Ad

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

`20 கேள்விகள்; நான்கு விடைகள்; நிர்வாகிகள் தேர்வுக்கு டெஸ்ட்!’- பா.ம.க-வின் புது ரூட்

சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மற்ற தலைவர்களைக் காட்டிலும் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருபவர் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அரசியல் சார்ந்த பதிவுகள் மட்டுமின்றி அறிக்கைகள், நையாண்டிகள் எனவும் எப்போது இவரின் அதிகாரபூர்வ பக்கங்கள் ஆக்டிவ்வாகவே இருக்கும். அவதூறு வார்த்தைகளுடன் வரும் கமெண்ட்டுகள் உடனடியாக இவர் பக்கத்திலிருந்து நீக்கப்படுவதுடன், அந்த ஐ.டி-கள் பிளாக் செய்யப்படுவதும் வழக்கம்.

தேர்வு

அந்த வகையில் சமீப காலமாக மருத்துவர் ராமதாஸ், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் "சுக்கா... மிளகா... சமூகநீதி?" எனும் தலைப்பில் தொடர் எழுதி வருகிறார். இதில் இதுவரை 50 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. பல்வேறு தலைப்புகளில் இந்த தொடர் எழுதப்பட்டு வருகிறது. இதை மையமாக வைத்தே கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளார்.

Also Read: செந்தில் பாலாஜிக்குப் புது `செக்', ராமதாஸ் சொன்ன அந்தத் தலைவர் யார்? - கழுகார் அப்டேட்ஸ்!

இந்த தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளார். மேலும், அதில் தொடரின் கருத்தை அனைவரும் உணரும் நோக்கில் இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு அத்தியாயங்கள் சேர்ந்தது ஒரு பாடத்தாள் என்று தேர்வுகள் நடத்தப்படுமாம். அதில், 20 கேள்விகள் கேட்கப்பட்டு ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு அதில் சரியான விடையைத் தேர்வு செய்ய வேண்டும். இது முழுவதும் இணையத்தில் நடத்தப்படும் என்றும் இதை, பா.ம.கவின் துணை அமைப்பான, "சமூக முன்னேற்ற சங்கம்" நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள்

மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்படுவர் எனவும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பா.ம.கவினர் மத்தியில் சற்று ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தினாலும், வரவேற்பையும் பெற்றுள்ளது. பொதுவாகவே ஒரு இயக்கத்தில் அல்லது கட்சியில் இருப்பவர்கள் அந்த அமைப்பின் நோக்கத்தையும் கொள்கையையும் உணராமல் கூட இருப்பார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் இது போன்ற இயக்கம் சார்ந்த தேர்வுகள் நடத்துவதன் மூலம் ஓரளவுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தெளிவடையச் செய்ய வாய்ப்புள்ளது. தேர்வின் முடிவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்!



source https://www.vikatan.com/news/politics/ramadoss-selects-party-executives-by-online-exams

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக