம், இஸ்லாமிய சேவை சங்கம் ஆகிய இஸ்லாமிய அமைப்பினரும் நோட்டீஸ் விநியோகித்து சீமானுக்காக வாக்குக் கேட்டனர்.

சீமான் பிரசாரம்

மாலையில், சுங்கச்சாவடியில் தொடங்கிய பிரசாரத்தில் சீமானுடன் இயக்குநர் பாராதிராஜாவும் இணைந்துகொண்டார். சாலையில் சென்றுகொண்டிருந்த மக்கள் பாரதிராஜாவைக் கண்டதும், ``பாரதிராஜா, பாரதிராஜா’’ என உற்சாகமாக அவருக்கு வரவேற்பு அளித்தனர். வாகனத்தில் இருந்தபடியே பாரதிராஜா கையசைக்க, வீட்டு வாயிலில், மாடிப்படிகளில், ஜன்னல் ஓரத்தில் நின்ற அனைவருமே உற்சாகமாகக் கையசைத்தனர். திருவொற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சீமானுக்கு ஆதரவாக வேலை செய்ய நாம் தமிழர் தொண்டர்கள் திருவொற்றியூரில் அணிவகுத்திருந்தனர்.

திருவொற்றியூர் பெரியார் நகரில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் கூடியிருந்தனர். முதலில், இயக்குநர் பாரதிராஜா மைக் பிடித்து உரையாற்றினார்.

அவர் பேசும்போது, ``என்னுடைய 50 ஆண்டுகால கலையுலக வாழ்க்கையில் எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்ளவில்லை. யார் யாரோ அழைத்தார்கள், எப்படி, எப்படியோ அழைத்தார்கள் ஆனாலும் நான் அரசியல் களத்தில் இறங்கிவிடக் கூடாது என உறுதியாகவே இருந்தேன். எனக்கு ஒரு கவலை இருந்தது. என் இனம், மொழி, மக்கள், மண், மரம், செடி, கொடி, பூ என எதற்கும் ஒரு தீங்கு ஏற்பட்டால் முதல் குரல் என்னுடையதாகத்தான் இருக்கும். எனக்கு முன்னால் எவ்வளவோ பேர் இந்த மண்ணில் தமிழைப் பற்றியும், தமிழ்த் தேசியத்தையும் பேசி வந்திருக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகளையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் கனவுகளாக சுமந்துகொண்டிருந்த இந்த விஷயத்தை பேச்சில் மட்டுமல்லாமல் செயலிலும் நிரூபித்து வருபவன் சீமான் மட்டுமே. அதனால்தான் இந்த மேடையில் தைரியமாக நிற்கிறேன்.

பாரதிராஜா - சீமான் பிரசாரம்

உலக வரலாற்றிலேயே, இவ்வளவு அறிவுசார் இளைஞர்கள் திரண்டிருப்பது சீமான் என்கிற ஒருவன் பின்னால் மட்டும்தான். சீமான் பேசுகிற ஒவ்வொரு வரியிலும் உயிர், உண்மை, சத்தியம் இருக்கிறது. அதனால்தான் மற்றவர்கள் அவனைப் பார்த்து பயப்படுகிறார்கள். சீமானோடு ஒரே மேடையில் விவாதித்து அவனை யாராவது ஜெயித்துவிட்டால் நான் அவர்களுக்குத் தலை வணங்குகிறேன். அரசியல் மேடைகளில் ஏறவே மாட்டேன். ஆனால், என் பிள்ளை மக்களிடம் கத்திக் கத்தி வறண்டு போயிருக்கிறான். சுடுகாட்டில் பேசியிருந்தால்கூட ஏழு பேர் என்னவென்று கேட்டிருப்பார்கள். சீமானை விட்டால் தமிழினத்துக்கு விடிவில்லை. இனியொருவன் பிறந்துதான் வர வேண்டும். தனியொருவனாக களத்தில் நிற்கும் சிங்கம் அவன். தயவு செய்து இவனைக் கைவிட்டு விடாதீர்கள். திருவொற்றியூர் மக்களே... உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் சீமான். தவறவிட்டீர்கள் என்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. சீமானை வெற்றிபெறவைத்து மிகப்பெரிய வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும். சீமான் வெற்றிபெற்ற பிறகு இங்கு வந்து இதைவிட நிறைய பேசுவேன்'' என உணர்ச்சி பொங்கப் பேசி முடித்தார்.

Also Read: திருவொற்றியூர் தொகுதியில் சீமானின் வெற்றி வாய்ப்பு எப்படி?#TNElection2021

பாரதிராஜா பேசி முடிந்ததும், அவரைக் கிளம்பச் சொல்லி சீமான் கோரிக்கைவைக்க, ``இல்லை, நான் உன் பேச்சைக் கேட்கிறேன்'' என பாரதிராராஜா சொல்ல, ``இல்லை நீங்கள் செல்லுங்கள்’’ என வழியனுப்பி கட்டித் தழுவி பாசத்தைப் பகிர்ந்துகொண்டனர். இயக்குநர் பாராதிராஜாவின் கைகளைப் பற்றி சீமான் உருக தம்பிகள் கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரித்தனர். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் வழக்கமான பாணியில் மிக நீண்ட உரையாற்ற கூட்டம் நிறைவடைந்தது.

சீமான் பிரசாரம்

நேற்று மீண்டும், திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட மணலி பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கி, மாலையில், சாத்தான்காடு நெடுஞ்சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தோடு பிரசாரத்தை நிறைவு செய்தார் சீமான். தொகுதிக்குள் சீமானுக்குக் கிடைக்கின்ற வரவேற்பு வாக்குகளாக மாறினால், வெற்றி நிச்சயம். ஆனால், வாக்குகளாக மாறியிருக்கின்றனவா என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் தெரிந்துவிடும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/seemans-last-day-campaign-spot-visit

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக