Ad

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

குமரி: எம்.எல்.ஏ-வின் கட்சி பதவி பறிப்பு! - தேர்தல் முடிந்ததும் அதிரடி காட்டிய காங்கிரஸ்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராஜேஷ்குமார். இவர் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். நேற்று நடந்த சட்டசபை தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். நேற்று தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்த நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதலோடு, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பரிந்துரையின்பேரில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தாரகை கட்பர்ட், சேலம் மாநகர் மாவட்ட தலைவராக ஏ.பி.பாஸ்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக கே.ஜி.ரமேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்" என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த கையோடு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவராக செயல்பட்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ அதிரடியாக நீக்கப்பட்டு தாரகை கட்பர்ட் நியமிக்கப்பட்டது தொண்டர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தாரகை கட்பர்ட்

இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களில் தீவிரமாக செயல்பட்டவர் ராஜேஷ்குமார். 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸில் கிள்ளியூர் தொகுதி ராஜேஷ்குமாருக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றார் ராஜேஷ்குமார். அதன் பிறகு 2017-ல் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார். மாவட்ட தலைவராகவும், எம்.எல்.ஏ-வாகவும் சிறப்பாக செயல்பட்டுவந்த நிலையில் ராஜேஷ்குமார் மாற்றப்பட்டுள்ளார்.

இப்போது குமரி மேற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தாரகை கட்பர்ட்டின் பூர்வீகம் குமரி மேற்குமாவட்டத்தின் இனயம் மீனவர் கிராமம். ஆனால் அவர் இப்போது குமரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவிலில் வசித்துவருகிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்துவந்தார் தாரகை கட்பர்ட். இந்த நிலையில் அவர் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒரு பெண் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்கிறார்கள். தாரகை கட்பர்ட் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர் எனது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் காங்கிரஸுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள். எனவே மீனவர் ஒருவருக்கு எம்.எல்.ஏ, அல்லது எம்.பி சீட் கேட்டு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த தேர்தலிலும் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. இது அகில இந்திய காங்கிரஸ் தலையின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. இந்த நியமனம் மாநில தலைமையின் கவனத்துக்கு கடைசி வரை தெரியவில்லை. மற்றபடி ராஜேஷ்குமார் மீது எந்த அதிருப்தியும் இல்லை. தாரகை கட்பர்ட் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டதால் மீனவர் சமூகத்தை சமாதாபடுத்தியதுடன், மகளிருக்கும் முன்னுரிமை கொடுத்துபோன்று அமைந்துள்ளது" என்றார்.

இந்த நியமனம் ராஜேஷ்குமாருக்கு அதிர்ச்சியையும், தாரகை கட்பர்ட்டுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. இருவருக்குமே தமிழக தலைமை அறிவிப்பு வெளியான பிறகே இந்த தகவல் தெரியவந்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/congress-mla-removed-from-district-party-leader-position

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக