Ad

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

தொடரும் தீண்டாமைக் கொடுமைகள்; என்ன செய்கிறார் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்?

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் என்.கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். தாராபுரம் தொகுதியில் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருந்த தற்போதைய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை சட்டமன்றத் தேர்தலில் தோற்கடித்தவர் கயல்விழி செல்வராஜ். எல்.முருகனுக்கு ஆதரவாக தாராபுரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். ஆனாலும், தி.மு.க வேட்பாளராக கயல்விழி செல்வராஜ் அங்கு வெற்றிபெற்றார்.

தமிழரசி ரவிக்குமார்

2006-2011 காலக்கட்டத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த தமிழரசி ரவிக்குமார், 2021 சட்டமன்றத் தேர்தலில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த முறையும் அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் இருந்தது. ஆனால், பா.ஜ.க வேட்பாளர் முருகனைத் தோற்கடித்ததன் மூலம் கூடுதல் கவனமும் முக்கியத்துவமும் பெற்ற கயல்விழி செல்வராஜுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது.

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைகின்றன. இந்த காலக்கட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற முறையில் அரசு நலத் திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் கயல்விழி செல்வராஜ் பங்கேற்று வருகிறார். குறிப்பாக, சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய கயல்விழி செல்வராஜ், “ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் தொடர்பாக மாவட்டங்கள் தோறும் கள ஆய்வுகளை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை அனைவரும் பெறும் வகையில் பணியாற்றிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ - மாணவிகள் பள்ளி இடைநிற்றலைக் கண்காணித்துத் தொடர்ந்து அவர்களின் கல்விக் கற்றலை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

ஸ்டாலின்

மேலும், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டப் பணிகள் கரோனா காலத்தில் சரிவர நடைபெறவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிகிறது. தற்போது கரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தொடர்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படும். அடுத்த ஆய்வின்போது சரிவர பணிகளை மேற்கொள்ளாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் எச்சரித்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன் காக்கும் வகையில், 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி சேவையை சர்வதேச பழங்குடியினர் தினத்தன்று தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தார். அமைச்சரின் இத்தகைய செயல்பாடுகள் பாராட்டுகளைப் பெற்றுவருகின்றன.

அதே நேரத்தில், ஆதி திராவிடர் எனப்படும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சாதி ரீதியாக எதிர்கொள்ளும் வன்கொடுமைகள் குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜின் கருத்துகள் என்ன, இந்தப் பிரச்னைகளில் அமைச்சர் என்ற முறையில் அவரின் தலையீடுகள் என்ன என்ற கேள்விகளை சமூகவலைதளங்களில் பலரும் எழுப்புகிறார்கள்.

“ஒவ்வொரு அமைச்சரும் தத்தமது துறை சார்ந்த பணிகளைச் மேற்கொள்கின்றனர். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்ன செய்கிறார்?” என்ற கேள்வியை தன் முகநூல் பக்கத்தில் எழுப்பியிருக்கிறார், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ஆதவன் தீட்சண்யா, “15 நிமிடங்களுக்கு ஒரு சாதிய வன்கொடுமை நிகழும் நாட்டில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரானவர் எவ்வளவு முனைப்பாக தனது அதிகாரத்தை அமல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார் என்பதை தனியே உணர்த்த வேண்டியதில்லை. பட்டியல் சமூகத்தினரின் வாழ்நிலையை எல்லா முனைகளிலும் கண்ணியம்மிக்கதாக மாற்றவும், அதன் குறுக்கே இருக்கும் தடைகளை நீக்குவதற்குமான பொறுப்பை அமைச்சர் ஏற்றிருக்கிறார். அதற்காக களத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆட்சியின் ஒப்புதலையும் ஆதரவையும் திரட்டித்தர வேண்டியவராகவும் அவரே இருந்தாக வேண்டும்.

ஆதவன் தீட்சண்யா

ஆகவே, பட்டியல் சமூகத்தவர் மீது வன்கொடுமை நிகழும்போது, அதில் நேரடியாகவும் வெளிப்படையாகவும் அமைச்சர் தலையிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை நேரிலோ, தவிர்க்கவியலாத சூழலில் அரசின் ஏற்பாட்டில் வரவழைத்தோ, சந்திப்பது அவசியம். அப்படி அமைச்சர் நேரடியாகத் தலையிடும்போது வன்கொடுமை பிரச்னைகளைக் கண்டும் காணாமலும் பல நேரங்களில் சாதியச் சாய்மானத்துடனும் அணுகும் அரசு நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் ஒரு நெருக்கடி உருவாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் உருவாக்கும் விதமாகவும், வன்கொடுமைகளைத் தடுக்கும் விதமாகவும் அமைச்சரின் செயல்பாடுகள் அமைய வேண்டும்” என்று தன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆதவன் தீட்சண்யாவிடம் பேசினோம். “ஓர் அணையில் விரிசல் ஏற்பட்டால் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓடுகிறார். மின் கட்டணத்தில் பிரச்னை என்றால் மின்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். ஆனால், பட்டியலின மக்கள் சாதி ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாகும்போது, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. எல்லா ஆட்சிக் காலத்திலும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக வருபவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரியது. பட்டியலின மக்கள் மீது வன்கொடுமைகள் நிகழும்போது, அந்த இடத்துக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் செல்வது கிடையாது. அமைச்சரே போகவில்லையென்றால், தனித் தொகுதிகளிலிருந்து வெற்றிபெற்ற பட்டியலினத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் எப்படி இருப்பார்கள்? பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசியல் சட்டத்தின் மூலமாகக் கிடைத்த இடஒதுக்கீட்டின் வழியாக தனித் தொகுதிகளில் நின்று எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்று, அமைச்சர் ஆகிறார்கள். அதை உணர்ந்து, அந்த மக்களின் நலன்களுக்காக அவர்கள் செயல்பட வேண்டும். ஆட்சி மாற்றம் நிகழ்ந்து கடந்த 100 நாட்களில் தமிழகத்தில், பல சாதிய வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்கும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சாதிய வன்கொடுமைகள் நிகழ்ந்த இடங்களுக்கு சென்றாரா?

ஸ்டாலின்

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அருகே குருந்தமடத்தில் சாதிய ரீதியில் பழனி என்ற பட்டியலினத்தவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். புதுக்கோட்டையில் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரை சாலையில் வைத்து கடுமையாகத் தாக்கி, சாதி ரீதியாக இழிவுபடுத்தியிருக்கிறார்கள். இந்த வன்கொடுமைகள் குறித்து ஏன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ஏன் பேசவில்லை? ஏன் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவில்லை?

பட்டியலின மக்களை நடிகை மீரா மிதுன் சாதி ரீதியில் இழிவாகப் பேசியிருக்கிறார். அவரது பேச்சை பலரும் கண்டித்துள்ளனர். புகாரின் பேரில் அவர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும், என்னை எதுவும் செய்ய முடியாது என்று தமிழக அரசுக்கு வெளிப்படையாக அவர் சவால் விடுகிறார். எந்த தைரியத்தில் மீரா மிதுன் போன்றவர்களால் இப்படிப் பேச முடிகிறது? சாதிய வன்கொடுமைகள் நடக்கும்போது, அந்த இடத்துக்கு அமைச்சர் நேரடியாகப் போகிறார், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற சூழல் ஏற்பட்டால், இத்தகைய போக்கு குறையும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன ரீதியான ஆறுதலும் நம்பிக்கையும் ஏற்படும். இத்தகைய அநீதிகளுக்கு எதிராக பெயரளவுக்காவது எதையாவது செய்ய வேண்டும் என்கிற அழுத்தம் அரசு நிர்வாகத்துக்கும் காவல்துறைக்கும் ஏற்படும்” என்றார் ஆதவன் தீட்சண்யா.

Also Read: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ஜெயித்தது பா.ஜ.க அரசா, எதிர்க்கட்சிகளா?

இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜிடம் பேசினோம். “தி.மு.க ஆட்சி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்பு அனைத்துத் துறைகளின் மீதும் இருப்பது நியாயமான ஒன்று. நிதித்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர், இந்து அறநிலையத்துறை அமைச்சர் என ஒவ்வொரு அமைச்சரும் அவரவர் துறைகளில் சில முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அந்த வகையில், கடந்த காலத்தில் இல்லாத புதிய முயற்சிகளை ஆதி திராவிடர் நலத்துறையில் அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு குழு முதல்வர் தலைமையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்க வேண்டும். அந்த குழு, கடந்த 10 ஆண்டு காலமாக அமைக்கப்படவில்லை. மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு என்று பெயரிலான அந்தக் குழுவை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தையும் முதல்வர் நடத்தியிருக்கிறார். மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆகஸ்ட் 17-ம் தேதி கூடவிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

சாமுவேல்ராஜ்

அதே நேரத்தில், பட்டியலின மக்களின் நலன்களுக்காகவும் பாதுகாப்புக்காகவும் இதுபோன்ற பல நடவடிக்கைகளை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற முறையில் முன்னெடுக்க வேண்டும். பெண்களுக்கான மாநிலக் கொள்கையை உருவாக்குவதற்காக தமிழ்நாடு சமூகநலன் மற்றும் பெண்கள் நலத்துறை சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது. மாதர் அமைப்புகளை தங்கள் கருத்துகளை அங்கு எடுத்துவைத்துள்ளனர். விவசாயிகள் பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது. அதுபோல, பட்டியலின மக்களுக்கான ஒரு கொள்கையை உருவாக்குவதற்கு பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மத்தியில் பணியாற்றுகிற தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து ஆதி திராவிடர் நலத்துறை கூட்டம் நடத்த வேண்டும்” என்றார் சாமுவேல்ராஜ்.

முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவராக கயல்விழி செல்வராஜ் மாற வேண்டுமென்றால், முதலில் பட்டியலின, பழங்குடியின மக்களின் பிரச்னைகளை அக்கறையுடன் அவர் அணுக வேண்டும் . அப்பேபோதுதான் முதல்வருக்கு மட்டுமல்ல மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக மாறுவார்.

இந்த விமர்சனங்கள் குறித்து விளக்கம் பெறுவதற்காக அமைச்சர் கயல்விழி செல்வராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். பேச முடியவில்லை. எனவே, இது குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கண்ணதாசனிடம் பேசினோம். “ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நலனில் பெரும் அக்கறை கொண்ட அரசாகவே தி.மு.க அரசு என்றைக்கும் இருந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இந்தியாவிலேயே முதன் முறையாக 1973-ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தை அன்றைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார்.

கண்ணதாசன்

அதேபோல, தாட்கோ போன்ற அமைப்புகள் தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இன்றைய தி.மு.க அரசும் பட்டியலின மக்களின் நலன்களில் அக்கறையும் செயல்பட்டு வருகிறது. பட்டியலின மக்களின் பாதுகாப்பு தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்திருக்கிறது. அதேபோல, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அரசின் கவனத்துக்கு வரக்கூடிய பிரச்னைகளில் உடனடியாக அவர் தலையிடுகிறார். அமைச்சரவைக்கு புதியவரான அவரது பணிகள் வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியும்” என்றார் கண்ணதாசன்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-caste-based-atrocities-in-tamil-nadu-and-adi-dravidar-welfare-ministers-reaction-on-it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக