Ad

சனி, 17 ஜூலை, 2021

``இன்டர்னல் பாலிடிக்ஸ் என சொல்லிவிட்டார் எடப்பாடி!'' - தோப்பு வெங்கடாசலம் ஓப்பன் டாக்

தமிழக அரசியலில், கட்சி மாறுவோர் எல்லாம் தி.மு.க-வில் வந்து அடைக்கலமாகும் சீஸன் இது!

2021 சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காமல் கட்சியினால் தனித்துவிடப்பட்டவர் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்! கோபத்தில் அறிவாலயம் வந்து தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். ''முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னைத் தட்டிக்கொடுத்து, வரவேற்றார். சரிக்கு சமமாக நாற்காலியில் உட்காரவைத்தார்'' என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொண்ட தோப்பு வெங்கடாசலத்தை நேரில் சந்தித்தேன்....

கருணாநிதி

''தி.மு.க-வில் இணைந்ததற்கு காரணம் என்ன?''

''தி.மு.க., அ.தி.மு.க என இந்த 2 கட்சிகளுமே திராவிடக் கட்சிகள்தான். இன்னும் சொல்லப்போனால், தி.மு.க என்பது அ.தி.மு.க-வுக்கே தாய்க் கழகம்! ஏனெனில், இந்த இயக்கத்துக்கான கரு, பேரறிஞர் அண்ணா; அவருக்குப் பிறகு தி.மு.க-வை வழிநடத்தியவர் கருணாநிதி. எனவே தாய்க் கழகத்தில்தான் நான் இணைந்திருக்கிறேன்.

முதல் அமைச்சரின் சீரிய பணிகள் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களையும் ஈர்த்துவருகிறது. குறிப்பாக, பெண்களுக்குப் பயன்படுகிற விதத்தில், பேருந்தில் இலவச பயண திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார். கடுமையான நிதி நெருக்கடி சூழலிலும்கூட, கொரோனா நிவாரண நிதியை குடும்பங்கள்தோறும் வழங்கியிருக்கிறார்.''

''தி.மு.க-வில் 25 ஆயிரம் பேர்களை இணைப்போம் என்று கூறியிருக்கிறீர்களே... உங்களுக்கு வாக்களித்தவர்களே 10 ஆயிரம் பேர்தானே?''

''நான் என்னுடைய ஆதரவாளர்கள் 25 ஆயிரம் பேரை தி.மு.க-வில் இணைப்பேன் என்று சொல்லவில்லையே.... பொதுமக்களிலிருந்து 25 ஆயிரம் பேர்களை தி.மு.க உறுப்பினர்களாக்குவேன் என்றுதான் கூறியிருக்கிறேன்.

அதாவது என் தொகுதியில் எனக்கு 10 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதேபோல் என் மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகள் இருக்கின்றன. அதில் கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்கின்ற, தி.மு.க-வால் ஈர்க்கப்பட்டுள்ள பொதுமக்களையும் சேர்த்து மொத்தம் 25 ஆயிரம் பேரை கட்சி உறுப்பினர்களாக கொண்டுவந்து சேர்ப்பேன்!''

தி.மு.க-வில் இணைந்த தோப்பு வெங்கடாசலம்

''அ.தி.மு.க-வில் உங்களுக்கு என்னதான் பிரச்னை... ஏன் தேர்தலில் சீட் கொடுக்கவில்லை?''

''எடப்பாடி பழனிசாமியிடமே இதுகுறித்து கேட்டேன்... அதற்கு அவர் 'இன்டர்னல் பாலிடிக்ஸ்' என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டார். 'இன்டர்னல் பாலிடிக்ஸ்' இல்லாத இடம் எங்கே இருக்கிறது. அவரது தொகுதியிலேயேகூட, இன்டர்னல் பாலிடிக்ஸ் இருக்கும்தானே! இன்றைக்கு அவரிடம் பதவி இருப்பதால், அந்த இன்டர்னல் பாலிடிக்ஸ் வெளியே வராமல் இருக்கலாம். நாளை அவருக்கும் ஒரு பின்னடைவு வந்தால், அந்த இன்டர்னல் பாலிடிக்ஸ் வெளியே வரும்.

ஆக, எல்லா தொகுதியிலுமே இன்டர்னல் பாலிடிக்ஸ் இருக்கும்தான். அதை சரிசெய்யவேண்டியதுதான் கட்சித் தலைமையின் கடமை!''

''அ.தி.மு.க-வில் உங்கள் பங்களிப்புதான் என்ன?''

''மாணவப் பருவத்திலிருந்தே நான் அ.தி.மு.க-வில்தான் இருந்துவந்தேன். 1985-ல் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, அ.தி.மு.க மாணவர் அணித் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவன். அப்போது நடைபெற்ற தேர்தலிலும் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் பொன்னுசாமிக்காக நான் தேர்தல் வேலை செய்துள்ளேன். அ.தி.மு.க-வுடனான எனது நீண்ட நெடிய பயணத்தில் இதுவரை கட்சிக்காக 8 முறை சிறை சென்றிருக்கிறேன்.

தோப்பு வெங்கடாசலம்

தொழில்வளம் நிறைந்த தொகுதி பெருந்துறை. தொழிலாளர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துவந்ததால், ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்துவந்தது பெருந்துறை. அப்படிப்பட்ட பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க-வை வலுவாக காலூன்ற வைத்ததில் என்னுடைய பங்களிப்பும் உண்டு.

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும்கூட கொங்கு மண்டலத்தில் உள்ள அத்தனை அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சரது தொகுதியில் கிடைத்த வாக்குகளைவிடவும் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க கூட்டணிக்கு அதிக வாக்குகளை வாங்கிக் கொடுத்துள்ளேன். இதற்காக எடப்பாடி பழனிசாமியே என்னைப் பாராட்டவும் செய்தார். ஆனாலும் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை!''

''பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் வெற்றி பெற்றுவிட்டார்தானே?''

''ஆளுங்கட்சி என்ற பலம், ஏற்கெனவே நான் தொகுதியில் செய்துவைத்திருக்கும் நல்ல திட்டங்கள் எல்லாம் சேர்ந்து, அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க-வுக்கு எதிராக 9 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தினார் ஜெயக்குமார். அந்த 9 வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம் கிடைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக அ.தி.மு.க அமைச்சர் ஒருவரே உதவியும் செய்தார். இவர்கள் அத்தனைபேரின் சூழ்ச்சிகளையும் குளறுபடிகளையும் தாண்டி பெருந்துறை யூனியன் சேர்மன் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு வெற்றி தேடித்தந்தேன் நான்.''

கே.சி.கருப்பணன்

''ஜெயக்குமார் மீது ஆர்வம் காட்டுகிற முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன், உங்கள் மீது வெறுப்பு காட்டுவதற்கு என்ன காரணம்?''

''இல்லையில்லை... அவர் ஜெயக்குமார் மீது ஆர்வம் காட்டுவதாக சொல்லமுடியாது. பெருந்துறை தொகுதியை, தோப்பு வெங்கடாசலத்துக்கு கொடுக்கக்கூடாது என்று சொல்கிறபோது, வேறு யாருக்கும்கூட அந்தத் தொகுதியை அவர் கொடுத்திருக்கலாம். ஏனெனில், கட்சிக்காக உழைத்த சீனியர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் என பலரும் அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள்.''

''சசிகலா ஆதரவாளராக நீங்கள் இருந்ததால்தான் உங்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படவில்லையா...?''

''ஜெயலலிதாதான் என்னை மாவட்டச் செயலாளர் ஆக்கினார். அமைச்சர் பதவியும் அவர்தான் கொடுத்தார். ஜெயலலிதாவின் பின்புலத்தில் சசிகலா இயங்கிவந்தாலும்கூட, நான் இதுவரை சசிகலாவிடம் எந்த உதவியும் கேட்டுப்பெறவில்லை. அவரோடு நான் பேசியதுகூட கிடையாது.''

''அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா இருந்திருந்தால் நீங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்க மாட்டீர்களோ?''

''அதைப்பற்றி எனக்குத் தெரியாது. ஏனெனில், சசிகலாவோடு எனக்குப் பழக்கமே கிடையாது என்கிறபோது, அவரின் குணாதிசயம் என்ன, அவர் எப்படி கட்சியை வழிநடத்துவார் என்பதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்?''

இ.பி.எஸ்.-சசிகலா-ஓ.பி.எஸ்.

''அ.தி.மு.க-விலிருந்து வெளியேறுபவர்கள் இரட்டைத் தலைமையின் செயல்பாட்டை குறை கூறுகிறார்களே...?''

''ஒரு கட்சியில் இரட்டைத் தலைமை வேண்டுமா அல்லது ஒற்றைத் தலைமை வேண்டுமா என்பதெல்லாம் அந்தக் கட்சியின் தொண்டர்களின் முடிவைப் பொறுத்தது. நான் அ.தி.மு.க-வில் இருந்தவரை இதுபோன்ற எந்தவொரு கோஷத்தையும்கூட முன்வைக்கவில்லை.''

Also Read: `இளம்பெண்ணிடம் அத்துமீறல்; தற்காப்பு முயற்சியில் கொலை!'- பெண்ணை விடுவித்த திருவள்ளூர் எஸ்.பி

''அ.தி.மு.க-வில் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தற்போது முக்கியத்துவம் தரப்படுகிறது என்கிறார்களே...?''

''நான் பி.ஏ வரலாறு படித்து பட்டம் பெற்றவன். மாணவப் பருவத்திலிருந்தே கொள்கைப் பிடிப்புடன் அ.தி.மு.க-வில் பணியாற்றிவந்தவன். எனவே ஜாதி ரீதியான எந்தப் பார்வையும் எனக்குக் கிடையாது.

நேற்றுவரை நான் அ.தி.மு.க-வில் இருந்தேன். இன்றைக்கு நான் கட்சி மாறி வந்துவிட்டபிறகு, அ.தி.மு.க மீது ஜாதி ரீதியாக கருத்து சொல்வதென்பது சரியாக இருக்காது!''

ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.

''அ.தி.மு.க-வின் இரட்டைத் தலைமையான இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்-ஸோடு உங்களுக்கு முரண்பாடு ஏற்பட்டதா?''

''இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்-ஸோடு எனக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை. என் தொகுதியில், 'கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்ட'த்தை செயல்படுத்துவதற்கான அனுமதியையும் நிதி ஒதுக்கீட்டையும் 2014-ம் ஆண்டிலேயே செய்துகொடுத்தவர் ஜெயலலிதா. ஆனால், 2016-ம் ஆண்டு அவரது மறைவுக்குப் பிறகு இந்தத் திட்டத்துக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதில் அன்றைய அ.தி.மு.க அரசு காலதாமதம் செய்துவந்தது.

ஜெயலலிதாவே நடைமுறைப்படுத்திய ஒரு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அன்றைய அ.தி.மு.க அரசு ஏன் தயங்கியது, அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டால், எனக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற பயத்தினால், திட்டத்துக்கு எதிராக யாரும் முட்டுக்கட்டை போட்டார்களா என்றும் தெரியவில்லை.

இந்த சமயத்தில், என்னுடைய எதிர்ப்பை வெளிக்காட்டும்விதமாக நானும் அரசு சார்ந்த கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தேன். அதேசமயம், ஓர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக ஆட்சிக்கு உண்டான என்னுடைய ஆதரவை தொடர்ந்து அளித்துவந்தேன்.''

Also Read: தந்தை விவசாயி; மகள்கள் 5 பேரும் அரசு அதிகாரிகள்; ராஜஸ்தான் சகோதரிகளுக்கு குவியும் பாராட்டு!

''நீங்கள் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால், புறக்கணிக்கப்பட்டீர்களா?''

''இல்லையில்லை... அந்த காலகட்டத்தில் டி.டி.வி தினகரனும் அ.தி.மு.க-வில்தான் இருந்துவந்தார். எனவே, நிதி ஒதுக்கப்படாதது குறித்த என் ஆதங்கத்தை டி.டி.வி தினகரனிடம் முறையிட்டேன்.

இதேபோல், கரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக ஜெயலலிதா அனுமதித்திருந்த இடத்தை இ.பி.எஸ் தலைமையிலான அரசு இடம் மாற்றியபோது செந்தில் பாலாஜியும் டி.டி.வி தினகரனிடம் முறையிட்டார். அவரும் இதுவிஷயமாகப் பேசி, உதவி செய்தார். அவ்வளவுதான்!

மற்றபடி 'முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றவேண்டும்' எனக்கோரி ஆளுநரிடம் டி.டி.வி தினகரன் மனு கொடுத்தபோதுகூட நான் அவருடன் செல்லவில்லை.''

மு.க.ஸ்டாலின்

''இதுவரை பெருந்துறை தொகுதியில், ஒருமுறைகூட தி.மு.க வெற்றி பெறவில்லை. இந்தநிலையில், தொகுதியில் தி.மு.க-வை எப்படி வளர்த்தெடுக்கப் போகிறீர்கள்?''

''பொதுவாக ஒரு தொகுதியில், எம்.எல்.ஏ என்ற பதவிக்கு அடுத்தபடியாக உள்ள பதவி என்றால், அது ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிதான். பெருந்துறை தொகுதியில் இப்போது 3 யூனியன் உள்ளன. இதில் 2 யூனியன்களில் தி.மு.க சேர்மன் இருக்கிறார்கள். மீதமுள்ள ஒரு யூனியனிலும் மொத்தம் உள்ள 11 கவுன்சிலர்களில் 3 பேர் தி.மு.க-வினர். இப்போது நான் தி.மு.க-வில் இணைந்தபிறகு என்னுடன் மேலும் 3 கவுன்சிலர் தி.மு.க-வுக்கு வந்துவிட்டனர். ஆக மொத்தம் தி.மு.க கவுன்சிலர்கள் 6 பேர். மீதம் 5 கவுன்சிலர்கள்தான் அ.தி.மு.க அணியில் இருக்கிறார்கள். ஆக, பெருந்துறை தொகுதியிலுள்ள 3 யூனியன்களையுமே இப்போது தி.மு.க கைப்பற்றிவிட்டது. இது ஆரம்பம்தான்.

பெருந்துறை மட்டுமல்ல... விரைவில் ஈரோடு மாவட்டத்தையே தி.மு.க-வின் கோட்டையாக்கி காட்டுவேன்!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-called-it-internal-politics-thoppu-venkatachalam-open-talk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக