Ad

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

`80 தொகுதிகள்'... அதிமுக கூட்டணியின் வெற்றியைத் தடுக்கிறதா அமமுக கூட்டணி?TNElection2021

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்கள்தான் இருக்கின்றன. தேர்தல் பிரசாரம் வரும் ஞாயிறு மாலை 7 மணியோடு முடிவடைவதால் தலைவர்கள் மிகத் தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிப் பிரமுகர்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் மிகத் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். மறுபுறம் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் கடந்த சில நாள்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதில் பெரும்பாலானவற்றில் எதிர்க்கட்சியான தி.மு.க-வுக்கே சாதகமாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது. தவிர, அதில் பல அதிர்ச்சியான, புதுமையான தகவல்களும் காணக் கிடைக்கின்றன.

உதாரணமாக, தென் மாவட்டங்களில் பல இடங்களிலும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் அ.ம.மு.கவின் வாக்குப்பிரிப்பால் அ.தி.மு.க பல தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க-வுக்குச் செல்லவேண்டிய வாக்குகளைத்தான் அ.ம.மு.க பிரித்தது. ஆனால், ஒன்றிரண்டு இடங்களில்தான் அது அ.தி.மு.கவின் வெற்றி வாய்ப்பைப் பாதித்தது.

புதிய தலைமுறை சர்வே முடிவுகள்

உதாரணமாக, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்ற வாக்குகளுக்கும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சந்திரசேகர் பெற்ற வாக்குகளுக்கும் இடையில் வெறும் 3,190 வாக்குகள்தான் வித்தியாசம். ஆனால், அந்தத் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட இளவரசன் 60,000-க்கும் மேலான வாக்குகளைப் பெற்றிருந்தார். அதேபோல, ராமநாதரபும் தொகுதியில் வெற்றிபெற்ற தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கும் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1,27,122. ஆனால், அந்தத் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட வ.து.ந.ஆனந்த் பெற்ற வாக்குகள் 1,41,806.

அதேபோல, 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க - அ.ம.மு.க-வின் வாக்குகளைச் சேர்த்தால் அது வெற்றிபெற்ற தி.மு.க வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளைவிட அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில், அ.ம.மு.க மட்டுமல்லாமல் தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ, ஓவைசியின் கட்சி ஆகியவையும் இணைந்திருப்பதால் கிட்டத்தட்ட 80 தொகுதிகளுக்கும் மேல், அ.ம.மு.க கூட்டணியின் வாக்குப் பிரிப்பால், அ.தி.மு.க கூட்டணி வெற்றிவாய்ப்பை இழப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அவை, கோவில்பட்டி, காரைக்குடி, உசிலம்பட்டி, ஶ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், திருச்சுழி, பரமக்குடி, திருவாடனை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், திண்டுக்கல், வேடசந்தூர், கந்தர்வக்கோட்டை, விராலிமலை, திருமயம் ,ஆலங்குடி.

விஜயகாந்த் - தினகரன்

அறந்தாங்கி, வேதாரண்யம், பூம்புகார், மன்னார்குடி, திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஶ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், அரியலூர், கெங்கவல்லி, ஆத்தூர், சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், தாராபுரம், மடத்துக்குளம், திருப்பூர் தெற்கு, ஈரோடு மேற்கு, அந்தியூர், கூடலூர், விருத்தாச்சலம், புவனகிரி, செஞ்சி, மயிலம், வாணியம்பாடி, குடியாத்தம், உத்திரமேரூர். தாம்பரம், செங்கல்பட்டு, சைதாப்பேட்டை, மதுரவாயல் ஆகிய எண்பது தொகுதிகளில் அ.ம.மு.க கூட்டணியால் அ.தி.மு.க கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கலாம் என்பதே பெருவாரியான கருத்துககணிப்புகளின் வாயிலாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

இதுகுறித்துப் பேசும் அ.ம.மு.க நிர்வாகிகள், `` 80 தொகுதிகள் இல்லை. கிட்டத்தட்ட நூறு தொகுதிகளில் எங்களால் அ.தி.மு.க கூட்டணி வெற்றி வாய்ப்பை இழப்பது மட்டுமல்ல, நாங்களே பல இடங்களில் வெல்லவும் வாய்ப்பிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது அது உங்களுக்குத் தெரியவரும்'' என்கிறார்கள் அதிரடியாக.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கணபதியிடம் பேசினோம்,

``நிச்சயமாக, அ.தி.மு.கவின் வெற்றிவாய்ப்பில் அ.ம.மு.க பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். காரணம், அ.தி.மு.கவில் எம்.பி, எம்.எல்.ஏவாக இருந்தவர்கள், முக்கியப் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்தான் அ.ம.மு.கவில் தற்போது போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கு அதிகம். அவர்கள் அனைவரும் அ.தி.மு.கவின் வாக்குகளைத்தான் பிரிப்பார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பாக, நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க பெற்ற வாக்குகள் குறித்து ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்தது. அதில், கிட்டத்தட்ட 22 சட்டமன்றத் தொகுதிகளில் பத்து சதவிகிதத்துக்கும் மேலான வாக்குகளும் 11 தொகுதிகளில் 8-10 சதவிகித வாக்குகளை அ.ம.மு.க பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கணபதி

ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால்தான் இவ்வளவு காலம் அ.தி.மு.கவில் இருந்தவர்கள் பலமானவர்களாகத் தெரிந்தார்கள். ஆனால், தற்போது தேர்தல் களத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களும் அ.ம.மு.க வேட்பாளர்களும் சமமான அளவில்தான் பார்க்கப்படுகிறார்கள். அதனால், குறிப்பிட்ட தொகுதிகளில் அ.ம.மு.க வெல்வதற்கும் சில தொகுதிகளில் இரண்டாம் இடத்துக்கு வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல, பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில், அ.தி.மு.கவினர் பா.ஜ.கவுக்கு வாக்களிப்பதைவிட, அ.ம.மு.கவுக்கு வாக்களிக்கவே வாய்ப்புகள் அதிகம். அதனால், அ.ம.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணிக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை உண்டாகும். தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் பெரிய தவறைச் செய்துவிட்டோம் என அ.தி.மு.க தலைமையை உணரச் செய்யும்.

Also Read: அ.ம.மு.க - தே.மு.தி.க கூட்டணியால் பாதிப்பு எந்த அணிக்கு? #TNElection2021

அதுமட்டுமல்ல, சசிகலா கோவிலுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் அந்தப்பகுதி அ.ம.மு.க வேட்பாளர்கள் அவரைச் சென்று சந்திக்கிறார்கள் அது லோக்கல் பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளியாகிறது. ஏறக்குறைய அ.ம.மு.க வேட்பாளர்களை ஆதரிப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தைத்தான் அது உருவாக்குகிறது. அதுவும் அ.ம.மு.க கூட்டணிக்கு கூடுதல் வலிமையைக் கொடுக்கும். அதனால், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய தென்மாவட்டங்களில் அ.தி.மு.கவின் தோல்விக்கு அ.ம.மு.க மட்டுமே ஒரே காரணமாக இருக்கும்'' என்கிறார் அவர்.

சிவசங்கரி

மேற்கண்ட விஷயங்கள் குறித்து, அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர், சிவசங்கரியிடம் பேசினோம்,

``2016-ம் ஆண்டிலும் இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் வந்தன. ஆனால், அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியின் மீது பெரிய அதிருப்தி எதுவும் இல்லை. தவிர, வெள்ளம், புயல், கொரோனா காலகட்டங்களில் மக்களுக்குத் துணையாக இருந்திருக்கிறோம். பாராளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் என்பது வேறு. தவிர, பாராளுமன்றத் தேர்தலிலேயே அ.ம.மு.கவுக்கு பல பூத்களில் பெரியளவில் வாக்குகள் விழவில்லை. சில தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அப்போது அவருடன் இருந்த பல மண்டலப் பொறுப்பாளர்கள் தனிப்பட்ட செல்வாக்கு உடையவர்கள். அதனால்தான் அவர்களுக்கு குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் கிடைத்தது. ஆனால், அவர்களில் 85 சதவிகிதம் பேர் மீண்டும் எங்களுடன் வந்து இணைந்து விட்டார்கள். ரெங்கசாமி, பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், செந்தமிழன் போன்ற ஒருசிலர்தான் அ.ம.மு.கவில் இருக்கிறார்கள். அதனால், இந்தத் தேர்தலில், அ.ம.மு.கவுக்கு அதிக வாக்குகள் விழாது. அ.ம.மு.கவின் வாக்குவங்கி எங்களின் வெற்றியை ஒருபோதும் பாதிக்காது'' என அடித்துச் சொல்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ammk-blocking-the-victory-of-the-aiadmk-alliance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக