இன்றைய கராத்தே கலையின் பிறப்பிடமான ஜப்பானின் ஒகினவா தீவுகளுக்கு மருத்துவ உலகில் அதைவிட ஒரு பெரிய சிறப்பு இருக்கிறது. அதுவும் கராத்தே கலையைப் போலவே எதிரியை வென்று மேலெழுந்த வரலாறு!
இயற்கை அழகும், தெளிந்த நீலநிறக் கடலும், ருசியான மீன்களும் கிடைக்கும் ஜப்பானின் 'ஹவாய்' தீவுகள் என்று அழைக்கப்படும் இந்த ஒகினவா தீவுகள்தான், இரண்டாம் உலகப்போரின் போது, மிக அதிகமாக சேதமடைந்த பகுதியும் கூட!
1943-ம் ஆண்டு, அமெரிக்கத் தாக்குதலால் இந்தத் தீவுகளில் ஏற்பட்ட மரணங்கள் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமாம். வலிமிகுந்த அந்த ஒகினவா போரில் சண்டையிட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையைப் போலவே, அணுகுண்டின் கதிர்வீச்சு பாதிப்பு மற்றும் பயத்தின் காரணமாகத் தற்கொலை செய்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், சில முற்றுப்புள்ளிகள் பல தொடக்கப்புள்ளிகளாக மீண்டெழுவது, ஒகினவா தீவுகளிலும் நிகழ்ந்தது.
ஆம்...
அத்தகைய பேரிழப்புக்குப் பிறகு, அந்தத் தீவுகளில் உயிர்பிழைத்த குறைந்தபட்ச மக்களின் ஆயுட்காலம் மட்டும், ஜப்பானின் மற்றப் பகுதிமக்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. நூறு வயதைத் தாண்டி முதுமையிலும் ஆரோக்கியமாய் வாழும் ஒகினவா மக்களின் ரகசியத்தை அறிய பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டபோதுதான், அதன் ரகசியம் கண்டறியப்பட்டு அது 'ஒகினவா மிராக்கிள்' என்று உலகெங்கும் பிரபலமடைந்தது.
ரயில்கள் உட்பட எந்தவொரு போக்குவரத்து வசதியும் இல்லாத அந்த ஒகினவா தீவுகளில் நடப்பது, சைக்கிளிங், படகோட்டுவது ஆகிய மூன்று மட்டுமே ஆரம்ப நாட்களில் அவர்களது பயணத்திற்கு உதவியிருக்கிறது. அங்கு விளைந்த அரிசி மற்றும் காய்கனிகளை நம்மைப் போல் அல்லாமல் ஒருநாளில் ஐந்து முதல் ஏழு முறை வரை, சிறிய அளவுகளில் அத்தீவு மக்கள் உட்கொண்டார்களாம். அவர்களது உணவு மேஜையில் 'eating the rainbow' அதாவது மிளகு, கீரை, செர்ரி, கத்தரிக்காய், சோயா, பழங்கள் என ஏழு நிற உணவினையும், வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறையாவது மீன் உணவினையும் உட்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர்களது உணவில் உப்பின் அளவு குறைவாகவும், சர்க்கரை அளவு முற்றிலும் இல்லாமலிருந்ததும் கண்டறியப்பட்டது.
ஆக, இயற்கையாகவே அமைந்த குறைந்த கலோரிகள் கொண்ட நிறைவான உணவும், வசதிகள் இல்லாத நிலையில் அவர்களின் போக்குவரத்தே உடற்பயிற்சியும், நடைபயிற்சியுமாய் மாறி அவர்களது ஆயுட்காலத்தை பெருமளவு அதிகரித்தது என்று ஆய்வுகள் சொல்கின்றன. தற்சமயம் 'ஒகினவா மிராக்கிள் டயட்' என்ற ஆரோக்கிய உணவுமுறை உலகெங்கும் பின்பற்றப்படுகிறது.
இந்த ஒகினவா மிராக்கிள் நமக்குக் கற்றுத் தரும் பாடம் மிக மிக முக்கியமானது. ஒகினவா போரைக் காட்டிலும், மிகப்பெரிய போரான கண்ணுக்குத் தெரியாத கொரோனா எனும் நுண்கிருமியுடன் உலகத்தினர் அனைவரும் போராடிவரும் இந்த வேளையில், ஒகினவா மக்களின் மன வலிமையும், ஆரோக்கியப் பழக்கவழக்கங்களும் நமக்கு நிரூபிக்கப்பட்ட புதியதொரு பாதையைக் காட்டுகிறது என்பதே உண்மை.
இன்று, ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்...
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் கொண்டாடப்படுவதுடன், இந்த ஆண்டு (Health Equity and Equality) 'அனைவருக்கும் சுகாதாரத்தில் சமபங்கும், சமத்துவமும்' நிறைந்திருக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு!
அதற்கு ஒகினவா மக்களைப் போலவே, மனித வளங்களை ஆரோக்கியப்படுத்தி, அந்தந்த நாட்டின் வளத்தையும், அதன் மூலமாக உலக வளத்தையும் பெருக்கிவிடவேண்டும் என்பதும் புரிபடுகிறது. ஏனெனில், உடல் மற்றும் மன நலத்துடன் வாழும் ஒகினவோ மிராக்கிள் தாம் நம் ஒவ்வொருவரின் தேவையும் கூட!
source https://www.vikatan.com/health/food/details-about-okinawa-miracle-diet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக