Ad

வியாழன், 1 ஏப்ரல், 2021

ஸ்டாலின் மட்டுமே குறி... அதிமுக-வை கண்டுகொள்ளாத கமல், சீமான்- பின்னணி என்ன?

மிகப்பெரிய ஆளுமைகள் இல்லாத முதல் தேர்தல்... புதியவர்கள் பலர் மோதிக்கொள்ளும் முதல் தேர்தல்... என ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு பல முக்கியத்துவங்கள் உண்டு. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஏற்கனவே 2016 சட்டமன்றத் தேர்தலை தனித்து சந்தித்துள்ளது. கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க-வும் 2019 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்துள்ளன. ஆனால், இதுதான் இரண்டு கட்சிகளுக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல்.

அ.தி.மு.க-வைத் தவிர மற்ற கூட்டணிகளுக்கு ஆட்சி மாற்றம் ஒன்றே குறியாக இருக்க முடியும். அப்படியென்றால், ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க செய்த குற்றம் குறைகளைப் பற்றிப் பேசித்தானே பிரசாரம் செய்ய வேண்டும். ஆனால், கமலும் சீமானும் தி.மு.க தலைவர் ஸ்டாலினைக் குறிவைத்துப் பேசுவதன் பின்னணி குறித்து அறிய, முதலில் நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பேசினோம்.

ஸ்டாலின் - சீமான்

``இரண்டாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து தனித்துக் களம் காண்கிறோம். தேர்தல் அரசியல் ரீதியாக பார்த்தால் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும்தான் போட்டி. அதுவே, கருத்தியல் ரீதியாகப் பார்த்தால் தி.மு.க-வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும்தான் போட்டியே. களத்தில் முதல் நிலையில் உள்ள தி.மு.க-வுக்கும், இரண்டாவது நிலையில் உள்ள அ.தி.மு.க-வுக்கும் தெற்கிலும், டெல்டாவிலும், வடக்கிலும், மேற்கிலும் மண்ணின் சூழ்நிலைக்கேற்ப போட்டி மாறுபடும். அதாவது, காங்கிரஸும் அ.தி.மு.க-வும் போட்டியிடும் தொகுதியில், அ.தி.மு.க காங்கிரஸ் வேட்பாளரையும், காங்கிரஸ் கட்சியையும் பற்றிதான் பேச முடியும். காங்கிரஸுக்கும் அதே நிலைதான். ஆனால், 234 தொகுதிகளிலும் முதல் நிலையில் இருக்கும் தி.மு.க-வை தாக்கக்கூடிய கட்சியாக மூன்றாம் இடத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சியால் மட்டுமே இருக்க முடியும்.

இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வை உண்மையாக யார் எதிர்க்கிறார்கள் என்பதுதான் முக்கியம். தி.மு.க அரசியலுக்காக மட்டுமே எதிர்க்கிறது, ஏற்கனவே பா.ஜ.க-வுடன் இருந்த கட்சி என்பதால் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் பா.ஜ.க-வுடன் செல்லாது என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை. பா.ஜ.க பக்கம் எக்காலத்திலும் செல்ல மாட்டோம் என்று ஸ்டாலினால் கூறவே முடியாது. அதுவே சீமானைப் பொறுத்தவரை பா.ஜ.க-வுடன் செல்லவே மாட்டேன் என அடித்துக்கூற முடியும்.

திருமாவளவன் ஆறு சீட்டுக்காக தி.மு.க-வுடன் ஐக்கியமாகிவிட்டார். ராமதாஸ் 23 சீட்டுக்காக அ.தி.மு.க-வுடன் சேர்ந்துவிட்டார். ஆனால், சிறுபான்மையினர்களுக்கு எந்தக் கட்சியிலும் கொடுக்காத அளவுக்கான சீட்களை பகிர்ந்தளித்திருக்கிறார் சீமான். பெண்களுக்கு சரி நிகரான அளவு தொகுதிகளைப் பிரித்துக்கொடுத்திருக்கிறார்.

திருவாரூர் சென்றபோது, ‘அன்றே நீங்கள் உஷாராக இருந்திருந்தால் தமிழகம் இத்தகைய சூழலைச் சந்தித்து இருக்காது’ என கருணாநிதியை மையமாக வைத்துப் பேசுகிறார். கருணாநிதி என்கிற ஆல மரத்திலிருந்து வந்த விழுதுகள்தான் இன்றைய தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் என்பதில் சீமான் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் தி.மு.க-வை மட்டுமே மையமாக வைத்துத் தாக்கி வருகிறார். அனைத்திந்திய அண்ணா என்ற இரண்டெழுத்துதான் கூடுதலாக இருக்கிறதே தவிர, காமராஜரின் வார்த்தையில் சொல்வதென்றால் இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

காமராஜரைப் பற்றி எவராலும் குறை சொல்ல முடியாது. அண்ணா இரண்டாண்டுகள்தான் ஆட்சியில் இருந்தார்; அதனால் அவரையும் சொல்ல முடியாது. அதன்பிறகு கருணாநிதிதான் பல ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரைத் தொடர்ந்து அங்கிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். இவ்வாறு இன்று நாடு சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு மூல காரணமான தி.மு.க-வைதான் விமர்சிக்க வேண்டும். ஏனெனில், அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, அதனால் அவர்களை அடித்தாலும் அடிக்காவிட்டாலும் ஒன்றுதான். ஆட்சிக்கு வரத்துடிக்கும் ஸ்டாலினை அடிப்பதே சரியான அரசியல். அதைத்தான் சீமான் செய்கிறார்” என முடித்தனர்.

கமல் -ஸ்டாலின்

கமல் தரப்பில் விசாரித்தபோது, ``கமலுக்கு ஜெயலலிதா மீதுதான் கோபம். அதன் காரணமாகத்தான் கட்சி தொடங்கியதில் இருந்து ஜெயலலிதாவின் கட்சியான அ.தி.மு.க-வையும், அமைச்சர்களையும் குறிவைத்துப் பேசிவந்தார். தற்போது சட்டமன்றத் தேர்தல் நடக்கப்போகிறது. இனி அ.தி.மு.க-வினால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. அதனால் செத்த பாம்பை அடிப்பது நாகரிகமல்ல.

ஆட்சிக்கு வரத்துடிக்கும் தி.மு.க-வை அடிக்கிறபோதுதான் வெளிச்சம் கிடைக்கும். முன்னேறிய மற்றும் இடைநிலை ஜாதிகள்தான் கமலுக்கான வாக்காளர்கள். முக்கியமாக ஜெயலலிதாவின் ஓட்டு வங்கியாக இருந்த முன்னேறிய சமூகத்தினரின் ஓட்டுக்களை தி.மு.க-வை விட்டு தன் பக்கம் திருப்ப வேண்டுமென்றால், அதற்கு தி.மு.க-வைத் தாக்குவதுதான் சரியான ஸ்ட்ராட்டஜி! ஆட்சிக்கு எதிரான வாக்குகளையும், அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்காக இருந்த வாக்குகளையும் கவர்வதற்கு தி.மு.க எதிர்ப்பு ஒன்றுதான் வழி என்பதால்தான் இதனை மேற்கொள்கிறார் கமல்” என்றனர்.

அரசியல் பார்வையாளர் ஒருவர் நம்மிடம்,``சீமானும், கமலும் தி.மு.க-வை மட்டும் குறிவைப்பதற்கான காரணம் சரியானதாகத்தான் தோன்றுகிறது. எனினும், டெல்லி பிக் பாஸின் பின்னணியில் இயக்கப்படும் கதை வசனத்துக்கு இவர்கள் நடிக்கிறார்களோ என்ற எண்ணமும் சிலரிடம் உண்டு. ஆனால் இதனை அவர்கள் இருவரும் சொன்னாலொழிய உண்மை வெளிவராது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kamal-seeman-only-target-is-stalin-why-not-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக