Ad

வெள்ளி, 21 மே, 2021

டூல்கிட் சர்ச்சை: கடுமையாக குற்றம்சாட்டும் பா.ஜ.க; மறுக்கும் காங்கிரஸ்! - என்ன பிரச்னை?

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நோய்த் தொற்றைக் குறைப்பதற்கு உடனடியாக தடுப்பூசிகள் செலுத்துவதே முதன்மையான ஒன்று என்று ஆய்வாளர்கள் பலர் தெரிவித்தாலும், தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு தாரை வார்த்துவிட்டு தற்போது சொந்த நாட்டிற்கு வழியில்லாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது, இந்தியா என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். ஒட்டுமொத்த ஜனத்தொகையில் இதுவரை 10% முதல் 15% வரையிலானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்தந்த மாநில அரசுகளால் போடப்பட்ட ஊரடங்கின் காரணமாக இந்தியாவின் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனாவின் பரவல் கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, தடுப்பூசிகள் தட்டுப்பாடு துவங்கி ஆக்ஸிஜன் தடுப்பாடு வரை நாட்டில் பிரச்னைகளுக்கு பஞ்சமிலாமல் நடந்து வரும் சூழலில் தற்போது மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க இடையில் ஒரு புதிய சர்ச்சையானது வெடித்துள்ளது.

கொரோனா வைரஸ்

பிரச்னை என்ன?!

இந்தியாவில் கொரோனா கட்டுப்படுத்துதலில் மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து விமர்சித்த கொரோனா ஆய்வுக் குழுவின் மூத்த விஞ்ஞானி ஷாஹித் ஜமீல் சமீபத்தில், ஆய்வுக் குழுவிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சமீபத்தில் நடைபெற்ற கும்பமேளா விழா தான் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகக் காரணம் என்று குற்றம்சாட்டியதை யோகா பாபா ராம்தேவ், கைலாசானந்த கிரி உள்ளிட்டோர் மறுத்தனர்.

அதைத் தொடர்ந்து, ``காங்கிரஸ் கட்சியினர் கொரோனா மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். இதற்காக ‘டூல்கிட்’ ஒன்றை உருவாக்கி பா.ஜ.க.வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க செயலாற்றி வருகின்றனர்” என்று காங்கிரஸ் கட்சியின் சின்னம் பொறித்த டூல்கிட் ஒன்றினை பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அந்த டூல்கிட்டின் மூலம் சமூக வலைதளங்களில், பா.ஜ.க. குறித்த பல அவதூறு கருத்துக்களை பிரசாரமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். மேலும், இதில் இந்திய வகை கொரோனா வைரஸினை ‘மோடி வகை கொரோனா வைரஸ்’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியினர் சில ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு இந்தியாவில் மோடியின் நற்பெயரையும், பா.ஜ.க.வின் நற்பெயரையும் கெடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் இது போன்று காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு பரப்பியுள்ள பா.ஜ.க குறித்த தவறான கருத்துக்களை உடனடியாக நீக்குமாறு ட்விட்டர் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் தேசிய தலைவரான ஜே.பி. நட்டா, ஸ்மிருத்தி ராணி, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உட்பட பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் சிலர் இதனை பகிர்ந்ததோடு காங்கிரஸ் கட்சியினை கடுமையாக சாடினர்.

மறுக்கும் காங்கிரஸ்:

இந்நிலையில், இந்த விவகாரத்தினை காங்கிரஸ் தரப்பினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர். அத்தோடு, சட்டீஷ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த வியாழக்கிழமை (20.05.2021) அன்று காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் மாணவர்கள் அமைப்பின் சார்பில் காவல்துறையில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

பா.ஜ.க - காங்கிரஸ்

`பா.ஜ.க.வினர் எங்கள் மீது தேவையின்றி அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். அவர்கள் செய்த தவறினை மறைக்க இது போன்று திசைதிருப்புகின்றனர். அதனால் இதனை மேற்கொண்ட சம்பித் பத்ரா, ஜே.பி. நட்டா, ஸ்மிருதி ராணி உள்ளிட்டோரின் கணக்குகள் முடக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பா.ஜ.கவினரின் டூல்கிட் தொடர்பான பதிவில், `manipulated media’ என்ற டேக்கை ட்விட்டர் சேர்த்தது. இதற்கு மத்திய பா.ஜ.க அரசு ட்விட்டர் நிறுவனத்தை கண்டித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டரின் இந்த தடவடிக்கையை அரசு, `முன்கூட்டியே தீர்ப்பளிக்கப்பட்ட, பாரபட்சமான திட்டமிட்ட முயற்சி’என குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு இரு தரப்பினரும் எதிரும் புதிருமாக கருத்து தெரிவிப்பதாலும், காங்கிரஸ் தரப்பினர் காவல்துறையில் தொடுத்த வழக்கனாது இறுதி செய்யப்படாமல் இருப்பதாலும். இது குறித்த தெளிவான முடிவை எடுப்பதில் ட்விட்டர் தரப்பு ஆலோசனையில் உள்ளது. எனினும், இதற்கு விரைவில் ஒரு முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/congress-toolkit-controversy-what-was-the-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக