Ad

வியாழன், 1 ஏப்ரல், 2021

சென்னைப் பல்கலைக் கழகத்தில் சைவ சித்தாந்தப் படிப்பு நீக்கமா? - வாட்ஸ்அப் தகவலின் உண்மை என்ன?

சில நாள்களுக்கு முன்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் முதுகலை (எம். ஏ) சைவ சித்தாந்தம் பட்டப்படிப்பு நீக்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின. இதை சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தமிழ் மற்றும் ஆன்மிக ஆர்வலர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. சில அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விடுத்திருந்தனர்.

சைவ சித்தாந்தம்

இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி தொடர்பான ஓர் அறிக்கை வைரலானது. அந்த அறிக்கையில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் காரணத்தால் சென்னைப் பல்கலைக் கழகம் சைவ சித்தாந்தப் பாடப்பிரிவை நீக்குவதாகக் குறிப்பிட்டு அதற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வாட்ஸ்அப் செய்தியின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள சென்னைப் பல்கலைக் கழகத்தின் சைவ சித்தாந்தத் துறைத் தலைவர் நல்லூர் சரவணனிடம் பேசினோம். வாட்ஸ்அப் தகவலை முற்றிலும் மறுத்த சரவணன், இது பல்கலைக்கழகத்திலிருந்து வெளியான அறிக்கையைத் தவறாகப் புரிந்துகொண்டதால் ஏற்பட்ட விளைவு என்று கூறினார். மேலும் இதுகுறித்த விரிவான தகவல்களைத் தருமாறு அவரிடம் கேட்டோம்.

"இப்போது இருக்கும் பாடத்திட்டமானது, 'முதுகலை சைவசித்தாந்தவியல் சிறப்புப் புலத்துடன் கூடிய சமயம் மற்றும் மெய்ப்பொருள் ஒப்பியல்' என்பதாகும். இந்தப் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை என்பது குறைவாக உள்ளது என்பது சரிதான். ஆனால் அதற்காக அதை நீக்கும் எந்த முடிவையும் பல்கலைக்கழகம் எடுக்கவில்லை. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை பாடத்திட்டத்தில் மாற்றங்களைச் செய்வது பல்கலைக்கழக நடைமுறையில் வழக்கமானதுதான். எனவே பழைய பாடத்திட்டத்தைச் சிறிது மாற்றி அதைவிட அதிகத் தரமான பாடத்திட்டமாக உருவாக்கி வரைவு செய்தோம் அவ்வளவுதான்.

சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்தத்தில் இருக்கும் விரிவான பகுதிகளுக்கு ஏற்பப் புதிய பாடங்களை உருவாக்கினோம். ஏற்கெனவே இருக்கும் பாடத்தோடு கூடுதலாக ஐந்து பாடத்திட்டங்களை வரையறை செய்துள்ளோம்.

Also Read: மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 11: நரசிங்கம்பட்டி சித்திரச்சாவடியும் ஈமக்காடும் ஏமக்கோயிலும்!

1. முதுகலை - மெய்ப்பொருளியலும் பயிற்சியும்

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. கால அளவு : இரண்டு ஆண்டுகள்

2. முதுகலை பட்டயம் - பெரியபுராண ஆய்வுகள்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டம் அல்லது சைவ சித்தாந்தத்தில் பட்டயம்

3. பட்டயம் - சைவசித்தாந்தம்

கல்வித் தகுதி: சைவ சித்தாந்தத்தில் சான்றிதழ் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

நல்லூர் சரவணன்

4. சான்றிதழ் - சைவ சித்தாந்தம்

கல்வித் தகுதி: மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான கல்வி

5. முதுகலை - தனி நிலை மேற்கண்ட படிப்புகளுடன் உலக அளவில் பயிலத்தக்க வகையில் பயன்முறை சைவ சித்தாந்தம் என்னும் முதுகலை - தனிநிலைப் படிப்பு (Applied Saiva Siddhantha - private study)

மேற்கூறிய ஐந்து புதிய பாடப்பிரிவுகளும் 2021 - 2022 கல்வியாண்டில் தொடங்கப்பட இருக்கின்றன. இவற்றுக்கான திட்ட வரைவு ஒப்புதல் பெற்று அமுலுக்கு வந்துள்ளது. இதுதான் தவறுதலாகப் புரிந்துகொள்ளப் பட்டுவிட்டது. இப்போது நிகழ்ந்திருப்பது பாடத்திட்ட மாற்றம் தானே தவிர பாடத்திட்ட நீக்கம் கிடையாது.

புதிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்புகள் விரைவில் ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும். மாணவர்கள் அதில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயன் அடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.



source https://www.vikatan.com/news/education/factcheck-about-saiva-siddhantha-course-cancellation-in-madras-university

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக