Ad

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

விவசாயத்தை தமிழ் சினிமாகிட்ட இருந்து யாராவது காப்பாத்துங்களேன் ப்ளீஸ்! `சுல்தான்' +/- ரிப்போர்ட்!

நூறு ரவுடிகளின் கூடாரமாக இருக்கும் வீட்டில் ரோபாட்டிக்ஸ் படித்த சுல்தான் (எ) விக்ரம் மும்பையில் இருந்து ஒரு பீம்பாயோடு வந்திறங்குகிறார். போலீஸ் தாக்குதல், தந்தை மரணம், ரெடியாகும் என்கவுன்ட்டர் லிஸ்ட் என அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களால் சேலம் அருகே ஒரு கிராமத்துக்கு 100 பேரோடு பயணிக்கிறார் சுல்தான். அமைதியை விரும்பிப்போன இடத்தில் அட்ராசிட்டிகள் நடக்க, கொதித்தெழும் 'சுல்தான்' வில்லன்களை எப்படி சுளுக்கெடுக்கிறார் என்பதே மீதி கதை. கூட நூறு பேர் இருந்தாலும் 'சுல்தான்' தனியாகக் களமிறங்கி சம்பவங்கள் செய்வதே படத்தின் ஹைலைட்! இடையில் இந்த காதல், விவசாயம், மக்கள் நலன், கார்ப்பரேட் வில்லன் என இன்னபிற அயிட்டங்களை தேவையைவிடவும் அதிகமாக கலந்துகட்டி தூவியிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் அடக்கி வாசித்துவிட்டு, பின்னர் சுளிர் சாட்டையாக அனல் வீசும் பாத்திரத்தில் கார்த்தி! வழக்கமான கலாய் உடல்மொழி, சீரியஸ் ஆக்ஷன் அவதாரம் என ஸ்கோர் செய்திருக்கிறார். படம் முழுக்கவே அவரின் பாத்திரமும் அதனின் எமோஷன்களுடனும்தான் நம்மால் ஒன்றிப்போக முடிகிறது. படத்தின் பலம், பலவீனம் இரண்டுமே அதுதான். ராஷ்மிகா மந்தனாவுக்குத் தமிழில் அறிமுகப் படம். சொல்லிக்கொள்ளும் படியான அறிமுகம் இது இல்லை.

சுல்தான்

ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட்களை ஃப்ரேமுக்குள் கொண்டுவந்து அவர்களுக்கான வெளியை உருவாக்கி நாம் கவனிக்கும் வகையில் படத்தை நகர்த்துவதில் பாக்கியராஜ் கண்ணனுக்கு வெற்றியே! ஆனால், அதனாலேயே படத்தின் நீளம் பொறுமையைச் சோதிக்கிறது. நெப்போலியன், லால், பொன்வண்ணன், சிங்கம்புலி, யோகி பாபு, சதீஷ், ஹரீஷ் பரேடி, எம்.எஸ்.பாஸ்கர் என ஒரு பட்டாளமே நடித்திருக்கிறது, ஆனால் ஒரு சில பாத்திரங்கள் தவிர வேறு யாருக்கும் பெரிய வேலையில்லை. திரையில் சில காட்சிகள் வந்து போயிருக்கிறார்கள், அவ்வளவே!

காவல்துறை, செல்போன், கிராம அலுவலர்கள், லாஜிக் என எதுவுமே இல்லாத கற்கால கிராமத்தில் நிகழ்கிறது கதை. கமர்ஷியல் படம்தான் என்றாலும் மருந்துக்குக் கூட நம்பும்படியான நிகழ்வுகள் இல்லாதது திரைக்கதையின் பெரிய குறை. மாஸ் மசாலா தெலுங்குப் படம்தான். ஆனால் தெலுங்கிலேயே ஐந்து வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய அந்தக் கால ஸ்கிரிப்ட் இது! அப்டேட் ஆகுங்க மக்கா!

'தேவர் மகன்' தந்தை - மகன் சென்ட்டிமென்ட், 'மைக்கேல் மதன காமராஜன்' பீம் கேரக்டர், 'விருமாண்டி'யின் உட்பூசல்கள் என மொத்தப் படமும் ஏதோ கமலுக்குக் கொடுத்த ட்ரிப்யூட் போலவே இருக்கிறது. 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' படத்தின் விவசாயப் போட்டி போர்ஷன் வேறு கண் முன்னே வந்து போகிறது.

சுல்தான்

பக்கா ஆக்ஷன் மசாலா கதை என்றாலும் ஓவர்டோஸாக விரியும் தேவையற்ற காட்சிகளுடன் நம்மை டயர்டாக்குகிறது திரைக்கதை. மசாலா என்றானபின், எமோஷன்களை கடத்தும் பலமான காட்சியமைப்புகள் இல்லாதது பெரிய சறுக்கல். படம் ஏதோ ஆந்திர கிராமத்தில் நடப்பதுபோலவே இருப்பது நம்மை அந்நியப்படுத்துகிறது. அதிலும் யோகி பாபு, சதீஷ் என இரண்டு பேர் இருந்தும் காமெடி கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்போல! கிராமத்து மனிதர்கள், அவர்களின் பிரச்னைகள் என எதிலுமே யதார்த்தமில்லை.

முதல் பாதியிலேயே கிட்டத்தட்டக் கதை முடிந்துதான் இடைவேளை வருகிறது. அதன்பின் நடப்பதெல்லாம் ஏற்கெனவே ரிசல்ட் முடிவாகிவிட்ட டெஸ்ட் மேட்சின் கடைசி இன்னிங்ஸ் போலச் சுவாரஸ்யமில்லாமல் நகர்கிறது. அதிக மெனக்கெடாமல் நாமே சுலபமாக அடுத்து என்ன என்று யூகிக்க முடிந்த அளவுக்கு இருக்கும் வலுவில்லாத காட்சியமைப்புகள் இரண்டாம் பாதியை ரசிக்கவிடாமல் செய்கின்றன.

சுல்தான்

யுவனின் பின்னணி இசை தியேட்டர்களை அதிரச் செய்கிறது. பார்வையாளர்கள் தோயும்போதெல்லாம் சட்டென இழுத்துப் பிடித்து நிறுத்துகிறது. ஆனால் விவேக் - மெர்வினின் பாடல்கள் எல்லாமே அந்த நேரத்தில் கேட்டுவிட்டு அப்படியே மறந்துவிடும் ரகம். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு பொட்டல் கிராமத்தையும் சண்டைக் காட்சிகளையும் அசத்தலாகக் காட்சிப்படுத்தியிருந்தாலும், ரூபன் இன்னும் கொஞ்சம் வெட்டித் தூக்கியிருக்கலாம்.

வில்லனுக்கான பின்கதை பற்றாக்குறையினால் இன்னும் எத்தனை எத்தனை படங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளை முழுக்க முழுக்க வில்லனாகச் சித்திரித்து வரப்போகின்றனவோ? அதுவும் எல்லாப் படங்களிலும் அந்தக் கார்ப்பரேட் கம்பெனி முதலாளியே இறங்கிவந்து ஹீரோவுடன் மல்லுக்கட்டுவது எல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும் உல்லுல்லாயி. கூடவே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டான விவசாய அரசியல் புரியாத 'விவசாயி வாழ்க' டெம்ப்ளேட் காட்சிகள் வேறு சலிப்பை ஏற்படுத்துகின்றன. தமிழ் சினிமா விரைவில் வேறு டிரெண்டைப் பிடிக்கவேண்டும்.

மசாலா என்றாலும் மாத்தி யோசித்திருக்கலாம் இந்த 'சுல்தான்'!



source https://cinema.vikatan.com/tamil-cinema/karthi-and-rashmika-mandanna-starrer-sulthan-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக