Ad

வியாழன், 1 ஏப்ரல், 2021

"பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி!"- தாதா சாஹேப் பால்கே விருதுக்கு ரஜினி உருக்கம்!

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிக்கு வழங்கியிருக்கிறார்கள். 2019ம் ஆண்டுக்கான தாதாசாகேப் விருதை ரஜினியின் நடிப்பு, தயாரிப்பு. திரைக்கதை ஆசிரியர் போன்ற பணிகளுக்காக கௌரவப்படுத்துகிறோம் என அறிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். நடிகர் மோகன்லால், பாடகர்கள் ஆஷா போன்ஸ்லே, ஷங்கர் மகாதேவன், இயக்குநர்கள் சுபாஷ் கை, பிஸ்வஜித் சாட்டர்ஜி ஆகியோர் கொண்ட 5 பேர் குழு ரஜினிகாந்த்தை இவ்விருதுக்கு பரிந்துரைத்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், கமல்ஹாசன் போன்றோர் ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து ரஜினி வெளியிட்டு இருக்கும் நன்றி அறிக்கையில்...

ரஜினி நன்றி அறிக்கை

"இந்தியத் திரையுலகின் மிக உயரிய தாதா சாஹேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுநரான நண்பன் ராஜ் பகதூருக்கும் வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் திரு.சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு K.பாலச்சந்தர் அவர்களுக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஊடகங்கள், மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

என்னை மனமார்ந்து வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய எதிர் கட்சித் தலைவர் நண்பர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கும் மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/rajinikanth-thanks-prime-minister-and-others-for-dadasaheb-phalke-award

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக